ஏழைகளின் நல்லரசா? ஏமாற்றும் விளம்பரமா? ஒன்றிய பாஜக அரசின் 8 கூற்றுகளும் - உடைபடும் பிம்பங்களும்!
11 Mar 2026, 3:52 pm

ஏழைகளின் நல்லரசா? ஏமாற்றும் விளம்பரமா? ஒன்றிய பாஜக அரசின் 8 கூற்றுகளும் - உடைபடும் பிம்பங்களும்!

1குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு: தமிழக மகளிருக்கு மோடி அரசு தந்தது என்ன? விளம்பரக் கூற்று: 1.1 கோடிக்கும் அதிகமான குடிநீர் குழாய் இணைப்புகள் + 41 லட்சத்திற்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் தமிழகப் பெண்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது.

உண்மை விபரம்: 1.1 கோடி என்பது தமிழ கத்தில் தற்போதுள்ள மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை. 2019-இல் ‘ஜல் ஜீவன்’ (JJM) திட்டம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் 21.76 லட்சம் இணைப்புகள் இருந்தன. உண்மையில் வழங்கப்பட்ட புதிய இணைப்புகள் சுமார் 89 லட்சம் மட்டுமே. இதில் 55% செலவைத் தமிழக அரசே ஏற்கிறது. ஆனால், ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ₹3,112 கோடி நிதியை முடக்கி வைத்துள்ளதால், 12 முக்கிய கூட்டு குடிநீர் திட்டங்கள் தற்போது தடையின்றிச் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. அதேபோல, சமையல் எரிவாயு இணைப்பு களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 2006-லேயே ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கிவிட்டது.

உஜ்வாலா வருவதற்கு ஒரு பத்தாண்டு முன்பே தமிழகத்தில் 70% எரிவாயு ஊடுருவல் இருந்தது. இன்று சிலிண்டர் விலை ₹1000-ஐத் தாண்டிய தால், உஜ்வாலா பயனாளிகள் ஆண்டுக்குச் சராசரியாக 2 சிலிண்டர் மட்டுமே நிரப்புகிறார்கள் என சி.ஏ.ஜி (CAG) அறிக்கை கூறுகிறது. 42% இணைப்புகள் பயன்பாட்டிலேயே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. 2பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: அனுமதிக்கும் எண்ணிக்கை சாதனையாகுமா? விளம்பரக் கூற்று: 14 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளியோரின் சொந்த வீடு கனவு நனவாகியது. உண்மை விபரம்: 14 லட்சம் என்பது ‘அனு மதிக்கப்பட்ட’ வீடுகளின் எண்ணிக்கை மட்டுமே.

ஜூலை 2024 நாடாளுமன்றத் தரவுகளின்படி கட்டி முடிக்கப்பட்டது சுமார் 12.7 லட்சம் வீடுகள் மட்டுமே. நகர்ப்புற வீடுகளுக்கு ஒன்றிய அரசு வெறும் ₹1.5 லட்சம் மட்டுமே தருகிறது. 1971-லேயே குடிசை மாற்று வாரியத்தைத் தொடங்கி, இன்று ‘கலைஞர் கனவு இல்லம்’ மூலம் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைத் தனது முழு நிதியில் கட்டி வரும் தமிழக அரசின் வரலாற்றை இந்த விளம்பரம் மூடி மறைக்கிறது. 3சௌபாக்யா: 2,170 இணைப்புகளைக் கொடுத்துவிட்டு 100% சாதனை என்பதா? விளம்பரக் கூற்று: சௌபாக்யா திட்டத்தின் கீழ் 100% வீடுகள் மின்மயமாக்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கிடைத்துள்ளது. உண்மை விபரம்: இதுதான் மிகப்பெரிய பித்தலாட்டம். சௌபாக்யா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வழங்கப்பட்ட இணைப்புகள் வெறும் 2,170 மட்டுமே! தமிழ்நாடு 1960-களிலேயே மின்மயமாக்கலில் புரட்சி செய்து, 2011-லேயே 93.4% வீடுகளில் மின்சாரத்தை உறுதி செய்துவிட்டது.

1.25 கோடி வீடுகளைத் தனது உழைப்பில் மின்மயமாக்கிய தமிழகத்தின் சாதனையை, வெறும் 2,170 இணைப்புகளைக் கொடுத்துவிட்டு மோடி அரசு ‘100% சாதனை’ என்று சொந்தம் கொண்டாடுகிறது. 4இலவச உணவு தானியம்: 7 கோடி பேருக்கு உணவிடும் தமிழ்நாடு! விளம்பரக் கூற்று: தமிழ்நாட்டிலுள்ள 3.6 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் இலவச உணவு தானியங்களைப் பெற்றுள்ளனர். உண்மை விபரம்: தமிழ்நாடு 1997-லேயே ‘அனைவருக்கும் பொது விநியோக முறையை’ அமல்படுத்தி, இன்று 7 கோடி பயனாளிகளுக்கு உணவு வழங்குகிறது. ஒன்றிய அரசு 3.6 கோடி பேருக்கு மட்டுமே நிதி தருகிறது; மீதமுள்ள 3.4 கோடி பேருக்குத் தமிழக அரசே தனது முழு நிதியில் உணவிடுகிறது.

2011-லேயே தமிழகத்தில் இலவச அரிசித் திட்டம் தொடங்கிவிட்டது. மோடி அரசுத் திட்டம் 2020-ல் தான் வந்தது. 5ஜன் தன் வங்கி கணக்குகள்: வெற்று எண்களின் மாயாஜாலம்! விளம்பரக் கூற்று: 1.8 கோடிக்கும் அதிகமான ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு நிதி சார்ந்த மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன. உண்மை விபரம்: தமிழ்நாடு ஏற்கெனவே வங்கிமயமாக்கலில் இந்தியாவின் முன்னணி மாநிலம். ஜன் தன் தொடங்கும் முன்பே சுய உதவிக் குழுக்கள் மூலம் நிதி உள்ளடக்கம் இங்கே வலுவாக இருந்தது. தமிழகத்தில் உள்ள ஜன் தன் கணக்குகளில் சுமார் 27.9% செயல்பாட்டில் இல்லை (Oxfam ஆய்வு). குறைந்தபட்ச இருப்பு இல்லாத 48 லட்சம் உறங்கும் கணக்குகளைச் சாதனையாகக் காட்டுவது வெறும் கண்துடைப்பு. 6 பிரதம மந்திரி ஜீவன் ஜோதி காப்பீடு: திரட்டல் மோசடி! விளம்பரக் கூற்று: பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர். உண்மை விபரம்: இவை ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் திட்டங்கள். ஒவ்வொரு முறை புதுப்பிக்கும்போதும் புதிய எண்ணிக்கையாகக் கணக்கிட்டுப் பெரிய அளவில் காட்டுகிறார்கள். உண்மையில் செயலில் உள்ள காப்பீடுகள் விளம்பரம் கூறும் எண்ணிக்கையில் பாதியே! 7 விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுஷ்மான் பாரத்: மாநிலத் திட்டத்தின் நிழலில்… விளம்பரக் கூற்று: பிரதமரின் சுரக்சா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.5 கோடி பேரும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 51 லட்சம் பேரும் நிதிப் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். உண்மை விபரம்: இதிலும் திரட்டப்பட்டு காட்டப்படும் எண்களின் மாயாஜாலம் உள்ளது. மிக முக்கியமாக, தமிழகத்தின் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) 2009-லேயே தொட ங்கிவிட்டது - இது ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத்தை விட இருமடங்கு பெரியது; அதிகக் குடும்பங்களை உள்ளடக்கியது.

51 லட்சம் என்பது சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே, நிதிப் பயனாளிகள் எண்ணிக்கை அல்ல. 8தெருவோர வியாபாரிகள் கடன் (PM SVANidhi) விளம்பரக் கூற்று: 4 லட்சத்திற்கும் அதிகமான சாலையோர வியாபாரிகளுக்கு 1,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் வழங்கப்பட்டு வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. உண்மை விபரம்: 4 லட்சம் வியாபாரிகளுக்கு ₹1,000 கோடி என்றால், ஒரு வியாபாரிக்குக் கிடைக்கும் சராசரி கடன் வெறும் ₹25,000 மட்டுமே. இது ஒரு சிறிய முதலீடு மட்டுமே, ‘வாழ்வாதாரம் மற்றும் சுயசார்பு மேம்பாடு’ என்று கூறுவது மிகைப்படுத்தல். மேலும், தமிழகத்தில் இக்கடன் பெறுவதற்கு 60 நாட்களுக்கும் மேலாகிறது என்பதுதான் கள யதார்த்தம். விளம்பரம் மறைக்கும் மிகப்பெரும் நிதி வஞ்சனை ஒருபுறம் சாதனைகளைப் பேசும் ஒன்றிய அரசு, மறுபுறம் தமிழகத்தின் உரிமைகளைத் திட்டமிட்டு முடக்கி வைத்துள்ளது: வேலைவாய்ப்புத் திட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர் களின் கூலி நிலுவை சுமார் ₹1,246 கோடி. கல்வி நிதி: இந்தித் திணிப்பை ஏற்காததால், தமிழகத்திற்கு வரவேண்டிய ₹2,152 கோடி கல்வி நிதி நிறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் நிவாரணம்: புயல் பாதிப்புகளுக்குத் தமிழகம் கோரிய ₹37,907 கோடியில் கிடைத்தது வெறும் ₹276 கோடி மட்டுமே. மொத்தத்தில் மோடி அரசு வெளியிட்டு வரும் இந்த விளம்பரங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஒரு அரசியல் மாயத்திரை. தமிழக மக்கள் எக்காலத்திலும் ஏமாறமாட்டார்கள்! - பட்டாசு