எழுத்தாளர் இந்திரா லங்கேஷ் மறைவுக்கு எம்.ஏ.பேபி இரங்கல்!
16 Jun 2026, 5:00 pm

எழுத்தாளர் இந்திரா லங்கேஷ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட இலக்கியவாதியும், பத்திரிகையாளரும், 'லங்கேஷ் பத்திரிகை' (Lankesh Patrike) இதழின் நிறுவனருமான பி.லங்கேஷின் மனைவியும், எழுத்தாளருமான இந்திரா லங்கேஷ் (84), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (15-06-2026) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திரா லங்கேஷின் மகளைப் படுகொலை செய்த மதவெறியர்களைச் சட்டத்தின் முன் நிறுவுவதை உறுதி செய்வதன் மூலமே நாம் இந்திராவுக்குச் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் என எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"எழுத்தாளரும், பதிப்பாளரும், தொழில்முனைவோருமான இந்திரா லங்கேஷ் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். பி.லங்கேஷின் இலக்கிய மற்றும் பத்திரிகைப் பணிக்கும், 'லங்கேஷ் பத்திரிகே'வின் வெற்றிக்கும் அவர் ஒரு முக்கியத் தூணாகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல், அவரே ஒரு சிறந்த எழுத்தாளராகவும், சமூக விமர்சகராகவும் தனி முத்திரை பதித்தவர்.

இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். புற்றுநோயுடன் போராடிக்கொண்டே, படுகொலை செய்யப்பட்ட தனது மகள் கௌரி லங்கேஷுக்காக நீதி கோரி கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் போராடி வந்தார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் கௌரி லங்கேஷின் கொலையாளிகள் மீதான விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாதது மிகவும் வருந்தத்தக்கது. தனது மகளைப் படுகொலை செய்த மதவெறியர்களைச் சட்டத்தின் முன் நிறுவுவதை உறுதி செய்வதன் மூலமே நாம் இந்திராவுக்குச் சரியான நீதியை பெற்றுத்தர முடியும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.