ஈரான் மீதான போரும் வளைகுடாவில் உடையும் அமெரிக்க கூட்டணியும் - பேராசிரியர் விஜய் பிரசாத்
24 May 2026, 10:45 pm

ஈரான் மீதான போரும் வளைகுடாவில் உடையும் அமெரிக்க கூட்டணியும் - பேராசிரியர் விஜய் பிரசாத்

எழுதுகிறார் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள சட்டவிரோதப் போர் ஒரு ஆபத்தான புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்புகளை முடக்குவதை நோக்கமாகக் கொண்டு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த கூட்டு ராணுவத் தாக்குதல், தற்போது ஆழமான புவிசார் அரசியல் விளைவுகளைக் கொண்ட ஒரு நீண்டகால பிராந்திய மோதலாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தம், கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட புதிய மோதல்களால் முற்றிலும் சிதைந்து, பாரசீக வளைகுடாப் பகுதியை ஒரு விரிவான போருக்குள் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ஈரான் முயல்வதும், அதற்குப் பதிலடி யாக அமெரிக்கா தனது கடற்படை நடவடிக்கைகள் மூலம் ஈரானிய கப்பல் போக்குவரத்தை முற்றுகை யிட முயல்வதுமே தற்போதைய பதற்றத்திற்கு உடனடி காரணமாகும். மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், அமெரிக்காவின் முற்றுகையை மீற முயன்றதாகக் கூறி, ஈரானிய கொடி ஏற்றிய ஆயுதமற்ற வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. வாஷிங்டன் இதனை ‘தற்காப்பு நடவடிக்கை’ என்று விசித்திரமாக வர்ணித்தாலும், டெஹ்ரான் இதனைப் போர்நிறுத்த மீறல் என்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் என்றும் கண்டித்துள்ளது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளதுடன், இது 150 டாலர் வரை உயரக்கூடும் என்ற அச்சமும் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே எரிசக்தி விநியோகம் குறித்த கவலையை தீவிரப்படுத்தியுள்ளது. தங்கள் பாதுகாப்புத் தயாரிப்புகள் மூலம் ஈரானின் ஏவுகணைத் திறனை முற்றிலும் அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறினாலும், ஈரானிடம் இன்னும் 70 சதவீத ஏவுகணைகள் கையிருப்பில் உள்ளதாகவும், அவை பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்றும் வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான சி.ஐ.ஏ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், எண்ணெய் சேமிப்பு முடக்கப்பட்டாலும் பல வாரங்களுக்கு உற்பத்தியைத் தாங்கும் திறன் ஈரானுக்கு உள்ளது. இப்போராட்டம் வளைகுடாப் பகுதியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் லெபனான் வரை எதிரொலிக்கும் வேளையில், இந்த மோதலால் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான அரசியல் மாற்றம் என்னவென்றால், அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே அதிகரித்து வரும்

சவூதி அரேபியாவின் அதிருப்தி

சவூதி அரேபியா இந்த மோதலில் மிகவும் தயக்கத்துடனேயே நுழைந்தது. இளவரசர் முகமது பின் சல்மான் தனது லட்சியப் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டமான ‘விஷன் 2030’ திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காகவே, கடந்த சில ஆண்டுகளாகப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முயன்றார். சவூதியின் பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான கவுன்சில் கூட்டத்தில் பேசிய பின் சல்மான், தங்களின் கவனம் உள்நாட்டுச் சேமிப்பு மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதிலும், வளர்ச்சியை நோக்கியுமே உள்ளதாகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். 2023-ல் சீனாவால் எட்டப்பட்ட ஈரான் - சவூதி உறவு சுமுகமாக்கல் ஒப்பந்தம், இத்தகையதொரு போரைத் தவிர்ப்பதற்கே சவூதியால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் போர் இந்த உத்தியை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. சவூதி அரேபியா முறையாக வாஷிங்டனுடன் அணிவகுத்திருந்தாலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் சவூதியின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படுவதும், அன்னிய முதலீடுகள் குறைவதும் சவூதி கொள்கை வகுப்பாளர்களை அமெரிக்கப் பாதுகாப்பைச் சார்ந்திருப்பதன் விளைவுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. ஈரானின் நேரடிப் பழிவாங்கலுக்குத் தான் இலக்காக நேரிடலாம் என்று அஞ்சும் சவூதி, ஈரானுக்கு எதிராக தங்களுடன் மேலும் தீவிர ராணுவக் கூட்டு வைக்கக் கோரிய அமெரிக்காவின் அழுத்தத்தை நிராகரித்துள்ளது. பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் கொள்கைகள், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு நலன்களுக்காக அல்லாமல், முற்றிலும் இஸ்ரேலின் தேவைகளுக்காகவே இயக்கப்படுவதாகச் சவூதி அரேபியா உணர்கிறது. இதனால், சவூதி நேரடியாகப் போரில் ஈடுபடுவதைத் தவிர்த்து, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தூதரகத் தொடர்புகளை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, வளைகுடாவின் எரிசக்தியை நம்பியிருக்கும் சீனா, இதில் ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்து ‘விரிவான போர்நிறுத்தத்திற்கு’ அழைப்பு விடுத்துள்ளது. இது வளைகுடாவில் நீண்டகாலமாக நீடித்து வந்த அமெரிக்காவின் தனிப்பெரும் ஆதிக்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவைக் காட்டுகிறது.

ஒரு ஆபத்தான முட்டுக்கட்டை

அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் திறனைக் கொண்டிருந்தாலும், ஈரானின் ஏவுகணைத் திறனையும் கடல்சார் வர்த்தகத்தை முடக்கும் ஆற்றலையும் அவர்களால் முழுமையாக ஒடுக்க முடியவில்லை. ஈரான் பெரும் அழிவைச் சந்தித்த போதிலும், அதன் அரசு வீழ்ந்துவிடவில்லை. அதே நேரத்தில், அமெரிக்கா அதிகரித்து வரும் ராணுவச் செலவுகளையும், உள்நாட்டுப் பொருளாதாரப் பணவீக்கத்தையும் எதிர்கொள்கிறது. ராணுவ மேலாதிக்கம் என்பது தானாகவே அரசியல் வெற்றியாக மாறிவிடாது என்பதற்கு இந்த ஏகாதிபத்தியப் போர் ஒரு சிறந்த உதாரணம். தற்போது தேவைப்படுவது மேலும் போரைத் தீவிரப்படுத்துவது அல்ல; மாறாக இறையாண்மை, தூதரகம் மற்றும் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலான ஒரு பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பாகும். இதற்காகவே 2023-ல் பெய்ஜிங்கிலும், 2024-ல் ரியாத்திலும், இறுதியாக 2025 டிசம்பரில் டெஹ்ரானிலும் ஈரான், சவூதி அரேபியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் முத்தரப்புச் சந்திப்புகள் நடைபெற்றன. ஈரான் தனது தனிமைப் படுத்தலைத் தவிர்க்கவும், சவூதி அரேபியா தனது விஷன் 2030 திட்டத்தைப் பாதுகாக்கவும், சீனா மேற்காசியாவில் ஒரு ராஜீய சக்தியாக உருவெடுக்கவும் இந்த பெய்ஜிங் ஒப்பந்தச் செயல்முறையைப் பாதுகாக்க விரும்புகின்றன. போரின் மத்தியிலும் இந்த மூன்று நாடுகளின் அர்ப்பணிப்பு முறியடிக்கப்படவில்லை, மாறாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேற்காசியாவில் அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டணியால் திணிக்கப்பட்ட பேரழிவிலிருந்து தப்பிக்க ஏதேனும் ஒரு வழி இருக்குமேயானால், அது ராணுவ நடவடிக்கை அல்ல; மாறாக ராஜீய பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒரு பரந்த சுமுக உடன்படிக்கையை உருவாக்குவது மட்டுமேயாகும்.