டிஜிட்டல் எமர்ஜென்சியை நோக்கி நகரும் இந்தியா - எம்.கண்ணன்
yesterday

டிஜிட்டல் எமர்ஜென்சியை நோக்கி நகரும் இந்தியா - எம்.கண்ணன்

நவீன ஜனநாயகத்தில் குடிமக்களின் கருத்துச்சுதந்திரத்தையும் அரசியல் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்லும் முக்கிய ஊடகங்களாக இணையமும் சமூக ஊடகத் தளங்களும் விளங்குகின்றன. ஆனால், இந்தியாவில் அரசைக் கேள்வி கேட்கும்சுயேச்சையான குரல்களையும் விமர்சனங்களையும் சட்டரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அண்மைக் காலங்களில் தீவிரமடைந்துள்ளன.

காரணமின்றி நீக்கப்படும் பதிவுகள்

தீக்கதிர் நாளிதழின் சமூக ஊடகத்தளங்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டங்கள் குறித்துப் பதிவிடும் போஸ்டர்கள், காணொலிகள்கூட நீக்கப்படுகின்றன; இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பரவலும் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு எந்தக் காரணமும் கூறப்படுவதில்லை;முறையிடக்கூட வழியில்லை.

உதாரணமாக, பெங்களூரு சுதந்திரப்பூங்காவில் நடந்த எஸ்ஐஆர் எதிர்ப்புப் போராட்டம் குறித்துத் திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் காணொலியில் தெரிவித்திருந்தார். காணொலிகளிலோ பதிவுகளிலோ போராட்டம், எஸ்ஐஆர், ஞானேஷ்குமார் போன்ற பெயர்கள் வந்தாலே, அல்காரிதம் மூலம் தணிக்கை செய்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்டா தனது API-ஐ(அதாவது, வெவ்வேறு மென்பொருள்கள், செயலிகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள ஒருபாலமாக செயல்படும் நிரல்) ‘சஹயோக்’ தளத்துடன்இணைத்துள்ளதால், அரசு உத்தரவுகள் தனிமனிதப்பரிசீலனையின்றித் தானாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து முகநூல் நிறுவனத்திடம் கேள்விஎழுப்பவும் வழியில்லை. “இந்தக் கட்டுப்பாடுகள் ‘சஹயோக்’ போர்ட்டல் மூலம், இந்தியத் தகவல் தொழில்நுட்ப விதிகளின் சட்டப்பூர்வத் தேவைகளுக்கு ஏற்ப,ஒரு தானியங்கி அமைப்பின் மூலம் இந்த உள்ளடக்கத்துக்கான அணுகலை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். இந்த உள்ளடக்கம் இந்தியாவில் தெரியாது” என்று மட்டுமே பதில் வருகிறது. தகவல் தொழில்நுட்ப விதித் திருத்தங்கள், வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாக உத்தரவுகள், அல்காரிதம் தணிக்கை, இணையச் சேவைத் துண்டிப்பு ஆகியவை நாட்டில் மறைமுக ‘டிஜிட்டல் எமர்ஜென்சி’ சூழலை உருவாக்கியுள்ளன.

சட்டக் கட்டுப்பாடுகளும் நீதிமன்றத் தீர்ப்பும்

இணைய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000இன் பிரிவு 69Aநீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால்2021இல் இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளும்,2023 ஏப்ரலில் சேர்க்கப்பட்ட விதி 3(1)(b)(v)-உம்அரசின் நிர்வாக அதிகாரத்தை எல்லை மீறி விரிவுபடுத்தின. இவ்விதியின்படி, ஒன்றிய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் (PIB) ‘உண்மை சரிபார்ப்புக் குழு’, அரசு தொடர்பான செய்தியைப் ‘போலியானது அல்லது தவறானது’ என அறிவித்தால், சமூகஊடகத் தளங்கள் அப்பதிவை உடனே நீக்க வேண்டும்; ஒரு துறையின் நோக்கத்துக்கு மாறான கருத்துகளைப்பதிவிட்டாலும் நீக்க வேண்டும். தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79இன் கீழ் தளங்களுக்கு உள்ள‘சட்டப்பூர்வப் பாதுகாப்பு’ பறிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த அதிகாரக் குவிப்பை எதிர்த்து குணால் கம்ரா,எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா, அசோசியேஷன் ஆஃப் இந்தியன் மேகசின்ஸ் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.2024 செப்டம்பரில் மும்பை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கியது. உண்மைத்தன்மையைத் தீர்மானிக்கும் ஒரேஅதிகார அமைப்பாக அரசு மாற முடியாது என்றும்,இவ்விதி அரசியலமைப்புப் பிரிவு 14 (சமத்துவம்), 19(1)(a) (கருத்துச் சுதந்திரம்) ஆகியவற்றுக்கு முரணானது என்றும் கூறி, அதை முழுமையாக ரத்து செய்தது. “அரசேஉண்மைக்கான தராசை ஏந்துவது ஜனநாயகஉரையாடல்களை நசுக்கிவிடும்” என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். ஒன்றிய அரசின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சஹயோக் தளமும் முடக்க உத்தரவுகளும்

தீர்ப்பால் பின்னடைவைச் சந்தித்தும், அதே கட்டுப்பாடு ‘சஹயோக்’ போர்ட்டல் வழியாக வேறுவடிவில் தொடர்கிறது. 2024 அக்டோபரில் உள்துறை அமைச்சகம் அமைத்த இத்தளம் மூலம், பிரிவு 79(3)(b)-ஐப் பயன்படுத்தி மெட்டா, எக்ஸ் போன்ற நிறுவனங்கள் வற்புறுத்தப்பட்டு, தணிக்கை துரிதப்படுத்தப்பட்டது. 2026 பிப்ரவரித் திருத்தங்களின்படி, சுட்டிக்காட்டப்படும் உள்ளடக்கத்தை நீக்கும் காலக்கெடு 36மணி நேரத்திலிருந்து வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இதனால், சட்ட ஆய்வோ மறு ஆய்வோ இன்றி இயந்திரத்தனமாகப் பதிவுகளை நீக்கும் நிலைக்குச் சமூக ஊடக நிறுவனங்கள் தள்ளப்பட்டன.

2026 மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும், இன்ஸ்டாகிராமுக்கு 1,00,000, ஃபேஸ்புக்குக்கு 80,000, யூடியூப்புக்கு 15,000 என 1,95,000க்கும் அதிகமான முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன; அதாவது ஒவ்வொரு 68 வினாடிக்கும், கிட்டத்தட்ட நிமிடத்துக்கு ஒன்று என்ற அதிவேகத்தில் முடக்க உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டன.

இயற்கை நீதி மறுப்பு

இந்த அவசரக் கட்டுப்பாட்டால், அரசை விமர்சிப்போரின் பதிவுகள் மட்டுமின்றிச் சட்டப்பூர்வத் தகவல்களும் பாதிக்கப்பட்டதைத் தரவுகள் காட்டுகின்றன. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த விளக்கத்தை நடுநிலையாக விளக்கியசட்ட விழிப்புணர்வுப் பதிவுகளும் நீக்கப்பட்டன. தானியங்கி வடிகட்டிகளின் தவறால் பிரதமர் ஆதரவுப் பதிவுகளும் மிகச் சிறிய அளவில் முடக்கப்பட்டன. பதிவுநீக்கப்படும் படைப்பாளர்களுக்கு மின்னஞ்சலில் சிறுஅறிவிப்பு மட்டுமே அனுப்பப்படுகிறது; விளக்கம் கேட்கவோ மேல்முறையீடு செய்யவோ வாய்ப்பில்லை. இதுஇயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது.

அல்காரிதம் தணிக்கையும் மறைமுகத் தடைகளும்

நேரடி உத்தரவுகளுடன், தளங்களின் அல்காரிதம்வழியாகவும் மறைமுகத் தணிக்கை நடக்கிறது. முதன்மையானது ‘நிழல் முடக்கம்’ (Shadowbanning): அரசியல்எதிர்ப்பாளர்கள், தொழிற்சங்கங்கள், சமூகஆர்வலர்களின் கணக்குகள் நேரடியாகத் தடை செய்யப்படுவதில்லை; ஆனால் அவர்களின் பதிவுகளுக்கான முன்னுரிமை குறைக்கப்பட்டுப் பார்வைகள் செயற்கையாகச் சரிகின்றன. போராட்டக் காலங்களில் குறிப்பிட்ட சொற்கள் ‘உணர்திறன் மிக்க உள்ளடக்கமாக’ (Sensitive content) வகைப்படுத்தப்பட்டுத் தேடலில் தோன்றாமல் தடுக்கப்படுகின்றன. ‘புவியியல் முடக்கம்’ (Geo-blocking) மூலம் பிரகாஷ்ராஜ் போன்ற செல்வாக்கு மிக்கவர்களின் பேச்சுகளும் காணொலிகளும் இந்திய எல்லைக்குள் மட்டும்பார்க்க முடியாதபடி முடக்கப்பட்டன.

இதன் பின்னணியில் பெருநிறுவன வணிக நலன்களும் உள்ளன. ஆளுங்கட்சித் தலைவர்களின் வெறுப்புப்பேச்சின் மீது நடவடிக்கை எடுத்தால் முகநூலின்வணிகம் பாதிக்கும் என அதன் அதிகாரி அங்கி தாஸ்தடுத்ததை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அம்பலப்படுத்தியது.

களப் போராட்ட ஒடுக்குமுறையும் இணைய முடக்கமும்

மக்கள் உரிமைகளுக்காக வீதிக்கு வரும்போது, தனது அத்துமீறல்களை மறைக்க டிஜிட்டல் தளங்களை முடக்குவதை அரசு உத்தியாகக் கொண்டுள்ளது. தில்லி விவசாயிகள் போராட்டம், ஜந்தர் மந்தர்மாணவர் போராட்டங்கள், மணிப்பூர் இன வன்முறை ஆகியவற்றின்போது ஹேஷ்டேக்குகள் நீக்கப்பட்டன,கணக்குகள் முடக்கப்பட்டன, மாதக்கணக்கில் இணையம் துண்டிக்கப்பட்டது. வேலையின்மை, ஜனநாயகச் சீர்கேடு குறித்து இணையத்தில் ஒன்றிணையும் இன்றையஜென் ஸி (Gen Z) இளைஞர்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே இந்த ஒடுக்குமுறை ஏவப்படுகிறது.Access Now, #KeepItOn அமைப்புகளின் தரவுப்படி,2025இல் இந்தியாவில் 65 இணைய முடக்கங்கள் விதிக்கப்பட்டன. 2016 முதல் 2025 வரை உலகில் பதிவான 2,102 முடக்கங்களில் 920 இந்தியாவில் மட்டுமேநடந்தன; ஜனநாயக நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.

வரலாற்றுப் படிப்பினையும் ஜனநாயகத்தின் எதிர்காலமும்

ஊடகங்கள் ‘கோடி மீடியா’வாக (கோயபல்ஸ்+மோடி=கோடி) மாறி, பாரம்பரிய ஊடகங்கள் மீதான நம்பிக்கை குறைந்துள்ள சூழலில், பெரும்பாலான மக்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற மாற்றுஊடகங்களையே நம்பியுள்ளனர். அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத இந்தத் தளங்களில், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாகநிமிடத்துக்கு ஒரு உத்தரவு என்ற வேகத்தில் பதிவுகளை நீக்கிக் கருத்துச் சுதந்திரத்தை முடக்குகிறது அரசு. ஆனால், அடக்குமுறையால் மக்கள் குரலை ஒடுக்கிய எந்தஅரசும் வரலாற்றில் நிலைத்ததில்லை.முன்பு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட்டபோதும், மக்கள் சக்தியே ஜனநாயகத்தை மீட்டது. தொழில்நுட்பத்தில் ஒரு கதவைஅடைத்தால் ஆயிரம் கதவுகள் திறக்கும் என்பதே வளர்ச்சியின் இயல்பு; இன்று ஒடுக்கப்படும் குரல்கள் நாளைபுதிய வடிவில் எழும். அரசே உண்மையைத் தீர்மானிக்கும் விதியை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததும், பிரிவு 19(1)(a)இன் கீழ் கருத்துச் சுதந்திரமே மேலானது எனச் சுட்டிக்காட்டியதும் ஜநாயக நிறுவனங்களின் வலிமையைக் காட்டுகின்றன.அதிகாரத் தணிக்கையும் அடக்குமுறையும் உண்மையைச் சிறிது காலம் மறைக்கலாமே தவிர, வீழ்த்த முடியாது; ஜனநாயகப் போர்க்களத்தில் மக்களின் உரத்தகுரலும் உண்மையின் வெளிச்சமுமே இறுதியில் வெல்லும்.