அழகு இயற்கையானதா?
4 Jul 2026, 9:01 pm

அழகு இயற்கையானதா?

“அவள் அப்படியொன்றும் அழகில்லை… அவளுக்கு யாரும் இணையில்லை.” மறக்கவியலாத கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய, ‘வெயில்’ திரைப்படப் பாடல் இது.

பெண்ணின் அழகு என்று வரையறுக்கப்பட்டிருக்கும் உடல் சார்ந்த புற வடிவங்கள் எதுவும் அவளுக்குப் பொருந்தாது, ஆனாலும் அவளுக்கு நிகர் அவளே என்று காதலன் மகிழ்கிறான். இன்றைக்கும் இப்படைப்பு செவிகளை வருடுகிறது; அதே வேளையில், “அழகு என்றால் என்ன, அதற்கான வரையறைகள் எப்படிப் பெண்ணின் புறத்தையும் அகத்தையும் சிதைக்கின்றன?” என்ற சிந்தனையால் மூளையை நெருடுகிறது. அழகின் அறிவியலும் சமூகக் கட்டமைப்பும் இலக்கிய முகாம் ஒன்றின் இரவு நேர அரட்டையில் அழகு பற்றிப் பேச்செழுந்தது. ஒருவர் தனித்துக் காட்டுவது அழகு என்றார்.

இன்னொருவர் ஒழுங்கமைதி என்றார். “இயற்கையான அழகு என்று எதுவும் இல்லை, ஏனென்றால்… இயற்கையில் அழகற்றது என்று எதுவும் இல்லை” என்று பின்னாளில் ஒரு கருத்தரங்கில் என்னால் பேச முடிந்தது.

பேரண்டத்தில் எந்த ஒன்றுக்குமே அறிவியல் விளக்கம் இருக்கிறது. அழகியலுக்கு மட்டும் அது இல்லாமல் போய்விடுமா? ஆம், அழகு எனப்படுவது – குறிப்பாகப் பெண்ணின் அழகு – இயற்கையானது அல்ல. அது உருவாக்கப்பட்டு, உள்ளேற்றப்பட்ட ஒரு தரக்கோல்.

அந்தத் தரக்கோலைத் தயாரித்ததில் ஆணாதிக்க சமூகம், கலாச்சாரம், ஊடகம் ஆகியவற்றுக்குப் பங்கிருக்கிறது. மாசு மருவற்ற முகமும், கறுப்பு வண்ணமில்லாத மேனியும், கச்சிதமான எடையும் கொண்டவள் அழகான பெண் என்ற கிரீடத்தைத் தூக்கித் திரிகிறார்கள்.

பல்வேறு சமூகங்களின் கதைகளில், புராணங்களில் அரக்கியாகப்பட்டவள் கறுத்த, வாய்க்கு வெளியே நீளும் பற்களுமாக இருப்பது இந்தக் கட்டமைப்பின் இன்னொரு பக்கம்தான். “பொண்ணு நல்லா கலரா இருப்பான்னு சொன்னீங்களே, ஆனா கறுப்பா இருக்காளே” என்று பையன் வீட்டார் கேட்டபோது, “ஆமாம்… நல்லா கறுப்பு கலர்ல இருப்பான்னுதான் சொன்னேன். கறுப்பு ஒரு கலர்தானே” என்று பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிறவர் ஒருவர் விளக்கமளித்தார்.

பெண்களின் உடல், முகம், தோல் நிறம், உடை, வயது ஆகியவை அனைத்தும் இத்தகைய கட்டமைப்பின் அடிப்படையில்தான் மதிப்பிடப்படுகின்றன – பெண் பார்க்கும் வீட்டுக் கூடத்தில் இருந்து, அழகிப் போட்டி மேடை வரையில்! வளர்க்கப்படும் எதிர்மறைகள் பெண்கள் சிறுவயதிலிருந்தே தங்கள் மதிப்பு அழகில் இருக்கிறது என்ற எண்ணத்தோடு வளர்க்கப்படுகிறார்கள்.

“பொம்பளைப் புள்ளையா இருந்துக்கிட்டு தலையில் முடியை வாராமல் திரியுறியே” என்ற வசவு; “தொப்பை தெரியுது, லிமிட்டா சாப்பிடு” என்ற அறிவுறுத்தல் என வீட்டுத் தேவதைகள் முடக்கப்படுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, சிறுவர்கள் தங்களின் மதிப்பு அறிவிலும் ஆற்றலிலும் இருப்பதாக வளர்க்கப்படுகிறார்கள்.

நல்ல வேலையில், அருமையான திறமைகளுடன் இயங்குகிற பெண்ணும் கொடியிடையாளாக “பூனை நடை” நடக்கக் கற்பிக்கப்படும்போது, ஆணின் முகம் அட்டுப்பிடித்திருப்பது அவனுடைய உழைப்புக்கும் தீரத்துக்கும் சாட்சியமாக்கப்படுகிறது.

இதற்கெல்லாம் மாற்றாக, எட்டாம் வகுப்புப் படிக்கும் மகள் உட்கார்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்துக் கண்டித்த ஒரு தாய், பின்னர் அவளிடம், “சாரிப்பா தங்கம். உனக்கு எப்படி உட்கார்றது கம்ஃபர்ட்டபிளா இருக்கோ அப்படியே உட்கார்ந்துக்கோ” என்று பேசியதைக் கேட்டேன். அந்தத் தாயைக் கைகுலுக்கிப் பாராட்ட வேண்டும்.

அழகு பற்றிச் செயற்கையாகப் புகட்டப்படும் கருத்துகளால் பெண்களுக்குள் பொறாமை உணர்வும், மன அழுத்தமும், தாழ்வு மனப்பான்மையும் உருவாகின்றன. தனது அழகு குலைந்ததற்குக் குழந்தை பிறந்ததுதான் காரணம் என்ற வெறுப்போடு, பெற்ற குழந்தையையே கொலை செய்த ஒரு பெண் பற்றிய செய்தி சில மாதங்களுக்கு முன் நாட்டைக் கலக்கியது.

அந்தப் பெண்ணைக் குதறிய சமூகம், அவளுக்குள் அப்படியொரு வன்மம் புகுந்ததில் தனக்குள்ள பங்கு பற்றி யோசிக்

பெண்ணின் தோல் நிறத்தைச் சிவப்பாக மாற்றுகிற பசைத் தொழிலில் உலகளாவிய முதலீடுகளும் லாபக் குவிப்புகளும் இருக்கின்றன. இந்தியச் சந்தையில் மட்டுமே, இவ்வகைப் பொருட்கள் சார்ந்து ரூ.1,30,000 கோடி சுற்றிவருகிறது.

உலகச் சந்தையில் இது 500 பில்லியன் டாலர் (சுமார் 41 லட்சம் கோடி ரூபாய்). இதில் முதலீடு செய்திருக்கிறவர்கள், மாற்றுச் சிந்தனை என்ற அழகு மலர்வதற்கு எளிதில் அனுமதிக்க மாட்டார்கள். இதில் அடிப்படையான ஆணாதிக்க அரசியலும் இருக்கிறது.

பெண் யாருடைய கண்களுக்கு அழகானவளாகக் காட்சியளிக்க வேண்டியிருக்கிறது என்கிற வினாவோடு தொடர்புள்ள அரசியல் அது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் சூழலில், அனைத்தும் விசாரணைக்கு உட்பட்டாக வேண்டும்.

அந்த விசாரணையிலும் தீர்ப்பிலும் “என் உடல், என் உரிமை” என்ற உணர்வு முன்னால் நிற்கட்டும். கோணல் நீங்கியதாக சமூகக் கோணம் மாறட்டும். * அ.குமரேசன்