பூசி மெழுகினாலும் வெளிப்படும் உண்மை இந்தியப் பொருளாதார நெருக்கடியை வெளிச்சமிட்டுக் காட்டும் உலகளாவிய நிகழ்வுகள்
24 May 2026, 10:41 pm

பூசி மெழுகினாலும் வெளிப்படும் உண்மை இந்தியப் பொருளாதார நெருக்கடியை வெளிச்சமிட்டுக் காட்டும் உலகளாவிய நிகழ்வுகள்

நாட்டின் பொருளாதார நிலை குறித்து என்னதான் பூசிமெழுகினாலும், உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். உண்மையை மூடி மறைப்பதன் சிக்கலே, அதற்கு ஒரு காலா வதித் தேதி உண்டு என்பதுதான். உண்மையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மூடிமறைக்க முடியும், நிரந்தரமாக அல்ல. இறுதியில் உண்மையே வெல்லும். நாம் அந்தக் கணக்கை தீர்க்கும் நேரத்தை அடைந்துவிட்டதாகவே தெரிகிறது. இந்தியக் குடிமக்கள் ‘தங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும்’ என்று ஒரு வகையான ‘சிக்கனத் திட்டத்தை’ பிரதமரே சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்திய போது, அதற்கான அறிகுறிகள் வெளிச்சத்திற்கு வரத் துவங்கிவிட்டன.

சர்வதேச அரங்கில் சரிந்த நம்பகத்தன்மை

ஆனாலும் இத்தகு மோசமான நிலைமை நாட்டிற்கு வெகுதொலைவில் உள்ள ஸ்காண்டிநேவியாவில் முதலில் தோலுரித்துக்காட்டப்பட்டது. நாட்டின் பிரதமர் அங்கே சென்றிருந்த சமயத்தில், நெதர்லாந்து பிரதமர் இந்திய ஜனநாயகத்தின் மிகவும் கவலைக்குரிய அம்சங்களையும், இங்கே தொடர்ந்து மோசமடைந்துவரும் பத்திரிகை சுதந்திரம் மற்றும் மதச்சிறுபான்மையினரின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியிருக் கிறார். இதன் இறுதித் தாக்குதல், நார்வேயின் ஓஸ்லோவில் செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காது நழுவியதில் வெளிப்பட்டது.

இது பிரதமரின் நம்பகத்தன்மைக்கும், அவரது ஆட்சிக்கும் ஒரு பெரும் அடியை ஏற்படுத்தியது மட்டு மல்லாமல், ஒரு சமூகத்தையும் ஜனநாயகத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் விமர்சனக் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக, கார்ப்பரேட்டுகள் தலைமையிலான ஊடகங்களின் ஏமாற்று வித்தை யை முழுமையாக நிறுவனமயமாக்கி உருவாக்கப் பட்ட, வசதியான ‘உண்மைக்குப் புறம்பான’ கருத்தாக்கங்களையும் இந்தக் கேள்வி தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். இந்திய வெளியுறவு அமைச்சகம் என்னதான் நாசூக்காகப் பேசினாலும், சில கேள்விகளைத் தடுத்து நிறுத்த முடியாது. இது தொலைதூர ஓஸ்லோவில் நடந்ததால், அவர்களை ‘துரோகிகள்’ அல்லது ‘தேசவிரோதிகள்’ என்ற வழக்கமான வர்ணனையின் கீழ் முத்திரை குத்துவது இவர்களுக்கு இயலாமல் போய்விட்டது.

ராஜதந்திர பலவீனமும் எரிசக்தி நெருக்கடியும்

அமெரிக்க-இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு ஈரான் அளித்த நியாயமான பதிலடியால், ஹோர்முஸ் ஜலசந்தியில் எரிசக்தி விநியோகப் பாதை வெளிப்படையாகவே தடைபட்டுள்ளது. மோடி தனது ‘நண்பர்’ என்று சொல்லப்படும் டொனால்டு டிரம்ப்பை அடிக்கடிக் கட்டிப்பிடித்துக் கொண்டாலும், இராணுவ ஆக்கிரமிப்புக்கு முன்னதாக நெதன்யாகுவுடன் முழுமையாக நட்பு பாராட்டிக் கொண்டாலும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியுடன் தொடர்ந்து இருந்தாலும், இந்த இராணுவ மோதலின் போக்கை மாற்றும் அளவுக்கு இந்தியாவுக்கு ராஜதந்திர பலம் இல்லை என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அணி சேரா உலகின் தலைவர் என்ற வகையில் இந்தியா வுக்கு முன்பு இருந்த நல்லெண்ணம் முற்றிலு மாகக் காணாமல் போய்விட்டது. தற்போது இந்தியா, டெல் அவிவ் மற்றும் வாஷிங்டனுடன் கைகோர்த்துள் ளது. இதன் விளைவாக, ராஜதந்திர ரீதியாக இந்த முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவரு வதற்கான பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவராக பாகிஸ்தானும் இடம் பிடித்துள்ளது.

உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளின் தோல்வி

கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்க்கை யை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, மோடி அரசாங்கத்தின் கொள்கைகளே அப்பட்டமானக் காரணங்களாகும். இந்த நெருக்கடியைக் கோவிட் பெருந்தொற்று மற்றும் போரின் மீது சுமத்த பிரதமர் முயன்றாலும், பொருளாதார ஆய்வாளர்களும் எதிர்க்கட்சிகளும் அதனைத் துண்டு துண்டாக உடைத்துவிட்டனர்.

உண்மையில், அரசின் மூர்க்கத்தனமான நவீன தாராளமயக் கொள்கைகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், உழைக்கும் மக்களின் பெரும் பகுதியினரின் வருமானத்தையும் சேமிப்புகளையும் சிதைத்துவிட்டன. அதுமட்டுமல்லாமல் மோடி அரசாங்கம் தன் கூட்டுக்களவாணி முதலாளிகளின் நலன்களுக்கு வெளிப்படையாகவே அடிபணிந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சலுகை களை வாரி வழங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்

களின் சொத்துக்களையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்ததன் விளைவாக மக்களின் உள்நாட்டுத் தேவையையும், அவர்களின் வாங்கும் சக்தியையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.

விண்ணையெட்டும் சமத்துவமின்மை

இதன் விளைவுகள் கண்கூடாகத் தெரிகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஏற்றத்தாழ்வும், விண்ணையெட்டும் அளவிற்கு வேலையின்மையும் காணப்படுகின்றன. சமீபத்திய 2026 உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை, இந்தியாவில் வருமானமும் செல்வமும் எவ்வளவு கடுமையாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் காட்டுகிறது. இந்தியாவில், மேல்தட்டு 10 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 58 சதவீதத்தை ஈட்டுகின்றனர், அதே சமயம் கீழ்த்தட்டு 50 சதவீதத்தினர் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர்.

செல்வம் இன்னும் அதிகமாகச் சமநிலையற்று உள்ளது. முதல் 10 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் சுமார் 65 சதவீதத்தையும், முதல் 1 சதவீதத்தி னர் சுமார் 40 சதவீதத்தையும் கொண்டுள்ளனர். தாமஸ் பிக்கெட்டி மற்றும் பிறர் தலைமையிலான உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் கண்டு பிடிப்புகள் இவ்வாறுதான் அமைந்துள்ளன. இந்தியா உலகின் நான்காவது வேகமாக வளரும் பொருளா தாரம் என்ற உண்மைக்குப் புறம்பான கட்டமைக்கப் பட்ட கோஷமும், அதைவிட வேடிக்கையாக, இந்தியா இரண்டாவது மிகவும் ‘சமத்துவமான பொருளாதாரம்’ என்று கூறுவதும் இப்போது மோடியையும் அவரது கார்ப்பரேட் ஊடக ஆதரவாளர்களையும் அவர்களது திரிபுபடுத்தும் வாதங்களையும் வேட்டையாடத் தொடங்கியுள்ளது.

முதலீடுகள் வெளியேற்றமும் சந்தை வீழ்ச்சியும்

பொருளாதாரத்தின் சில அடிப்படை உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும். லாபம் ஈட்ட முடியாவிட்டால், எவ்வளவு தவறான தகவல்கள் பரப்பினாலும் அது முதலீடுகளை கொண்டுவராது. பண்டங்களை விற்க முடிந்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். கிராக்கி இல்லாமல், பண்டங்களை விற்கவும் முடியாது, லாபம் ஈட்டவும் முடியாது. இது பழிவாங்கும் விதமாகத் திரும்பி வருகிறது. வரவிருக்கும் நெருக்கடியின் சமீபத்திய அறிகுறிகளில் சில, இந்திய மூலதனச் சந்தையிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறுவதாகும். இது, இந்திய ரூபாயானது அமெரிக்க டாலருக்கு பொருத்தமான மதிப்பை எட்டிப் பிடிப்பதில் தவறான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், தெளிவாக வெளிப்படுகிறது.

இயல்பாகவே நிலையற்ற தன்மை கொண்ட வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டு மல்லாமல், நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்த உள்ளீடாக விளங்கும் அந்நிய நேரடி முதலீடும் வெளியேறி வருகிறது. இதன் விளை வாக, தற்போது இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீடு எதிர்மறையாக மாறியுள்ளது. சாதகமான கார்ப்பரேட்டுகளுக்கு எவ்வளவு வரி விலக்கு அளித்தாலும், அவை வெளிநாடுகளில் சிறந்த வாய்ப்புகளைத் தேடுவதால், இந்தியாவில் முதலீடுகளை ஏற்படுத்த விரும்பவில்லை.

அதானியின் அமெரிக்க உடன்பாடும் நாட்டின் இழப்பும்

மோடியின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான அதானி கூட, அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடன் (SEC) சமாதானம் செய்துகொண்டுள்ளார். 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும், 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் முன்வந்து, அவர் டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சியினருடன் சமாதானம் செய்துகொண்டுள்ளார். ரஷ்யா மற்றும் ஈரானிட மிருந்து மலிவான கச்சா எண்ணெய் மற்றும் எரிவா யுவை வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக அதிக விலை கொண்ட அமெரிக்க எண்ணெயை வாங்க வேண்டும் என்ற டிரம்ப்பின் கோரிக்கைக்குப் பணிந்துபோக மோடி முன்வந்ததே, இந்தச் சமாதானத்திற்கு வழிவகுத்ததா என்பது யாருக்கும் தெரியாது. ‘வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு’ பணிந்துபோனதும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியா என்பது எவரும் ஊகிக்கக்கூடிய ஒரு விஷயமாகவே உள்ளது.

கச்சா எண்ணெய் இருப்பின் தோல்வி

மொத்தத்தில், இந்தப் போரின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதாகவே தோன்றுகிறது. இதற்குக் காரணம், மோடி அரசு கச்சா எண்ணெய்க்கான நெருக்கடி கால இருப்பை உருவாக்கத் தவறியதே ஆகும். கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 20 டாலராக இருந்த 2020 ஏப்ரலில், சீனா 1.4 பில்லியன் பேரல்களைக் கையகப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் இந்தியாவிடம் மிகக் குறைந்த அளவாக 40 மில்லியன் பேரல்கள் மட்டுமே உள்ளன. இதன் பொருள் என்னவென்றால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு, சீனாவின் இருப்பில் வெறும் 2.85 சதவீதம் மட்டுமே ஆகும்.

2014 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மோடி அரசாங்கம் மக்களிடமிருந்து 40 லட்சம் கோடி ரூபாயை கூடுதல் வரியாக வசூலித்துள்ளது. அதே வேளையில், உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள் ளது. இதன் விளைவாக, 2010-2014 காலகட்டத்தில் 78 சதவீதமாக இருந்த இந்தியாவின் இறக்குப்புச் சார்புநிலை, தற்போது ஏறக்குறைய 90 சதவீத மாக உயர்ந்துள்ளது. இறக்குமதிகளைப் பல்வகைப் படுத்தத் தவறியதும், கையிருப்புகளின் அளவு குறைவாக இருப்பதும் இந்தியப் பொருளாதாரத்தை மிக அதிக அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாக்கி யுள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக தொழில் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் முதலீடு செய்யத் தவறியது, மக்களை முன்னெப்போதும் இல்லாத ஒரு துயரச் சூழலில் ஆழ்த்தியுள்ளது.

மக்களைப் பிளவுபடுத்தும் இந்துத்துவா பிரச்சாரம் இதற்கு உதவப்போவதில்லை. உண்மைக்குப் புறம்பான வீராப்புப் பேச்சுகள் பயனற்றவையாகவே இருக்கும். உண்மையை எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசாங்கம் உடனடியாக ஒரு ‘வெள்ளை அறிக்கையை’ (whitepaper)த் தாக்கல் செய்ய வேண்டும். அதில் போதிய அளவு சுயபரி சோதனை இருக்க வேண்டும், கொள்கை ரீதியான திருத்தங்களுக்கான அழைப்பு இருக்க வேண்டும், மேலும் ஓரளவிற்கேனும் தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சி இருக்கவேண்டும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மே 24, 2026 தமிழில் சுருக்கம்: ச.வீரமணி