விளையாட்டு
8 May 2026, 10:12 pm

எல்லாமே குஜராத்திற்கு தானா?

2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதனால் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இந்த ஆண்டுக்கான குவாலிபையர் 2, இறுதிப்போட்டி நடத்தப்பட வேண்டும். ஆனால், திடீரென மே 31-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் காரணமாம் இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா வியாழனன்று அளித்த விளக்கத்தில், “ஐபிஎல் விதிமுறைப்படி, அனைத்து மாநில சங்கங்களுக்கும் மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 15 சதவீத டிக்கெட்டுகள் இலவசமாக ஒதுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு லீக் போட்டிகளின் போது கர்நாடக மாநில சங்கம் 15 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. எனவே, மே 1ஆம் தேதி அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினோம். அதில், ‘உங்களுக்கு 15 சதவீத இலவச டிக்கெட்டுகள் மட்டுமே வழங்க முடியும்; மீதமுள்ள அனைத்து டிக்கெட்டுகளும் பொதுமக்களுக்காக ஆன்லைனில் விற்பனை செய்யப்பட வேண்டும்’ எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் கூட. மே 2ஆம் தேதி கர்நாடக சங்கத்திடமிருந்து வந்த பதில் தங்களுக்கு அதிர்ச்சியளித்தது. 15 சதவீத ஒதுக்கீடு போக, கூடுதலாக 10,000 டிக்கெட்டுகளை அவர்கள் கோரியுள்ளனர். பிளே ஆப் போட்டிகளில் பிசிசிஐ தனது விதிமுறைகளை மீறிச் செயல்பட முடியாது. எனவே, பெங்களூருவிலிருந்து போட்டிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அகமதாபாத் மைதானம் மிகப்பெரிய கொள்ளளவைக் கொண்டது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இறுதிப்போட்டியைப் பார்க்க விரும்புவதால், அவர்களுக்கு அதிக டிக்கெட்டுகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அங்கு போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம்” என அவர் சாக்குப் போக்கு கூறினார்.

இந்திய கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ்?

இந்தியக் கிரிக்கெட் அணியின் டி-20 கேப்டன் பொறுப்பில் பெரிய மாற்றம் வரப்போவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி யுள்ளன. அதாவது தற்போதைய கேப்டன் சூர்ய குமாருக்கு பதிலாக, ஸ்ரேயாஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள தாகத் கூறப்படுகிறது. இந்த மாற்றம் வரவிருக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் போது நிகழலாம் என்றும், அப்போது “சூர்யகுமார் கேப்டன் பதவியிலிருந்து நீக்கத் தேர்வாளர்கள் முடிவு செய்வார்கள் என பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில்,”சூர்யகுமார் நமது உலகக் கோப்பையை வென்ற கேப்டன், அவருடைய பங்களிப்புகள் நிச்சயம் மதிக்கப்படும். அதே நேரத்தில், ஸ்ரேயாஸ் இந்த ஆண்டு தனது ஐபிஎல் அணியை வழிநடத்திய விதம் அவர் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 2028 ஒலிம்பிக் போட்டிகளைக் குறிவைத்து சூர்ய குமார் செயல்பட்டு வந்த நிலையில், இந்தத் தலைமை மாற்றச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணி ஜூன் 6ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. ஜூன் இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணங்கள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

ராஜஸ்தான் - குஜராத்

இடம் : ஜெய்ப்பூர், ராஜஸ்தான் / நேரம் : இரவு 7:30 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)