ஆய்வு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
25 Jan 2026, 4:16 pm
<p><strong>ஆய்வு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>சென்னை, ஜன. 25: தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் (Ph.D) இணைத்து அவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மீண்டும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதை வரவேற்றுள்ளனர். அதேவேளையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவிலான மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆய்வு மாணவர்களில் பெரும்பான்மையானோர் ஏழை மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் ஆய்வேடு (Thesis) தயாரிப்பு என அவர்களின் தினசரிப் பணிகளுக்கு மடிக்கணினி இன்றியமையாதது. 90 சதவீத மாணவர்கள் உதவித்தொகை இன்றிப் பகுதிநேர வேலைகள் மூலமே கல்வியைத் தொடர்வதால், மடிக்கணினி வாங்குவது அவர்களுக்குச் சாத்தியமற்றதாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் ஆய்வு மாணவர்களுக்குச் சேரும்போதே மடிக்கணினியும், மென்பொருள்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆய்வு மாணவர்களின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்பதை உணர்ந்து, தமிழக அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஆய்வு மாணவர்களையும் அதில் இணைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரியுள்ளது.</p>
