இந்திய பின்னலாடை ஏற்றுமதி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி உண்மையான நெருக்கடியை சொல்லத் தயங்குவது தொழில் மீட்சிக்கு உதவுமா?
18 Mar 2026, 3:34 pm
<p><strong>இந்திய பின்னலாடை ஏற்றுமதி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி உண்மையான நெருக்கடியை சொல்லத் தயங்குவது தொழில் மீட்சிக்கு உதவுமா?</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 18 - 2026 பிப்ரவரி மாத இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், இந்திய ஏற்றுமதி நிலைத்தன்மை தக்க வைக்கப்பட்டிருப்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஏ.சக்திவேல் கூறியிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. உண்மை யான நெருக்கடியைச் சொல்லத் தயங்குவது மீட்சிக்கு உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏஇபிசி தலைவர் ஏ. சக்திவேல் பேட்டி 2026 பிப்ரவரி மாதத்திற்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள் ளது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஏ.சக்திவேல், “ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறை, உலகளாவிய பொருளாதார சவால் களையும் மீறி, நிலைத்தன்மையை தொடர்ந்து தக்க வைத்துள்ளது” என்று கூறியுள்ளார். கடந்த நிதி யாண்டில் இதே காலகட்டத்தில் 14.46 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்த ஏற்றுமதி அளவு, இந்த நிதி யாண்டில் பிப்ரவரி வரை, 14.53 பில்லியன் டாலராக, அதாவது 0.51 சதவிகிதம் அளவில் சிறிய வளர்ச்சி யைப் பதிவு செய்துள்ளது. இதனையே, நிலைத்தன்மை தக்க வைக்கப் பட்டுள்ளது என்கிறார். “கடினமான உலகளாவிய வர்த்தக சூழ்நிலைகளின் மத்தியில் இந்தத் துறை நிலைத்தன்மையைப் பேணும் திறனை குறிக்கிறது. உலகளாவிய பொருளாதார உறுதியற்ற நிலை மற்றும் விநியோக சங்கிலியில் இடை யூறுகள் தொடர்ந்தாலும், ஆயத்த ஆடைத் துறை தன்னுடைய உறுதியை யும், வளர்ச்சித் தன்மையையும் தொடர்ந்து காட்டி வருகிறது. முக்கிய சந்தைகளில் தேவை குறைவாக இருப்பது உள்ளிட்ட பல வெளிப்புற சவால்களை இந்தத் துறை சமாளித்து வருகிறது” என்றும் அவர் தெரிவித் திருக்கிறார். நெருக்கடியை மட்டுப்படுத்தி காட்டுவது ஆகாதா? சக்திவேலின் இந்தக் கருத்து உண்மையை ஓரளவு காட்டுவதாக இருந்தாலும், பின்னலாடைத் துறை நெருக்கடியை மட்டுப்படுத்திக் காட்டு வதாக உள்ளது. குறிப்பாக, கடினமான உலக வர்த்தக சூழ்நிலை என்பது தாமாக ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தானடித்த மூப்பாக இந்தியப் பொருட்களுக்கு 50 சத விகிதம் வரியைத் திணித்தது தான், வர்த்தக சூழ்நிலையைக் கடினமாக்கி யது. நிச்சயமற்ற நிலையில் ஆயத்த ஆடைத் துறை வளர்ச்சித்தன்மையைக் காட்டி வருவதாகக் கூறுவது, உண்மை யில் இங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை மறைப்பதாகும். மேலும், அரசியல் பதற்றங்களும் பொருளாதார அசாதாரணங்களும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில முக்கிய சந்தைகளி லிருந்து வரும் ஆர்டர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்று சக்தி வேல் கூறியிருக்கிறார். இந்த பதற்றத் திற்கு காரணமாக இருக்கும் அரசி யலை, அதாவது இறையாண்மை மிக்க ஈரான் மீது சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்கா தாக்குதல் தொடுத்ததால் ஏற்படுத்தப்பட்ட பதற்றம் என்பதை, ஒரு தொழில் அமைப்பின் தலைவர் என்பதால் வெளிப்படையாக அவர் சொல்லவில்லை. அரசியல் காரணங்களை சொல்வது அவசியம் எனினும், அமெரிக்கா சொந்த நாட்டில் கடைப்பிடிக்கும் வர்த்தகக் கொள்கையும், வெளிநாடுகள் மீது திணித்துள்ள வர்த்தகப் போரும், ஆயுதப் போரும் தான் மொத்தத்தில் உலக வர்த்தகத்தில் மிகப்பெரும் நெருக்கடியையும், சீரழிவையும் ஏற்படுத்தி உள்ளது. ஏஇபிசி தலைவர் என்பதால் சக்திவேல் இந்த விஷயங்களை சொல்லாமல் விடலாம். ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த அரசியல் காரணங்களைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எதிர்வர வுள்ள நிச்சயமற்ற நிலையைக் காணா மல் கடும் நெருக்கடி, பின்னடைவைச் சந்திக்கும் ஆபத்து உள்ளது. இதனுடன், கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் அதிகரித்த செலவுகள் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. இது தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் மொத்த லாப அளவுகளையும், செயல்பாட்டு திட்டமிடலையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்று அவர் மென்மையான முணுமுணுப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் இந்த நிலைமைகளை எதிர் கொள்வதற்கும், நெருக்கடிகளைச் சமாளித்து மீள்வதற்கும் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது இத்தகைய சவால்கள் இருந்தாலும், இந்தியாவின் ஆடைத் துறையின் நீண்டகால வலிமை குறித்து அவர் நம்பிக்கை (?!) தெரிவிக்கிறார். பொதுவாக நம்பிக்கை நல்லதுதான்; ஆனால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமைந்து விடக் கூடாது! பொருளாதாரம், தொழில், வர்த்தகம் அனைத்தும் அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. சரியான அரசியல் நிலைபாடு இருந்தால் தான் பொருளாதாரம், தொழில், வர்த்தகம் அனைத்தும் சிறப்பாக வளரவோ, பாதுகாப்பாக இருக்கவோ, நெருக்கடிகளைச் சந்தித்து மீளவோ முடியும். ஆனால், இந்திய ஆட்சியாளர்களின் அரசியல் நிலைபாடு உள்நாட்டு தொழில், வர்த்தகத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. யார் நெருக்கடியைத் திணித்தார்களோ, அந்த டிரம்ப்பிடம் சரணாகதி அடைந்திருக்கிறார்கள். இறையாண்மை மிக்க இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மாறாக, அவர்கள் கேட்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் ஒப்புக் கொண்டு இந்திய விவசாயம், சிறு, குறு தொழில் உற்பத்தியை நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு மோடி அரசு தயாராகி உள்ளது. மோடி அரசு அளித்த ஆதரவுதான் என்ன? இந்த புற யதார்த்த நிலையைப் பற்றி விமர்சிக்காமல், அரசியல் கலப்பற்ற முறையில், சந்தை விரிவாக்கம், தயாரிப்பில் புதுமை, திறன் மேம்பாடு என்று என்னதான் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தினாலும் அது பயனளிக்காது. எல்லாவற்றையும் தெரிவித்து விட்டு வழக்கம் போல, கடைசியில், கடினமான உலக வர்த்தக சூழ்நிலையில், அரசு வழங்கி வரும் ஆதரவுக்கு (?) சக்திவேல் நன்றி தெரிவித்துள்ளார். மோடி அரசு என்ன ஆதரவு அளித்து வருகிறது என்பது தொழில் துறையினருக்கே வெளிச்சம்! “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பது திருக்குறள். என்ன நோய் என்பதை ஆய்ந்தறிந்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும் என்பதே வள்ளுவன் குறளின் அர்த்தம். ஆனால் நெருக்கடி மென்மேலும் முற்றிக் கொண்டிருக்கும்போதும், தொழில் நிலைமை நன்றாக இருக்கிறது. நிலைத்தன்மை கொண்டிருக்கிறது என்று சொல்வது ஆட்சியாளர்களுக்கு புகழ் பாட வேண்டுமானால் உதவலாம்! ஆனால் கட்டாயம் தொழில் துறையினருக்கு உதவாது! - வே. தூயவன்</p>
<p> </p>
