கொத்தடிமைகளாக்கும் தொகுப்புச் சட்டங்கள் கொந்தளிக்கட்டும் தொழிலாளர் வர்க்கம்! - ஆர்.சிங்காரவேலு
5 Oct 2026, 8:44 pm

கொத்தடிமைகளாக்கும் தொகுப்புச் சட்டங்கள் கொந்தளிக்கட்டும் தொழிலாளர் வர்க்கம்! - ஆர்.சிங்காரவேலு

கடந்த 150 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன. இவை அனைத்தும் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்றவை. முந்தைய தலைமுறையினர் போராடிப் பெற்ற இந்த உரிமைகளைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையினரின் கடமை.

வரலாற்றுப் பின்னணி

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1850 அப்ரண்டீஸ் சட்டம், 1881 முதல் ஃபேக்டரி சட்டம், 1923 தொழிலாளர் இழப்பீடு சட்டம், 1926 தொழிற்சங்க சட்டம், 1936 சம்பள பட்டுவாடா சட்டம் கொண்டுவரப்பட்டன; 1929விட்லி கமிஷனை இந்திய தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன. 1918இல் தொடங்கிய மெட்ராஸ் லேபர் யூனியன் இந்தியாவின் முதல் சட்டப்பூர்வத் தொழிற்சங்கம்.1919இல் உருவான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இதுவரை 193 கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது; சங்கம் அமைக்கும் உரிமை (87), கூட்டுப் பேர உரிமை (98) ஆகிய கோட்பாடுகளை ஒன்றிய அரசு இன்றுவரை ஏற்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின் 1947 தொழிற் தாவா சட்டம், 1948 ஃபேக்டரிசட்டம், 1965 போனஸ் சட்டம், 1970 தோழர் ஏ.கே. கோபாலன் முன்வைத்த ஒப்பந்த தொழி

லாளர் சட்டம், 62 இடதுசாரி எம்பிக்களின் நிர்பந்தத்தால் 2008 முறைசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் என பல்வேறு தொழில்சார் சட்டங்கள் வந்தன.

தொழிலாளர் கொள்கைகளை விவாதிக்கும் இந்திய தொழிலாளர் மாநாடு 1942 முதல் 46 முறை கூடியுள்ளது; மோடி ஆட்சியின் 12 ஆண்டுகளில் 2015ல் ஒரே ஒருமுறை கூடி, தொழிற்சங்கங்களால் புறக்கணிக்கப்பட்டது. 1966 முதல் தேசிய தொழிலாளர் கமிஷன் (நீதிபதி கஜேந்திரகட்கர்), 1999 இரண்டாவதுதொழிலாளர் ஆணையம் (ரவீந்திர வர்மா) வழங்கிய பரிந்துரைகள் — 100-க்கும்மேற்பட்ட சிக்கலான சட்டங்களை 5 தொகுப்புகளாகச் சுருக்குவது உள்பட — அமலாக்கப்படாமலேயே இருந்தன.

மோடி அரசின் நான்கு தொகுப்புச் சட்டங்கள்

2019–20இல் பெரிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட நான்கு தொகுப்புச் சட்டங்கள் 2025 நவம்பர்21 முதல் அமலுக்கு வந்தன; விதிகள் 2026 மே 8–9ல் வெளியானது. தொழிற்சங்க ஆட்சேபணைகளையும்நாடாளுமன்ற தொழிலாளர் நிலைக்குழு பரிந்துரைகளையும் அரசு நிராகரித்தது. 29 சட்டங்களின் 1,228 பிரிவுகள் 480 ஆகவும், 1,436 விதிகள் 351 ஆகவும், 84பதிவேடுகள் 8 ஆகவும் சுருக்கப்பட்டன.

ஊதியத் தொகுப்புச் சட்டம்

சம்பள பட்டுவாடா (1936), குறைந்தபட்ச ஊதியம் (1948), போனஸ் (1965), சம ஊதியம் (1976) சட்டங்களை உள்ளடக்கிய இது, ஊதியத்தை அடிப்படைச் சம்பளம் + பஞ்சப்படி + ரிடெய்னிங் அலவன்ஸ் என மட்டும் வரையறுக்கிறது — வீட்டு வாடகைப்படி, பயணப்படி, போனஸ், பணிக்கொடை நீக்கப்பட்டுள்ளன. ரூ.18,000க்கு மேல் பெறும் சூப்பர்வைசர்கள் தொழிலாளராகக் கருதப்பட மாட்டார்கள்; நிர்வாகத்தின் கணக்கைத் தொழிற்சங்கங்கள் கோர முடியாது, லாபத்திற்கு வரம்பில்லை. 1957 இந்திய தொழிலாளர் மாநாடு நிர்ணயித்த (3 யூனிட் குடும்பம், 2,700 கலோரி உணவு, 72 கஜம் துணி, +10% வீட்டு வாடகை, +20% எரிபொருள்) மற்றும் 1992 ரேப்டகாஸ் பிரட் வழக்கில் உச்சநீதிமன்றம் கூட்டிய +25% (திருவிழா, திருமணம், கல்வி) என்ற ஊதிய அளவுகோல் 60 ஆண்டுகளுக்குப் பின்னும் மாறவில்லை. பெற்றோர் உள்பட 6 யூனிட் குடும்பம், உயர்ந்த வீட்டுவாடகை, ஸ்மார்ட்போன்–இணைய செலவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, இன்றைய குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.42,000 ஆக இருக்க வேண்டும். அரசு அமைத்த குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழுவில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட மத்திய சங்கங்களுக்கு இடமில்லை; தற்போதைய தேசிய அடிமட்டக் கூலி நாளொன்றுக்கு ரூ.178 மட்டுமே.

தொழில் உறவுத் தொகுப்புச் சட்டம்

தொழிற்சங்கம் (1926), நிலையாணை (1946), தொழில் தாவா (1947) சட்டங்களை உள்ளடக்கிய இது, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே நிலையாணை விதிகளைப் பொருத்துகிறது — மற்றவற்றில் அமர்த்து–துரத்து கொள்கைநடைமுறையாகும். முன்பு ஒருசங்கத்திற்கு 51% ஆதரவு இருந்தால் தனி அங்கீகாரம்; இல்லையெனில் ஒவ்வொரு 20% ஆதரவுக்கும் ஒரு பேச்சுவார்த்தைக் குழு பிரதிநிதி; 10% அல்லது 100 பேர் (எதுகுறைவோ) இருப்பின் சங்கப் பதிவுசாத்தியம் என மாற்றப்பட்டுள்ளது. 10 சதவீத தொழிலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கும் அங்கீகாரம் வேண்டும்.

300க்கு மேற்பட்ட தொழிலாளர் உள்ள ஆலை–சுரங்கம்–தோட்டங்களுக்கு மட்டுமே லே-ஆஃப்/ஆட்குறைப்புக்கு அரசு முன் அனுமதி தேவை; மற்றவை தகவல் தந்தால் போதும் என சட்டம்திருத்தப்பட்டுள்ளது. ஊதிய வரையறை சுருங்கியதால் இழப்பீடும் குறையும். பொது பயன்பாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் இருந்த 14 நாள் வேலைநிறுத்தநோட்டீஸ், இப்போது அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாகி, பேச்சுவார்த்தை தொடங்கியதுமே வேலைநிறுத்தம் தடைசெய்யப்படுகிறது.

பணி பாதுகாப்பு, உடல்நலம் தொகுப்புச் சட்டம்

ஃபேக்டரி (1948) முதல் கட்டுமானத் தொழிலாளர் (1996) வரை 13 சட்டங்களை இணைத்த இச்சட்டம், ஆலை வரையறையை மின்சார ஆலைகளில் 10லிருந்து 20 தொழிலாளர் ஆகவும், மின்சாரமற்றவற்றில் 20லிருந்து 40 தொழிலாளர் ஆகவும் உயர்த்தி, பல ஆலைகளைச் சட்ட வரம்புக்கு வெளியே தள்ளுகிறது.வெவ்வேறு தொழில்களின் விபத்துக் காரணங்களை ஒரே தொகுப்பில் இணைப்பதில் நியாயமில்லை.

வெளிமாநிலத் தொழிலாளர் சட்டப் பாதுகாப்புக்கான வரம்பு 5லிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டது. ரூ.10 லட்சம் வரை இருந்த சொந்த வீடு கட்டுமான நல வரி விலக்கு ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டு, நலவரி வருவாயையும் தொழிலாளர் நலவாரியப் பதிவையும் குறைக்கிறது. 12 அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு மட்டுமேஇழப்பீடு பொருந்தும் என்பது நியாயமற்றது. ஆய்வாளர்கள் “ஆய்வாளர் மற்றும் தொழில் செய்வதைஎளிதாக்குபவர்” எனப் பெயர் மாற்றப்பட்டு, ஆய்வும் அமலாக்கமும் கிட்டத்தட்ட இல்லாமலானது. 2019 முதல் பாஜகஆளும் உ.பி., ம.பி., குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட 12 மணி நேர வேலைஉத்தரவுகள், சட்டம் 8 மணி நேரம் எனக் கூறினாலும் தொடரும் என்கிறது. ஒப்பந்ததாரர் பதிவு வரம்பு 20தொழிலாளர் என்பதிலிருந்து 50 தொழிலாளராக உயர்த்தப்பட்டு, பிஎப், இஎஸ்ஐ பலன்கள் பலருக்குப்பறிபோகின்றன.

சமூகப் பாதுகாப்புத் தொகுப்புச் சட்டம்

9 சட்டங்களை உள்ளடக்கிய இது, சமூகப் பாதுகாப்பைத் தொழிலாளர் உரிமையாக ஏற்க

வில்லை. ஓலா, உபர், ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற கிக் தொழிலாளர்களுக்கு உருப்படியான பாதுகாப்பு இல்லை; அக்ரிகேட்டர்கள் வருவாயில் 1–2% அளிப்பார்கள் என்கிறதே தவிர, எப்போது, எந்தத் திட்டம் என்பதில் தெளிவில்லை. 40 கோடிக்கும்மேற்பட்ட முறைசாரா தொழிலாளருக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% (ரூ.9 லட்சம் கோடி) ஒதுக்க வேண்டும் என்ற மத்திய சங்கங்களின் கோரிக்கையை அரசு புறக்கணிக்கிறது — 12 ஆண்டு

களில் கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.16 லட்சம் கோடி சலுகை வழங்கிய அரசுதான் இது. கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்த அங்கன்வாடி,ஆஷா ஊழியர்களும் இத்தொகுப்புச் சட்டத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 1976 நீதியரசர் கிருஷ்ணய்யர் தீர்ப்பின்படி தொண்டு நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களே என்றிருக்க, இத்தொகுப்புச் சட்டம் அவற்றுக்கு விலக்கு அளிக்கிறது. பெண்களை ஆபத்தான பணிகளிலும் இரவு பணியிலும் “விருப்ப உரிமையின் பேரில்” ஈடுபடுத்தலாம் என்பதும் ஏமாற்று வேலை.

தயாராவோம்!

கடந்த நூறாண்டுகளில் நீதிமன்றங்கள் அளித்த தொழிலாளர்க்கு சாதகமான தீர்ப்புகளை புதிய தொகுப்புச் சட்டங்கள் நிராகரித்து, கிட்டத்தட்ட 100 இடங்களில் “அறிவிக்கிறபடி”, “நிர்ணயிக்கிறபடி” என அதிகாரிகளின் தன்னிச்சையான அதிகாரத்திற்கு வழிவகுக்கின்றன. தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் இத்தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும்; உயிர் வாழும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேரம், வேலைநிறுத்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; அனைவருக்கும் மாதம் ரூ.42,000 குறைந்தபட்ச ஊதியம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டிசம்பர் 1 அன்று தில்லியில் சிஐடியு நடத்தும் பேரணியை, போராட்டத்தை வெற்றிகரமாக்க தயாராவோம்!