தீக்கதிர் உலக செய்திகள்
24 Feb 2026, 3:55 pm

இந்தியக் குழுவின் அமெரிக்க பயணம் ஒத்திவைப்பு

அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான இந்திய தூதுக்குழுவின் பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மீது டிரம்ப் விதித்த வரி செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மீதும் பிப்ரவரி 24 முதல் 150 நாட்களுக்கு 10 சதவிகித வரியை டிரம்ப் அறிவித்தார். பிறகு ஒரே நாளில் அதனை 15 சதவிகிதமாக உயர்த்தினார். இந்நிலையில் பிப்ரவரி 23-25 வரை இடைக்கால ஒப்பந்தம் பற்றி பேசுவதற்காக அமெரிக்கா செல்லவிருந்த இந்தியக் குழுவின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பிற்கு அமெரிக்க தளபதி எச்சரிக்கை

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது அமெரிக்காவிற்கு நீண்டகால மற்றும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் சிக்கலாக முடியும் என்று அமெரிக்கத் தளபதி எச்சரிக்கை செய்துள்ளார். ஈரான் மீதான போருக்கு நட்பு நாடுகளின் ஆதரவு குறைவாக உள்ளது. மேலும் போருக்கு தேவையான வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் போதிய அளவில் கையிருப்பில் இல்லை. இதனால் அமெரிக்கப் படையினர் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்படலாம் என்று அந்நாட்டின் கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரிக்கை விடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வர்த்தகப் பேச்சுவார்த்தை : இஸ்ரேல் செல்கிறார் மோடி

இந்தியப் பிரதமர் மோடி புதனன்று (பிப்.25) இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் 2023 இல் அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம், ராணுவம், வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, வைர வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆயுத வர்த்தகம் தவிர்த்து 2024-25 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் சுமார் 3.75 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் முடிவான நிலையில் கடந்த வாரம் இந்தியத் தொழிலாளர்கள் மீது இஸ்ரேல் இனவெறியர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சூடானில் நடந்தது இனப்படுகொலை : ஐ.நா., நிபுணர்கள் தகவல்

சூடானில், துணை ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை கொண்டிருப்பதாக ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் போர் மற்றும் தாக்குதலால் சூடான் மக்கள் பல தலைமுறைகளுக்கான மன உளைச்சலை சந்தித்து வருவதாக ஐநா அவையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணை பொதுச்செயலாளர் டாம் பிளெட்சர் கூறியுள்ளார். சூடான் மக்கள் அமைதி வேண்டுமென கதறுகிறார்கள். ஆனால் உலகம் அதற்குத் தேவையான தாராள மனதுடனும் ஒற்றுமையுடனும் பதிலளிக்கவில்லை” என்று அவர் வேதனையும் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் கார்னி பிப்.26 இந்தியா வருகை

கனடா பிரதமர் மார்க் கார்னி பிப். 26 முதல் மார்ச் 7, 2026 வரை சுமார் 11 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வர உள்ளார். மும்பையில் முக்கியத் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின் மார்ச் 2 அன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே வெளியுறவுக்கொள்கை மோசமாகி வந்த நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.