அச்சமின்றி வாழ்வது பெண்ணின் உரிமை நவம்பர் 25: பெண்கள் மீதான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச நாள் - அ. ராதிகா
26 minutes before

அச்சமின்றி வாழ்வது பெண்ணின் உரிமை நவம்பர் 25: பெண்கள் மீதான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச நாள் - அ. ராதிகா

காலைச் செய்தித்தாளைப் புரட்டினால், பெண்கள் அல்லது சிறுமிகள் மீதான ஏதேனும் ஒரு வன்முறைச் செய்தி கண்ணில் படுகிறது. அதிர்ச்சி குறைந்து அலுப்பு கூடிவிட்டது என்பதே இன்றைய உண்மையான துயரம்.

டொமினிகன் குடியரசில் ட்ரூஹியோவின் சர்வாதிகார

ஆட்சியை எதிர்த்துப் போராடிய மிராபல் சகோதரிகள் மூவர், 1960 நவம்பர் 25 அன்று படுகொலை செய்யப்

பட்டனர். அவர்களின் நினைவாகவே இந்நாள் சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகாரத்தோடும் அடக்குமுறையோடும் பிணைந்தது என்பதை இந்நாளின் தோற்றமே சொல்கிறது.

ஆபத்து வீட்டுக்குள்ளேயே

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2024 அறிக்கையின்படி, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான 4.41 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் மிக அதிகம் கணவன் அல்லது அவரது உறவினர்கள் நிகழ்த்திய கொடுமை (1,20,227); அடுத்து கடத்தல் (67,829), பாலியல் வன்கொடுமை (29,536). பெண்ணுக்கு ஆபத்து இருட்டுச் சந்தில் காத்திருக்கும் அந்நியனிடமிருந்து மட்டும் வருவதில்லை; பெரும்பாலும் அது வீட்டுக்குள்ளிருந்தே, தெரிந்தவர்களிடமிருந்தே வருகிறது. புகார் அளித்தால் குடும்பமும் ஊரும் காவல்

நிலையமும் எப்படி நடத்தும் என்ற அச்சத்தால் பதிவாகாத

சம்பவங்கள் இதைவிடப் பல மடங்கு இருக்கக்கூடும்.

பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமிதம் நமக்கு உண்டு. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில், ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றப் பதிவுகள் ஆண்டுதோறும் உயர்ந்துள்ளன; போக்சோ வழக்குகளும் கடுமையாக அதிகரித்துள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல் விகிதமோ 50 சதவீதத்தைத் தாண்டவில்லை. ஆட்சிகள் மாறின; பாதிக்கப்படும் பெண்களின் நிலை பெரிதாக மாறவில்லை.

வன்முறைக்குப் பிந்தைய அவலம்

வன்முறையைவிட, அதற்குப் பிந்தைய அவலமே பல நேரம் பெண்களை அதிகம் காயப்படுத்துகிறது. புகார் அளிக்கப் பல நாள் அலைச்சல், அழுத்தம், குடும்பத்தின் புறக்கணிப்பு, ஆண்டுக்கணக்கில் நீளும் விசாரணை, அதிகாரமுள்ளவர்கள் தொடர்புடைய வழக்குகளில் மெதுவாக நகரும் நடவடிக்கை என அது நீள்கிறது. பாதிக்கப்பட்டவரைவிடக் குற்றம் சாட்டப்பட்டவருக்கே பாதுகாப்பு கிடைக்கிறது என்ற எண்ணம் வளர்ந்தால், அது நீதி அமைப்பின் மீதான நம்பகத்தன்மையையே சிதைக்கும்.

மோடி அரசின் மனுவாதப் பார்வை

ஆர்.எஸ்.எஸ். சிந்தனைப் பின்னணியில் இயங்கும் ஒன்றிய பாஜக அரசு, பெண்ணைச் சம உரிமையுள்ள

குடிமகளாக அல்லாமல், குடும்பத்தையும் “பண்பாட்டையும்” காக்கும் பொறுப்பாளராகவே பார்க்கிறது. சாதி–பாலினப் படிநிலையை நியாயப்படுத்தும் மனுவாத மரபின் தொடர்ச்சி இதில் தெரிகிறது.

2002 குஜராத் கலவரத்தில் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகளின் முன்விடுதலையும் அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பும் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தின; பின்னர் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்தது. ஹாத்ரஸ், மணிப்பூர் நிகழ்வுகளும், பாலியல் புகாருக்கு உள்ளான அதிகாரமிக்க நபருக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் இறங்கிப் போராட வேண்டியிருந்ததும், அதிகாரத்துக்கு நெருக்கமானவர்கள் மீது நடவடிக்கை மெதுவாகவே நகர்கிறது என்ற அவநம்பிக்கையை வளர்த்துள்ளன.

2023-இல் நிறைவேறிய பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்டதால் இன்றுவரை அமலாகாமல் கிடக்கிறது. காதல், சாதி–மத மறுப்புத் திருமணங்களைச் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் “லவ் ஜிஹாத்” போன்ற பிரச்சாரங்கள், பெண்ணின் வாழ்க்கைத் துணைத் தேர்வு உரிமையையே குற்றமாக்குகின்றன. கிராமப்புற வேலைத் திட்டம், பொதுச் சுகாதாரம், குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றில் அரசு செய்யும் நிதிக் குறைப்பும் மாற்றங்களும் பெண்களையே அதிகம் பாதிக்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகஉறுதியாக, பாரபட்சமின்றிச் செயல்படுகிறார்களா என்று கேட்டால், “இல்லை” என்பதே அழுத்தமான பதில்.

தனிநபர் பிரச்சனை அல்ல

ஒவ்வொரு கொடுமைக்குப் பின்னும் “தனிநபரின் மனநோய்” என்று சொல்லி நகர்ந்துவிடுவது எளிது. ஆனால் பெண்ணை ஆணுக்குக் கீழ்ப்பட்டவளாகப் பார்க்கும் பழக்கம், சாதியைக் காக்க நடக்கும் ஆணவக் கொலைகள், வரதட்சணைப் பேரம், மதிப்பிடப்படாத வீட்டு வேலை, வேலையிடங்களில் குறைந்த ஊதியமும் பாலியல் தொல்லையும் ஆகியவை சேர்ந்துதான் பெண்ணைப் பாதுகாப்பற்றவளாக்குகின்றன. பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத பெண், வன்முறை நிறைந்த வீட்டை விட்டு வெளியேறத் துணிவது கடினம். அதனால் வேலைவாய்ப்பும் சம ஊதியமும் வன்முறைத் தடுப்பின் அங்கமே.

மாதர் சங்கத்தின் போராட்டம்

இச்சூழலில், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவுகட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஸ்ரீவைகுண்டம், கள்ளக்குறிச்சி ஆளும் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பெண்கள் அளித்த புகார்களில் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்பது உட்பட எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது. ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் வேண்டும் என, அரசு அமைத்த நீதியரசர் கே.என். பாஷா குழுவிடம் வலியுறுத்தியது.

பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த மாதர் சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்:

• புகார் அளிக்கும் பெண்ணுக்குக் காவல் நிலையத்தில் மரியாதையும் பாதுகாப்பும் உறுதியாக வேண்டும்.

• வழக்குகள் காலவரையறைக்குள் விசாரிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை விரைவாகத் தாக்கலாக வேண்டும்; அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான புகார்களிலும் பாரபட்சமற்ற நடவடிக்கை வேண்டும்.

• பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட உதவி, தங்குமிடம், மறுவாழ்வு கிடைக்க வேண்டும்.

• பள்ளிப் பருவத்திலிருந்தே பாலின சமத்துவமும் மரியாதையும் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.

• பணியிடப் பாலியல் தொல்லைத் தடுப்புக் குழுக்கள் உண்மையாகச் செயல்பட வேண்டும்.

• பெண்கள் இடஒதுக்கீட்டை உரிய காலத்தில் அமல்படுத்த வேண்டும்.

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தைக் கட்டடங்களாலோ வளர்ச்சி விகிதத்தாலோ மதிப்பிட முடியாது. பெண்களும் குழந்தைகளும் எவ்வளவு அச்சமின்றி நடமாட முடிகிறது என்பதே உண்மையான முன்னேற்றத்தின் அளவுகோல். அத்தகைய முன்னேற்றத்துக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்.