தனியார் மயத்தின் கோர முகம் விமானப்படையிலிருந்து வெளியேறும் விமானிகள் - ப. தெட்சிணாமூர்த்தி
29 Oct 2026, 9:28 pm

தனியார் மயத்தின் கோர முகம் விமானப்படையிலிருந்து வெளியேறும் விமானிகள் - ப. தெட்சிணாமூர்த்தி

போரற்ற உலக அமைதி, நாடுகளுக்கி டையே பரஸ்பர நம்பிக்கை, இணக்கம், ஒத்து ழைப்பு, வளர்ச்சி என்ற மனிதகுலப் பேரன்பே உலகக் கம்யூனிஸ்டுகளின் நிலை. போரால் யாருக்கு லாபம், மக்கள் சந்திக்கும் இழப்புகளும் துயரங்களும் என்னஎன்ற அடிப்படையிலேயே போர் குறித்த கோட்பாடுகளை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வகுக்கின்றன. அதேநேரம், கட்டளையை ஏற்றுத் தங்களையே இழக்கும் படையின ரின் தியாகத்தை அவை குறைத்து மதிப்பிடுவதில்லை. எதிரியின் பீரங்கிஅல்லது ஏவுகணைப் பார்வையில் சிக்கியிருக்கும் வேளையிலும், மரணத்தின் விளிம்பில் அச்சமின்றிக் கட்டளையை நிறைவேற்றும் சண்டை விமானியின் உத்தியே வான் கைகலப்பு (Dog fighting).

1971 போரில் எதிரி விமானத்து டன் வான் கைகலப்பில் ஈடுபட்ட ஸ்குவாட்ரன் லீடர் நிர்மல்ஜித் சிங் சேகோன், காஷ்மீர் வானிலேயே உயிர்த்தியாகம் செய்தார்; நாட்டின்உயரிய பரம்வீர் சக்ரா அவருக்குமரணத்துக்குப் பின் வழங்கப்பட்டது. அதன் பிறகு, 2019 பிப்ரவரி 27 பாலக்கோட் வான் சண்டையில் தனியொரு விமானியாக வான் கைகலப்பில் உச்ச வீரம் காட்டி விருது பெற்றவர் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான். இவ்விருவரும் வீர தீரச் செயல்களுக்கான விருது பெற்றவர்கள். இவர்களில் அபிநந்தன் விருப்ப ஓய்வு பெற்று விமானப்படை யிலிருந்து வெளியேறி, கடந்த ஆகஸ்டில் கோவாவைத் தளமாகக் கொண்ட பிராந்திய விமான நிறு வனத்தில் வணிக விமானியாகச் சேர்ந்துள்ளார் (பிடிஐ, செப்டம்பர் 2026).

வெளியேறுவோர் எண்ணிக்கை

அவர் மட்டுமல்ல; இந்தியா டுடே தரவுப்படி 2010 முதல் 2019 வரையிலான பத்தாண்டுகளில் 798 விமானிகள் தன்விருப்பில் அல்லது ராஜினாமா செய்து வெளியேறினர். இது தற்செயல் அல்ல. 2015இல் 37 ஆக இருந்த எண்ணிக்கை 2016இல் 100, 2017இல் 114 ஆக உயர்ந்தது; 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 180 பேர் வெளியேறினர். 2020 முதல் அபி நந்தன் வெளியேறிய இந்த ஆண்டு வரை எத்தனை பேர் வெளியேறினர் என்ற அரசுத் தகவல் எங்குமே இல்லை; பல முனைகளில் தேடியும் தரவு கிடைக்கவில்லை. பத்தாண்டுச் சராசரியாக ஆண்டுக்குச் சுமார் 80 விமானிகள் என்பதே கிடைக்கும் தகவல். நாட்டின் சர்வ வல்லமை படைத்தவராகத் தன்னைக் காட்டும் மோடியின் ஆட்சியில்தான் இந்த நிலை உருவாகி, விமானப்படைத் தலைமையே கவலைக்கு உள்ளாகியுள்ளது.

முதல் காரணம்: கண்மூடித்தனமான தனியார்மயம்

உள்நாட்டு வணிக விமானப் போக்குவரத்தைக் கண்மூடித்தன மாகத் தனியார் ஆதிக்கத்துக்குத் தள்ளிய மோடி அரசின் கொள்கை களே முதல் மற்றும் முக்கிய கார ணம். அரசுடமையாக இருந்த ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை 2022இல் தனியாரிடம் விற்கப்பட்டன. இன்று தனியார் நிறுவனங்களான இண்டிகோவும் ஏர் இந்தியா குழுமமும் சேர்ந்து உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 91.7% பங்கு வகிக்கின்றன. ஷங்க்ஏர், அல் ஹிந்த் ஏர், ஃபிளை எக்ஸ்பிரஸ் போன்ற புதிய பிராந்திய தனியார் நிறுவனங்களும் வர விருக்கின்றன; வெளிநாட்டுப் பயணிகள் போக்குவரத்தும் தனியார் கையில்தான்.

விமானப்படை விமானிகளின் கட்டுப்பாடும், அவசர காலத்தில் அவர்கள் காட்டும் துல்லியப் பறத்தல்

திறனும் வணிக விமானப் போக்கு வரத்துக்கு மிகவும் தேவை என்று தனியார் நிறுவனங்கள் வேட்கை யுடன் பார்க்கின்றன. எனவே அவற்றின் தொடுகரங்கள் விமானப்படை விமானிகளை வளைக்கும் அளவுக்கு நீண்டுள்ளன. ஸ்குவாட்ரன் லீடர், விங் கமாண்டர், குரூப் கேப்டன் போன்ற நடுத்தர நிலை விமானிகள் மாதம் சராசரியாக ரூ.2 லட்சம் ஊதியம் பெறுகின்றனர். அவர்களுக்குத் தனியார் நிறுவனங்கள் நான்கு மடங்கு அல்லது அதற்கும் மேல் தருகின்றன. அவர்களைப் பயணக் கேப்டன்களாகவும் மூத்த விமானி களாகவும் (Senior First Officer) இவைநியமிக்கின்றன. இதனால் நாட்டுப்பற்றுப் பெருமிதம், பணிப் பாதுகாப்பு, குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றைவிட்டுக்கொடுக்கும் மனநிலை உருவாகிறது.

கேரளத்தின் கொல்லத்தில் வசிக்கும், பெயர் குறிப்பிட விரும்பாதஓய்வுபெற்ற குரூப் கேப்டன் ஒருவர், “ஒரு போர் விமானியை உருவாக்க மக்கள் வரிப்பணம் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை செலவாகிறது. இதைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றன. இதை அனு மதித்தால் நமது விமானப்படை பலவீனமடையுமோ என்ற கவலையும் உருவாகியுள்ளது” என்றார்.

சீன அனுபவத்தை ஒப்பிடுவது அவசியம். அங்கு சைனா சதர்ன், சைனா ஈஸ்டர்ன், ஏர் சைனா போன்ற அரசு நிறுவனங்களுடன், ஷென்சென், சியாமென், ஷான்டாங், சிச்சுவான் போன்ற பிராந்திய நிறுவனங்களும் சேர்ந்து சந்தையில் 65% முதல் 70% வரை பங்கு வகிக்கின்றன. அவை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதால், சீனப் படையினர் பணிக்காலம் முடியும் முன் விலகித் தனியார் நிறுவனங்களில் சேர்வது மிக அரிது.

இரண்டாவது: பதவி உயர்வுத்தேக்கம்

இந்திய விமானப்படையில் உயர் பதவிகள் மிகக் குறைவு; அடுத்தடுத்த பதவிகளுக்கான போட்டி கடுமை. தகுதியான பல விமானிகள் பதவி உயர்வு வாய்ப்பை இழந்து விரக்தியடைந்து தனியார் துறையைத் தேர்வு செய்வதாகக் கூறப்படுகிறது. இதிலும் சீனாவின் தீர்வைப் பார்க்க வேண்டும். 2015க்குப் பிறகு ஜி ஜின்பிங் தலைமையில் “கழுத்துக்கு மேல்” (தலைமையகங்கள்), “கழுத்துக்குக் கீழ்” (கள நிலைக் கட்டமைப்புகள்) எனசீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. புதிய தொழில்நுட்பப் போர்ப் பிரிவுகள் உருவாக்கப்படுவதால் பதவிஉயர்வுக்கான களம் விரிவடைகிறது. வயதால் திறன் குன்றிய அதிகாரிகள் ஓய்வு பெறச் செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பம், சைபர்போர்முறை, கூட்டுப் படை இயக்கத்தில் திறமை பெற்ற இளம் அதிகாரிகளுக்கு விரைவான பதவி உயர்வுவழங்கப்படுகிறது.

மூன்றாவது: குடும்பமும் குழந்தைகள் கல்வியும்

இட மாறுதல்களால் குழந்தை களின் கல்வி, குடும்ப நிலைத்தன்மை குறித்த கவலைகள் நீடிப்பதற்கு ஒன்றியஅரசின் அலட்சியமே காரணம். சீனாவைப் போல வீரர்களின்குழந்தைகளுக்குச் சிறப்புப் பள்ளிகள், பொதுப் பள்ளிகளில் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும்; புதிய மாநிலத்தில் பாடத்திட்டம் மாறும்போது பழைய மாநிலக் கல்வியையும் தேர்வையும் தொடரும் வகையில் இணக்கமான கொள்கைகள் வேண்டும். விமா னப்படைத் தளங்கள் உள்ள நகரங்களில் விமானிகளின் குடும்பங் களுக்கு அவசரமாகக் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும்படைவீரர்கள் மற்றும் மக்கள் தொடர்பு ஆணையரை (Servicemen and Public Relation Commissar) சிவிலியன் பணியிடங்கள் மூலம் நியமித்து, இடம் மாறும் படையினரின் குடும்பத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

மோடியின் உபதேசங்கள்

ராணுவத்தினரைப் போற்றி மோடி ஒரு உரையில் இப்படிக் கூறினார்: “நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் உங்கள் வீரத்தின் முன் மரியாதையுடன் தலைவணங்குகிறார்கள். ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் நெஞ்சும் உங்கள் வீரத்தால் பெருமிதம் கொள்கிறது. இந்த பூமிஉங்கள் வீரதீரச் செயல்களின் கதைகளால் நிறைந்துள்ளது. உலகம் உங்கள் தைரியத்தைக் கண்டுள்ளது” என்றெல்லாம் பெருமை பேசுகிறார். ஆனால் அது வெறும் பேச்சே!

இந்திய விமானப்படையில் விமானியாக இருப்பது வெறும் வேலையோ தொழிலோ அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. கடும் பயிற்சிக்குப் பின் முதன்முறையாக போர் விமானத்தின் காக்பிட்டில் அமரும் விமானி, அக்கணமே உருக்கு போன்ற உளவியல் திடத்துடனும் நாட்டுப்பற்றுடனும் தியாக வாழ்க்கையைத் தழுவுகிறார். அவரது மனத்திண்மையைப் பாதுகாப்பது அரசின் கடமை; அதை மோடி அரசு நிறைவேற்றத் தவறியிருப்பதையே விமானிகளின் பெருமளவு வெளியேற்றம் காட்டுகிறது.

லாபத்தை மட்டும் கருதாமல், சமூகப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு, பிராந்திய சமச்சீர் வளர்ச்சி, அவசர காலச் சேவைக்காக இயங்கி வந்த அரசு விமானச் சேவைகள்மோடி ஆட்சியில் ஒழிக்கப்பட்டுள் ளன. இவை அனைத்தையும் அனுமதித்துவிட்டு, இந்துத்துவ தேசிய வெறியைவிசிறிவிடும் மோடியின் அலங்கார உப தேசங்கள், நாடக பாணி வசனங்களே.