சென்னை விரைவு செய்திகள்
23 Mar 2026, 5:33 pm

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய படப்பிடிப்பு துப்பாக்கிகள்

சென்னை, மார்ச் 23- சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மினி வேனில் கடத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட ‘ஏகே 47’ உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அவை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ‘டம்மி’ துப்பாக்கிகள் என்பது தெரியவந்தது. படப்பிடிப்பு முடிந்து திரும்பும் வழியில் சோதனையில் சிக்கியிருப்பது உறுதியானது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வேன் விடுவிக்கப்பட்டது. ‘உண்மையான துப்பாக்கிகள் பறிமுதல்’ என்ற தகவல் பரவியதால் பதற்றம் நிலவியது. பின்னர் உண்மை தெரிந்ததும் சிரிப்பலை உருவானது. இதுபோல, கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தேர்தல் சோதனைகளால் பொதுமக்கள் அவதிப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், பாதுகாப்பு காரணமாக சோதனைகள் அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பு

செங்கல்பட்டு, மார்ச்23- செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, செய்யூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த தொகுதிகளின், வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறைமலைநகர் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், மேற்கண்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் செவ்வாயன்று (மார்ச் 24) சட்டப்பேரவை தொகுதியின் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

கல்பாக்கம் வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

கல்பாக்கம், மார்ச் 23- திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் அபிஜித் அகர்வால், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சதுரங்கப்பட்டினம், நெய்குப்பி, அணுபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். அப்போது மின்சாரம், குடிநீர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாகச் சாய்தளங்களில் கைப்பிடிகள் அமைக்கவும், மேடு பள்ளங்களைச் சமன் செய்து தரைத்தளத்தைப் சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், வாக்குச்சாவடிகளில் செல்போன்களைக் கட்டுப்படுத்தத் தன்னார்வலர்களை நியமிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை ஐடி ஊழியருக்கு அரிய வகை இதய அறுவை சிகிச்சை

சென்னை, மார்ச் 23- சென்னையைச் சேர்ந்த 39 வயது ஐடி ஊழியர் ஒருவருக்கு, உயிருக்கு ஆபத்தான ‘டைப் ஏ அயோர்டிக் டிசெக்ஷன்’ எனும் இதய பெருநாடி பாதிப்பைச் சென்னை பிரசாந்த் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாகக் குணப்படுத்தியுள்ளனர். திடீர் நெஞ்சுவலி மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தத்தை உடல் முழுவதற்கும் கொண்டு செல்லும் முக்கியக் குழாயான இதய பெருநாடி சேதமடைந்தது கண்டறியப்பட்டது. இது பத்து லட்சம் பேரில் 3 அல்லது 4 பேருக்கு மட்டுமே வரக்கூடிய மிக அரிதான பாதிப்பாகும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கௌசிக் கண்ணன் தலைமையிலான குழுவினர், ‘மாற்றியமைக்கப்பட்ட பெண்டால் செயல்முறை’ மூலம் அந்த நோயாளிக்குச் செயற்கை ரத்தக்குழாய் மற்றும் வால்வைப் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளனர். முறையான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் விரைவான செயல்பாட்டினால் இந்தச் சவாலான சிகிச்சை சாத்தியமானதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இத்தகைய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

செங்கல்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக அமைக்கக் கோரிக்கை

செங்கல்பட்டு, மார்ச் 23- திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், லத்தூர் மற்றும் சித்தாமூர் ஆகிய ஒன்றி யங்களில் போதிய அளவில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாத தால், விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே பரிந்துரையின் அடிப்படையில் நிலை யங்கள் திறக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இது குறித்து வேளாண்மைத்துறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் கேட்டபோது, “மாவட்டத்தில் இதுவரை 89 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்க ளில் நிலையங்கள் அமைக்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து விரைவில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரி வித்தார்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60.63 லட்சம் பறிமுதல்

சென்னை, மார்ச் 23- சென்னையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற தேர்தல் கண்காணிப்பு சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60.63 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிக பட்சமாக விருகம்பாக்கத்தில் ரூ.34.75 லட்சமும், திரு.வி.க. நகரில் ரூ.7.78 லட்சமும், எழும்பூரில் ரூ.2.86 லட்சமும், துறைமுகப் பகுதியில் ரூ.4 லட்சமும் பிடிபட்டன. ரொக்கப்பணம் தவிர, 4.2 லிட்டர் மதுபானம், 28 கிராம் போதைப்பொருள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் அல்லது மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம்: தேர்தல் சோதனையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு!

மாமல்லபுரம், மார்ச் 23- தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல்லவர் கால கலைச்சின்னங் களைக் காண வரும் சுற்றுலா பயணிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்தத் தொடர் சோதனைகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மாமல்லபுரம் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் முதலியார் குப்பம் படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் வருவாயின்றிப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

பழங்குடிகளிடையே தேர்தல் விழிப்புணர்வு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், மார்ச் 23- சட்டமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய, திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆற்றங்கரை, குளக்கரை போன்ற பகுதிகளில் வசிக்கும் விளிம்புநிலை பழங்குடி மக்களிடம் இன்னும் சென்றடையவில்லை எனத் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வாக்குப்பதிவு நாள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், வாழ்வாதாரத்திற்காகப் பலர் செங்கல் சூளை மற்றும் மரம் வெட்டும் தொழில்களுக்கு வெளியூர் சென்றுள்ளதாலும், பழங்குடி மக்களின் வாக்குகளை உறுதி செய்வது அவசியமாகிறது. எனவே, அவர்களின் வாழ்விடங்க ளுக்கே நேரடியாகச் சென்று விழிப்பு ணர்வு ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு வலி யுறுத்தியுள்ளார்.