ஒற்றுமை பெற்றுத் தந்த விடுதலையும், உரிமைகளும்! - எஸ். கண்ணன்
14 Aug 2026, 7:56 pm

ஒற்றுமை பெற்றுத் தந்த விடுதலையும், உரிமைகளும்! - எஸ். கண்ணன்

இந்திய விடுதலைக்கு வயது 79. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் எங்களுடையது எனக் கொக்கரித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வெற்றிகொண்ட வரலாற்று நாள் 1947 ஆகஸ்ட் 15 ஆகும். அரண்மனை ராஜாக்களுக்கும் வணிகம் செய்ய வந்த வியாபாரிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் வெள்ளை வியாபாரிகளே வென்றனர். ஜான்சி ராணி முதல் வீரபாண்டிய கட்டபொம்மன் வரை உயிர்களை இழந்தாலும், விடுதலைக்கான தாகம் தணியாமல் 200 ஆண்டுகள் போர் நீடித்தது; அடுத்த தலைமுறையான படித்தோரை மையமாகக் கொண்டு அது தொடர்ந்தது.

தலைவர்களுக்கும் தனிநபர்களுக்கும் எல்லா வரலாற்றிலும் பங்கு உண்டு; ஆனால், மக்களே வரலாற்றைத் தீர்மானிக்கிறார்கள். அரண்மனையின் கஜானாவைச் சூறையாடிய பிரிட்டிஷார் தொடர்ந்து கனிம வளங்களைக்கொள்ளையடிக்கக் காடுகளுக்குச் சென்றபோது ஆதிவாசிகளும், ரயத்வாரி உள்ளிட்ட நிலவரிக் கொள்கையை அமலாக்கியபோது கொதித்தெழுந்த விவசாயிகளும், பஞ்சாலைகளும் இதர வகை பொருள் உற்பத்தியும் தொடங்கியபோது திணிக்கப்பட்ட உழைப்புச் சுரண்டல் காரணமாக முரண்பட்ட தொழிலாளர்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்ட வளர்ச்சியே இந்திய விடுதலையின் வரலாறாகும்.

பிரித்தாளும் முயற்சி அன்று முதல் நீடிக்கிறது

ஒவ்வொரு பிரிவு மக்களிடம் இருந்தும் செல்வ வளத்தை எப்படிச் சுருட்ட முடியும் என்பது உலகம் முழுவதும் காலனிகளாக நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாருக்குக் கைவந்த கலையாக இருந்தது. 65 நாடுகள் வரையிலும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்குள் கட்டுண்டு கிடந்தன. இப்போது நடைபெறும் காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் 56 நாடுகள் பங்கேற்றுள்ளன; பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டிருந்த நாடுகளைத்தான் காமன்வெல்த் நாடுகள் எனக் கூறுகின்றனர். இந்தியாவிற்குள் வந்த பிரிட்டிஷார், போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சு நாட்டினர் அவரவர் அளவிற்கு மன்னர்களிடையே பகைமையை மூட்டிப் பஞ்சாயத்து செய்யும் நபர்களாக இருந்தனர். ஒரு பகுதி மன்னர்களைத் தங்கள் நண்பர்களாகவும் மற்றொரு பகுதி மன்னர்களை எதிரிகளாகவும் வரித்து போர்களையும் செல்வக் கொள்ளையையும் கட்டமைத்தனர். இந்தியாவின் சமூகக் கட்டமைப்பை நன்குணர்ந்த பிரிட்டிஷார், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் மீதான ஆய்வு போன்றவற்றின் மூலம் இந்தியா மீதான பல அணுகுமுறைகளைக் கையாண்டு தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

அடுத்த தலைமுறையினர் கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப் பயணம் போன்ற காரணங்களால் அறிவுவளர்ச்சி கொண்டு பிரிட்டிஷாரை எதிர்க்கத் துணிந்தபோது, மத ரீதியான பிரிவினையைக் கையாண்டனர். வங்கப் பிரிவினை 1905 ஆகஸ்ட் 7 அன்று நடந்த நிலையில், சுதேசி இயக்கம் உருவானது. பிரிட்டிஷ் பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற போராட்ட இயக்கம் மிக முக்கியமான அறைகூவலாகும். மத ரீதியில் மாநிலத்தைப் பிரிக்காதே என்ற கோபம், பிரிட்டிஷாரின் பொருள்களைப் புறக்கணிக்கும் அறைகூவலாக வளர்ந்தது. ஆனாலும், 1906 டிசம்பர் 30 அன்று முஸ்லிம் லீக் அமைப்பு டாக்கா நகரிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1925 செப்டம்பர் 27 அன்று நாக்பூர் நகரிலும் உருவாக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்த பல்வேறு சமூகக் கலவரங்களும் பதற்றங்களும் பிரிட்டிஷார் இந்திய ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளக் காரணமாக இருந்தன. எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிலான கலவரங்கள் குறித்த விவரங்களைப் பிரிட்டிஷார் சேகரித்து வைக்கவில்லை என்றபோதும், சில ஆய்வுகள் 18 மிகப்பெரிய கலவரங்கள் நடந்ததாகச் சொல்கின்றன; அதில் பல்லாயிரம் பேர் இறந்த விவரங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, 1947-ஐ ஒட்டிய காலங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான கலவரங்கள் நடந்துள்ளன. நாட்டை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் போது யார் கையில் அதிகாரம் என்பது மிக முக்கியமாக இருந்தது. முஸ்லிம் லீக் தனிநாடு கோரிக்கையையும், ஆர்.எஸ்.எஸ் அகண்ட பாரத கோரிக்கையையும் வைத்து மோதியுள்ளன.

கலவரங்களின் மையமாக கொல்கத்தா இருந்துள்ளது. நவகாளி பகுதியும் மகாத்மா காந்தியின் உண்ணாவிரத அறப்போரும் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளாகும். கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகளும் போராட்டங்களும் இந்தப் பகுதியில் மிக முக்கியப் பங்கு செலுத்தியதை ஜோதிபாசு, முசாபர் அகமது போன்ற தலைவர்களின் வரலாறு மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு மூலமும் அறிய முடியும். எந்த அளவிற்கு வகுப்புவாத சக்திகள் செயல்பட்டனவோ, அதைவிடவும் வலுவாகக் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் எதிர்வினை ஆற்றினர். நாட்டின் ஒற்றுமைக்காக மட்டுமல்லாமல், மக்கள் ஒற்றுமைக்காகவும் அவர்கள் பங்களிப்புச் செய்தனர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வரலாற்றில் ஒரு இடத்தில்கூட பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப் போராட்டச் செயல்பாடுகள் இல்லை. காலனியாதிக்கப் பிரிட்டிஷ் ஆவணங்கள், 1925 முதல் 1947 வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசுக்கு எதிராக எந்த ஒரு போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், உப்புச் சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய மாபெரும் போராட்டக் காலங்களில் அவர்கள் பார்வையாளர்களாகவே இருந்தனர். இந்துத்துவா கோட்பாட்டின் பிதாமகரான சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்தார். 1937 வரை அவர் ரத்தினகிரியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் மாதம் ரூ. 60 பிழைப்பூதியம் வழங்கப்பட்டார் என்பது அதிர்ச்சியான உண்மையாகும். சிறையில் இருந்தவருக்குச் செலவு செய்வது அரசின் கடமை என்றால் அது சரிதான்; ஆனால், அன்றைய மதிப்பில் ரூ. 60 என்பது மிகப்பெரிய தொகையாகும். 1937-ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 24 மட்டுமே. இத்தகைய பிரிவினைகளையும் சவால்களையும் கடந்தே ஒற்றுமை உருவாகியுள்ளது; அந்த ஒன்றுபட்ட போராட்டமே விடுதலையை உறுதி செய்துள்ளது.

அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் - போராட்டங்கள்

முன்னரே குறிப்பிட்டபடி, சுதேசி இயக்கம் 1905 முதல் 1908 வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டமாக இருந்தது. அதில் பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால், அரவிந்த கோஷ் உள்ளிட்டோர் முக்கிய பங்கு செலுத்தினர். தமிழ்நாட்டிலும் வ.உ.சிதம்பரனார், பாரதியார் உள்ளிட்ட போராளிகள் முன்னின்று செயல்பட்டனர். தமிழ்நாட்டில் இதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடி கோரல் பஞ்சாலையில் நடந்த தொழிலாளர் போராட்டம் மற்றும் கூலி உயர்வு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதேபோல், அன்றைய பாம்பே நகரத்தின் பஞ்சாலைத் தொழிலாளர்களின் மத்தியில் பாலகங்காதர திலகர் பெரும் செல்வாக்கு கொண்டிருந்தார்.

இங்கிலாந்தில் செயல்பட்ட தொழிற்சங்க இயக்கம் மற்றும் தொழிலாளர் கட்சியினருடன் திலகருக்கு இருந்த தொடர்பு, இந்தியா முழுமைக்கும் தொழிற்சங்கம் தேவை என்பதை உணர்த்தியது. 1919-ல் சர்வதேச தொழிலாளர் இயக்கம் (ஐ.எல்.ஓ) இது குறித்து திலகர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் விவாதித்ததாகச் சொல்லப்படுகிறது. வாஷிங்டனில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சென்ற பிரதிநிதிக்கு உதவும் பொருட்டு திலகர் செல்லவும் முடிவாகி, பின் அரசுப் பிரதிநிதியுடன் செல்வதில்லை என முடிவெடுத்த வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1920 ஜூலை 7 அன்று பம்பாய் தொழிலாளர் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு, அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் நடத்துவது எனவும், அதுவரை லாலா லஜபதிராய் இந்த அமைப்பிற்குத் தலைவராக இருப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

துவக்க காலத்திலேயே அரசுப் பிரதிநிதியுடன் இணைந்து செயலாற்றுவதில்லை என்ற முடிவு, பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சி மீது தொழிலாளருக்கும் அன்றைய தொழிற்சங்க தலைவர்களுக்கும் இருந்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக அமைந்தது. இந்த விவரங்கள் நமக்குத் தெளிவுபடுத்துவது ஏகாதிபத்திய எதிர்ப்பு, விடுதலை இந்தியா, தொழிலாளர் மீதான சுரண்டலை எதிர்ப்பது என்பதாகும். ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட, ஒன்றுபட்ட இந்தச் செயல்பாடுகள் இன்றைக்கும் தேவைப்படக்கூடியதாக உள்ளன. ஆகஸ்ட் மாதம் நடக்க வேண்டிய மாநாடு, திலகர் ஆகஸ்ட் 1, 1920 அன்று இறந்த காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை நடந்து அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் பிறந்துள்ளது. தலைமை தாங்கிய லாலா லஜபதி ராய், “ராணுவமும் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவத்தின் இரட்டை குழந்தைகள்; மூவரும் ஒன்றாகவே செயல்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நடந்த போராட்டங்கள் தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டியதுடன் விடுதலைப் போராட்டத்தையும் தீவிரப்படுத்தின.

நேரு, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்கள் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர்களாக இருந்துள்ளனர். பல லட்சம் தொழிலாளர்களின் போராட்டங்கள் தீவிரப் பங்களிப்பை வழங்கி உரிமைகளைப் பெறுவதில் முடிந்தமை கவனிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் உருவாகி கலவரங்களை வளர்க்க முயற்சித்தாலும், தொழிலாளர் ஒற்றுமை பெரும் பாதிப்பை சந்திக்கவில்லை; அதற்கு அடிப்படைக் காரணம் போராட்டங்களே ஆகும். எனவே, போராடுவது ஒற்றுமையையும் வளர்க்கும், உரிமைகளையும் காக்கும். பெற்ற சுதந்திரத்தைக் காப்போம்; நவ காலனியமும் ஏகாதிபத்தியமும் பறிக்க நினைக்கும் உரிமைகளை மீட்டெடுப்போம். நவ பாசிச கார்ப்பரேட் ஆதரவு பாஜக - ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்திடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம்!