விளையாட்டு
16 Nov 2025, 3:30 pm

கொல்கத்தா டெஸ்ட் இந்திய அணி படுதோல்வி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் வெள்ளியன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து முதலில் களமிறங்கிய நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா (5 விக்.,) வேகத்தை சமாளிக்க முடியாமல் 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் சைமன் ஹார்மர் (4 விக்.,) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 30 ரன்கள் பின்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் வேகம் - சுழல் கூட்டணியை (ஜடேஜா - 4, குல்தீப் - 2, சிராஜ் - 2, பும்ரா - 1, அக்சர் - 1) எதிர்கொள்ள முடியாமல் கடுமை யாக திணறினாலும், 54 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து ஆட்ட மிழந்து, வெற்றி இலக்காக 124 ரன்கள் நிர்ணயம்செய்தது. எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வழக்கம் போல சைமன் ஹார்மர் (4 விக்.,) பந்துவீச்சில் கடுமையாக திணறியது. ஜேன்சன் (2 விக்.,), கேசவ் மகராஜ் (2 விக்.,), மார்கிராம் (1 விக்.,) ஆகிய மூவரும் பகுதி நேர மாக தாக்குதல் நடத்த, இந்திய அணி 35 ஓவர்களில் 93 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு இன்னிங்சிலும் 8 விக்கெட்டுகளை வீழ்கிய தென் ஆப்பிரிக்க வீரர் சைமன் ஹார்மர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2ஆவது டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி

இன்னும் 10 நாட்கள்

தேனியில் வெற்றிக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

21 வயதிற்குட்பட்டோருக் கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் (14 ஆவது சீசன்) தமிழ்நாட்டின் முக்கிய நகரான சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் 90% நிறைவடைந்துவிட்ட நிலை யில், தற்போது ஹாக்கி வெற்றிக் கோப்பை சுற்றுப்பயணம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பின் சனியன்று மாலை தேனி மாவட்ட நிர்வாகத்திடம் வெற்றிக் கோப்பையை ஒப்படைக்கப் பட்டது. தொடர்ந்து ஞாயிறன்று காலை தேனி மாவட்ட வினையாட்டு மைதானத்தில் வெற்றிக் கோப்பைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடை பெற்ற இந்நிகழவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சினேஹாப்ரியா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாக்கி வீரர்கள், விளையாட்டு விடுதி மாண வர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவி களின் நடனம், சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் ஹாக்கி வெற்றிக் கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள புதிய உள்விளையாட்டு அரங்கில் வெற்றிக் கோப்பை காட்சிப்படுத்தப்பப்பட்டது. பின்னர், விளையாட்டு மைதானத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை பொதுமக்கள் பார்வைக்காக வெற்றி கோப்பையானது ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது. (இன்று - திண்டுக்கல்)