ரயில்வே பணியிட ஒழிப்பு : இளைஞர்களே, எழுவீர்! - கோ. அரவிந்தசாமி
5 May 2026, 9:16 pm

ரயில்வே பணியிட ஒழிப்பு : இளைஞர்களே, எழுவீர்! - கோ. அரவிந்தசாமி

நாட்டின் பொருளா தார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்க ளின் வாழ்வாதாரத்திற்கு அடித் தளமாக விளங்குவது இந் திய ரயில்வே. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இது, தமிழக இளைஞர்களுக்கு மிகவும் விரும்பத்தக்க அரசுப் பணித் துறை களில் ஒன்றாகும். நிலையான வருமானம், சமூ கப் பாதுகாப்பு, ஓய்வூதிய வசதி போன்ற கார ணங்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக் கான இளைஞர்கள் ரயில்வே பணிக்காகத் தயாராகி வருகின்றனர். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணியிடக் குறைப்பு நடவடிக்கைகள் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

அதிர்ச்சியளிக்கும் பணியிட ஒழிப்பு நடவடிக்கை

தற்போது, இந்திய ரயில்வேயில் சுமார் 30 ஆயிரம் பணியிடங்களை ஒழிக்க ரயில்வே வாரியம் எடுத்துள்ள முடிவு, இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வேயின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் 2 சதவீதத்தை ஒழிக்கும் இந்த நடவடிக்கையினால், நாடு முழுவதும் 29,608 பணியிடங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. குறிப்பாக வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. தென்னக ரயில்வேயைப் பொறுத்தவரை, சுமார் 1,900 முதல் 2,000 பணியிடங்கள் வரை பாதிக்கப்பட உள்ளன. இது வெறும் புள்ளிவிவரப் பிரச்சனை அல்ல; ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரச் சிக்கல். குறிப்பாக பிசி, எம்பிசி, எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகள் இதன் மூலம் சிதைக்கப்படுகின்றன.

இளைஞர்களின் எதிர்பார்ப்பும் - நிர்வாகத்தின் அலட்சியமும் ‘

மனிதவள முறைப்படுத்தல்’ என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாகவே ரயில்வே நிர்வாகம் பணியிடங்களைச் சுருக்கி வருகிறது. 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 1.7 லட்சம் பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது சுமார் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், சுமார் 4.2 லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்க ளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து ரயில்வே போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. • 2021-இல் 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2,800 பேர் மட்டுமே பணி பெற்றனர். • 2024-இல் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6.4 லட்சமாக உயர்ந்தும், 3,100 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. • 2025-இல் 7 லட்சம் பேர் விண்ணப்பித்து முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி ஆணை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் குறைவான பணியிட அறிவிப்புகள் இளைஞர் களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கு கின்றன. 2030 இலக்கும் தனியார்மயமாக்கல் திட்டமும் ஒவ்வொரு ஆண்டும் 2 சதவீத பணியிடங் களைக் குறைப்பதன் நோக்கம், ரயில்வேயை முழுமையாகத் தனியார்மயமாக்குவதே ஆகும். நிரந்தரப் பணியாளர்களை நியமித்தால் அவர்கள் 30 ஆண்டுகள் பணியில் தொடரு வார்கள் என்பதால், அவர்களைத் தவிர்த்துவிட்டு ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு துறையை நடத்த ஒன்றிய அரசு முனைகிறது. இவர்களின் இறுதி இலக்கு 2030-க்குள் ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைப்பதாகும். தற்போது இந்தியா முழுவதும் 7 லட்சம் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாததால், தொழில்நுட்பக் கோளாறுகளும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கி ன்றனர். பாதுகாப்பு சார்ந்த ஒரு துறையில் நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதே சிறந்தது என்ற கருத்தை நிர்வாகம் திட்டமிட்டே புறக்கணிக்கிறது.

பணிச்சுமையில் நசுங்கும் தொழிலாளர்கள்

இன்று ரயில்வே தொழிலாளர்கள் கடுமை யான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத் திற்கு ஆளாகியுள்ளனர். ஓய்வு பெறும் ஊழியர் களுக்குப் பதிலாகப் புதிய நியமனங்கள் செய்யப்ப டுவதில்லை. மாறாக, ஓய்வு பெற்றவர்களையே மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் அவலம் நடக்கிறது. லோகோ பைலட்டுகள், டிராக் மேன்கள், சிக்னல் மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டிய சூழல் உள்ளது. இரண்டு அல்லது மூன்று பேரின் வேலையை ஒருவரே சுமக்க வேண்டியிருப்பதால், உடல் சோர்வும் கவனச்சிதறலும் ஏற்படுகிறது. சமீபகால மாக நடக்கும் ரயில் விபத்துகளின் பின்னணி யில், இத்தகைய நிர்வாக அலட்சியமும் தொழிலாளர்களின் மீதான அளவுக்கு மீறிய பணிச்சுமையும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

‘வேலை பறிப்பு வளர்ச்சி’

கடந்த 30 ஆண்டுகளில் ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து 74 சதவீதமும், என்ஜின் உற்பத்தி 51 சதவீதமும் உயர்ந்துள்ளன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு இணையான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இது நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியான ‘வேலை பறிப்பு வளர்ச்சி’ ஆகும். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த மோடி அரசு, நடைமுறையில் இருக்கும் அரசுப் பணியிடங்களையே ஒழித்து வருகிறது. கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்த இந்துத்துவா அரசு, ரயில்வே துறைக்கு போதிய நிதி ஒதுக்காமல் அதனைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடிக்கிறது.

ஒன்றுபட்டு அணிதிரள்வோம்!

நாட்டிற்குத் தேவைப்படுவது பணியிட ஒழிப்பு அல்ல; பணியிட உருவாக்கம்! இளைஞர்களின் உழைப்பும் திறமையும் நாட்டின் எதிர்காலம். ஆனால், தவறான கொள்கைகளால் அவை சிதைக்கப்படுவது வேதனையளிக்கிறது. ஒழிக்கப்பட்ட பணியிடங்களை உடனடியாக மீண்டும் உருவாக்க வேண்டும்; காலிப்பணி யிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைக் காப்பாற்றவும் ஜனநாயக அமைப்புகள் ஒருசேர அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கட்டுரையாளர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்