2031-க்குள் இந்திய ஜவுளித்துறை மதிப்பை 35 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு!
29 Jun 2026, 8:36 pm

2031-க்குள் இந்திய ஜவுளித்துறை மதிப்பை 35 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு!

திருப்பூரில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு

திருப்பூர், ஜூன் 29 - 2030-31ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி மதிப்பை, 35 ஆயிரம் கோடி டாலராக (350 பில்லியன்) உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். ஞாயிறன்று திருப்பூர் வருகை தந்த அமைச்சர் கிரிராஜ் சிங், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா பகுதியை பார்வையிட்டார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் ஏற்றுமதியாளர்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து உரையாற்றினார்.

திருப்பூர் இயற்கையான தொழில் தொகுப்பு

இதன்பிறகு அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகை யில், “இந்தியாவின் ஜவுளித் துறை யின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை 2030-31-ஆம் நிதியாண்டுக்குள் 350 பில்லியன் டாலராக உயர்த்த ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று தெரிவித்தார்.

“இந்த இலக்கை எட்டுவதில் திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஜவுளி மையங்கள் முக்கியப் பங்காற்றும், இந்தியாவின் ஜவுளித் தொழிலில் தமிழ்நாடு முன்னணி மாநில மாக திகழ்கிறது; குறிப்பாக ஆடை உற்பத்திக்கான இயற்கையான தொழில் தொகுப்பாக திருப்பூர் விளங்குகிறது” என்றும் பாராட்டினார்.

ஜவுளித்துறை வளர்ச்சியை எட்டும்

2030-31-ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த ஜவுளித்துறை இலக்கில் உள்நாட்டுச் சந்தை மதிப்பு 250 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி மதிப்பு 100 பில்லியன் டால ராகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. மேலும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும், அதன் மூலம் திருப்பூர், தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜ ராத் உள்ளிட்ட மாநிலங்களின் ஜவுளித் துறையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி யை எட்டும் என்று அவர் கூறினார்.

தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்கள் இருந்தாலும், புதிய நவீன இயந்திரங்கள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அவற்றைச் சமா ளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

விருதுநகரில் பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்காவின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் புதிய வசதி கள் குறித்த அறிவிப்புகள் விரை வில் வெளியாகும் என்றும் அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு ஒத்துழைக்காத போது இலக்கு எப்படி சாத்தியமாகும்?

ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது ஒருபுறமிருக்க, மிகப் பெரும்பான்மையாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கக்கூடிய இந்திய ஜவுளித்துறைக்கு தேவையான கொள்கை ஆதரவு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ளாமல் இந்த இலக்கை எட்ட முடியுமா? என்ற கேள்வியை தொழிற்துறையினர் எழுப்புகின்றனர்.

பாஜக அரசானது, ஜவுளித்துறை உற்பத்தி மதிப்புக்கு இலக்கு நிர்ணயித்து இருந்தாலும், ஒன்றிய அரசின் கொள்கை ஆதரவைப் பொறுத்தவரை, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. குறு, சிறு, நடுத்தர ஜவுளி நிறுவனங்கள் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. முன்னணி பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரை எடுத்துக் கொண்டால், பாஜகவின் 12 ஆண்டு கால ஆட்சியில் 30 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் காணாமல் போய் விட்டன. குறு, சிறு, நடுத்தர ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கைகள் குறித்து பாஜக அரசு துளிகூட அக்கறை காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த துறையில் மிகப்பெரும் மூலதன மதிப்புள்ள நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அணுகுமுறையை தான் ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

2020-ஆம் ஆண்டின் இலக்கு என்ன ஆனது?

2014-ஆம் ஆண்டு மோடி இந்திய பிரதமராக ஆட்சிக்கு வந்தபோது, 2020-இல் திருப்பூரின் ஏற்றுமதி இலக்கு ஒரு லட்சம் கோடி என்று ஆரவாரமாக முழக்கம் எழுப்பினர். அந்த இலக்கை எட்டுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட 6 ஆண்டு, கால வரம்பு, தற்போது 12 ஆண்டுகளைக் கடந்து விட்டது. ஆனால் ஏற்றுமதி மதிப்பு 42 ஆயிரத்து 544 கோடி ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், பண மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டால் உண்மையான ஏற்றுமதி மதிப்பு, 30 சதவிகிதம் அளவிற்கு குறைவாகத்தான் இருக்கும்.

கார்ப்பரேட்டுகளே பயனடைகிறார்கள்!

எனவே, ஒன்றிய அரசின் இலக்கு நிர்ணயம், ஒன்றிய அரசின் உண்மையான கொள்கை ஆதரவு இல்லாமல் நிறைவேற வாய்ப்பில்லை. மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இதில் ஆதாயம் தேடப் போகிறார்கள். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து நெருக்கடியையும், நலிவையும் சந்திக்கக்கூடிய நிலையும், கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறைந்தபட்ச நியாயமான ஊதியம் இல்லாமல், சட்ட, சமூகப் பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து சுரண்டலையும் அடக்கு முறையையும் சந்திக்கும் நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை ஆதரவு, தொழிலாளர்களுக்கு சட்ட, சமூக பாதுகாப்பு என்ற கொள்கை மாற்றம் தற்போதைய மிக அவசரத் தேவையாகும். இதன் மூலம்தான் இந்தியாவின் ஜவுளி உற்பத்தி மதிப்பை பல மடங்கு அதிகரிக்க முடியும். - வே.தூயவன்