அமெரிக்காவின் 100% வரி – உறுதியாக இருக்கும் இந்தியா
yesterday

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ரஷ்யா, ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இதை தொடர்ந்து, இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, “அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் விதிக்கும் சட்டம்’ நிறைவேற்றப்பட்டதை இந்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

பல சந்தர்ப்பங்களில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதுபோல், 140 கோடி மக்களின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது. மாறுபட்ட ஆதாரங்களில் இருந்து எரிசக்தியைப் பெறுவதன் மூலமும், சந்தை நிலவரங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் இந்தியா தொடர்ந்து இதைச் செயல்படுத்தும்.

கடந்த சில மாதங்களில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு அமெரிக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இது இந்தியா–அமெரிக்கா இருதரப்பு உறவில் மட்டுமல்லாமல், சர்வதேச எரிசக்திச் சந்தையிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து இந்திய தரப்பு தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உறுதியாக இருப்பதாகவும் இந்திய தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் அரசு நெருக்கமாக இணைந்து செயல்படும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.