“அஸ்ஸலாமு அலைக்கும்” சொன்ன ஐபிஎஸ் அதிகாரி பணியிடமாற்றம்!
yesterday

மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ, வீடியோ ஒன்றில் “அஸ்ஸலாமு அலைக்கும்”, “இன்ஷா அல்லாஹ்” போன்ற சொற்களைப் பயன்படுத்தியதற்காக கரக்பூர் டிஎஸ்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தண்டனைப் பணியாகக் கருதப்படும் காவலர் பயிற்சி அகாதமிக்கு உடனடியாக பணியிடமாற்றம் செய்துள்ளது அம்மாநில பாஜக அரசு.

மேற்கு வங்கத்தில் பணியாற்றி வரும் முஸ்லிம் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) குடியிருப்புப் பயிற்சி மையத்தின் மூலம் மாணவியாகத் தான் பெற்ற உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 92 விநாடிகள் கொண்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், வழக்கமான முஸ்லிம் உபசார வாழ்த்தான "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதில் தொடங்கி, "இன்ஷா அல்லாஹ்" (கடவுள் விரும்பினால்), "தன்யவாத்" (நன்றி) மற்றும் "ஜசாகல்லா" (கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்) ஆகிய சொற்களைப் பயன்படுத்தியிருந்தார்.

இதனை எதிர்த்து 'இந்து லீகல் ஃபண்ட்' என்ற அமைப்பு, புஷ்ரா பானோ தனது உரையில் "வந்தே மாதரம்" அல்லது "ஜெய் ஹிந்த்" என்ற தேசிய முழக்கங்களைப் பயன்படுத்தவில்லை என்றும், அரசு அதிகாரி பொதுத் தொடர்பில் நடுநிலையைப் பேணத் தவறிவிட்டார் என்றும் கூறி மேற்கு வங்க அரசிடம் புகார் அளித்தது. அந்தப் புகாரைத் தொடர்ந்து, பாஜக அரசால் அவர் கரக்பூர் டிஎஸ்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தண்டனைப் பணியாகக் கருதப்படும் 8-ஆவது காவலர் பயிற்சி அகாதமிக்கு உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் சீருடை அணிந்த ஏ.எஸ்.பி அனுஜ் சௌத்ரி கவாரிய யாத்திரையில் பங்கேற்றதும், தெலங்கானா டிஜிபி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்ற நாளில் பூஜை நடத்தியதும் பொதுவெளியில் நிகழ்த்தப்பட்ட பகிரங்கமான மத வெளிப்பாடுகள் ஆகும். அவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், கைகூப்பி "நமஸ்காரம்" சொல்வதைப் போன்ற ஒரு வழக்கமான வாழ்த்தான "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதைப் பயன்படுத்தியதற்காக ஓர் அதிகாரி தண்டிக்கப்படுவது கண்டனத்திற்குரியது.

இது குறித்து தி வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“உள்துறை அமைச்சராக அமித் ஷா இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் விரும்பும் போதெல்லாம் 'ஜெய் ஸ்ரீ ராம்' போன்ற நேரடியாக மதரீதியான முழக்கத்தை எழுப்ப அவருக்கு அனுமதி உண்டு. ஆனால், 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறும் ஒரு முஸ்லிம் ஐபிஎஸ் அதிகாரி—அது மதரீதியான வாழ்த்து கூட அல்ல, மாறாக 'உங்கள் மீது அமைதி நிலவட்டும்' என்று பொருள்படும். பாசிச சார்பு சமூக ஊடகக் கணக்குகளின் அழுத்தத்தின் கீழ் மேற்கு வங்க பாஜக அரசால் தண்டனைக்குரிய வகையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.