ஹோர்முஸ் நீரிணையை 7 நாட்களில் திறக்கத் தயார்: ஈரான்
26 Sept 2026, 5:57 pm

நியூயார்க்: அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், 7 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உறுதியான திட்டத்தை கத்தார் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான “7 நாள் திட்டத்தை” அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக கூறினார். அமெரிக்கா அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் 7 நாள் காலக்கெடு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின்படி, அமெரிக்கா சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு 4 அல்லது 5 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ஆவது நாளில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும், 7-ஆவது நாளில் இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்றும் அராக்சி விளக்கினார்.

அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் புதிதானவை அல்ல என்றும், கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) அவை ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

“ஒப்பந்தத்தை எட்டவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்கா தீவிரமாக இருந்தால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயாராக உள்ளன. இப்போது முடிவு அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது” என அராக்சி தெரிவித்தார்.

மேலும், “கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல் அல்லது மிரட்டலை ஈரான் ஏற்காது. அழுத்தத்தின் காரணமாக தனது இறையாண்மை உரிமைகளை ஈரான் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது” என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

கடந்த ஜூன் 18ஆம் தேதி, பிராந்தியத்தில் நிலவும் போரை, லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. அந்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்களுக்குள் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டது. அந்தக் காலக்கெடு ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்து, பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.