‘ஞானேஷ் குமாரே, பதவி விலகு!’ இந்தியா அணி எம்.பி.க்கள் ஆவேசப் பேரணி தேர்தல் ஆணையத்தை நோக்கி அணிவகுத்த 300 நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்தி காவல்துறை அராஜகம்
6 Oct 2026, 10:17 pm

‘ஞானேஷ் குமாரே, பதவி விலகு!’ இந்தியா அணி எம்.பி.க்கள் ஆவேசப் பேரணி தேர்தல் ஆணையத்தை நோக்கி அணிவகுத்த 300 நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்தி காவல்துறை அராஜகம்

பேரணியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் ஞானேஷ்குமாருக்கு எதிராக முழக்கமிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக, காங்கிரஸ் எம்.பி.க்கள்.

புதுதில்லி, அக். 6 –வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்குப் பொறுப்பேற்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடன் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாயன்று தலைநகர் தில்லியை அதிரவைத்தனர். நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையத் தலைமையகம் நோக்கிப் புறப்பட்ட அவர்களது பேரணியை, அடுக்கடுக்கான தடுப்புகளை அமைத்து தில்லி காவல்துறைவழிமறித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கைது செய்து பேருந்துகளில் ஏற்றியது.மக்களவை, மாநிலங்களவை இரண்டிலுமிருந்து சுமார் 300 எம்.பி.க்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மக்களவை உறுப்பினருமான அம்ரா ராம், மக்களவை உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜான் பிரிட்டாஸ், வி.சிவதாசன், ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

போராட்டக் கோட்டையாக மாற்றப்பட்ட தலைநகர்

செவ்வாயன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மகர துவாரத்தில் எம்.பி.க்கள் திரண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் 11 மணிக்குப் பேரணி புறப்பட்டது. பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்திரிணாமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரையன், சகரிகாகோஷ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனா (உத்தவ்) கட்சியின் சஞ்சய் ராவத், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுகவின் துரை வைகோ உள்ளிட்டோர் அணிவகுத்தனர். இந்தியா கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதாதளமும் இணைந்தது.

ஞானேஷ் குமாரை ஆர்எஸ்எஸ் சீருடையில் சித்தரிக்கும் உருவப் பதாகைகளை ஏந்திய எம்.பி.க்கள், “வாக்குதிருடனே, நாற்காலியை விட்டு இறங்கு”,“ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல” என முழங்கினர். ஆனால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகமான நிர்வாசன் சதனை அவர்கள் நெருங்கவே மோடி அரசு அனுமதிக்கவில்லை. தில்லி காவல்துறையுடன் சிஆர்பிஎப், அதிவிரைவுப் படை உள்ளிட்டதுணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன. நாடாளுமன்ற வீதியில் நிதி ஆயோக் அலுவலகத்துக்கும் ஆகாஷ்வாணி பவனுக்கும் இடையேபேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.

“நாங்கள் எம்.பி.க்கள்; இந்நாட்டின் குடிமக்கள்; நிராயுதபாணிகள். எங்களைத் தடுக்க இவ்வளவு பெரிய படை எதற்கு?” என்று சஞ்சய் ராவத்கேள்வி எழுப்பினார். வழிமறிக்கப்பட்ட எம்.பி.க்கள் சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி காவல்துறையின் தடுப்பு மீது ஏறி நின்று தேசியக் கொடியை அசைத்தார். அபிஷேக் பானர்ஜியும் சமாஜ்வாதி எம்.பி.க்களும் தடுப்புகள் மீது ஏறினர்.

களத்தில் முன்னின்ற இடதுசாரி எம்.பி.க்கள்

இந்தப் பேரணியில் இடதுசாரிக்கட்சிகளின் எம்.பி.க்கள் முன்வரிசையில் நின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ், பேரணியின் தலைமை வரிசையில் கூட்டணித் தலைவர்களுடன் அணிவகுத்தார். ராஜஸ்தான் விவசாயிகள் இயக்கத்தின் தலைவருமான அம்ரா ராம், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம், கேரளத்தைச் சேர்ந்த வி.சிவதாசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவரான ஏ.ஏ.ரஹீம், சிபிஐ நாடாளுமன்ற உறுப்பினர்கள் வை.செல்வராஜ், பி.சந்தோஷ்குமார் ஆகியோர் தேர்தல் ஆணையரின் உடனடி பதவி விலகலையும் எஸ்ஐஆர் நடவடிக்கையை நிறுத்துவதையும் வலியுறுத்தி அணிவகுத்தனர். அனைவரையும் தில்லி காவல்துறை கைது செய்தது.

“வாக்களிக்கும் உரிமையைத் திருடிய குற்றத்துக்காக ஞானேஷ் குமாரைகைது செய்ய வேண்டும்; பல லட்சம்இந்தியர்களின் வாக்குரிமையைத் திருடிய இக்குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பி.சந்தோஷ் குமார், “தொடக்கத்திலிருந்தே எங்களை முன்னேற விடவில்லை. இயன்றவரை முன்னேற முயன்றோம். கைது என்பது தீர்வல்ல; பதவி விலகல் ஒன்றே தீர்வு. இயக்கத்தை மேலும்தீவிரப்படுத்துவோம்” என்று அறிவித்தார். ஞானேஷ் குமாரை ‘ஏமாற்றுத்தேர்தல் ஆணையர்’ என்று அவர் சாடினார். முதலில் வீதிக்கு வந்த இடதுசாரிகள்!ஞானேஷ் குமாரை வெளியேற்றக் கோரும் போராட்டத்தை முதலில் வீதிக்குக் கொண்டுவந்தவை இடதுசாரிக்கட்சிகளே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்எல்) லிபரேஷன், ஆர்எஸ்பி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய ஐந்து கட்சிகளும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை ஒரு வார கால இயக்கத்தை நடத்தின. செப்டம்பர் 29 அன்று தேர்தல் ஆணைய வாயிலிலேயே மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 2 அன்று ஜந்தர் மந்தரில் எம்.ஏ.பேபி, பிருந்தா காரத் ஆகியோருடன் வாலிபர் சங்க, மாணவர் சங்கத் தலைவர்களும் கைதாகினர். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியே இன்று நாடாளுமன்ற வீதியில் இந்தியா அணி சார்பில் விரிவடைந்து ஒலித்தது.

ஆகாஷ்வாணி வளாகத்தில் தர்ணா

அகிலேஷ் யாதவ், அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரையன், சகரிகா கோஷ் உள்ளிட்ட எம்.பி.க்களைக் காவல்துறையினர் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். “நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்று தெரிவிக்கப்படாத இடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்” என்று சகரிகா கோஷ் தெரிவித்தார். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் இருவரும் காவல் வளையத்தை மீறி ஆகாஷ்வாணி பவன் வளாகத்துக்குள் நுழைந்து, ஒரு மரத்தடியில் அமர்ந்து தர்ணாவைத் தொடங்கினர். திட்டத்தில் இல்லாத இந்த நகர்வு காவல்துறையைத் திகைக்க வைத்தது. மூன்று மணி நேரத்துக்கும்மேலாக நீடித்த இந்தத் தர்ணா மாலை வரை தொடர்ந்தது. வளாகத்துக்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ்,மாணவர் காங்கிரஸ் தொண்டர்களை காவல்துறை கைது செய்தது. செய்தியாளர்களைக் காவல்துறை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

‘இது தேசத்துரோகம்; யாரும் தப்ப முடியாது’

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “300 எம்.பி.க்கள் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். தேர்தல் ஆணையம் இங்கிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. 300 எம்.பி.க்கள் ஞானேஷ் குமாரைச் சந்திக்க விரும்புகிறார்கள்; அவரோ அஞ்சுகிறார். மக்கள் பிரதிநிதிகளே தேர்தல் ஆணையத்தைச் சந்திக்க முடியாது என்றால் ஜனநாயகத்துக்கு என்ன பொருள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

“நமது நாட்டுக்கு இழைக்கப்பட்டிருப்பது தேசத்துரோகம். நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயகத்தை அழித்துவிட்டனர்; வாக்குத் திருட்டின் மூலம் நாட்டையே கடத்திவிட்டனர். யாரும் தப்ப முடியாது” என்றும் அவர் எச்சரித்தார். “ஞானேஷ் குமார் திருடர்தான்; ஆனால் அவருக்கு வாக்குத் திருட்டுக் கலையைக் கற்றுக்கொடுத்தவரே மிகப்பெரிய திருடர்” என்று கார்கே சாடினார்.

மூன்று கோரிக்கைகள்

ஞானேஷ் குமாரின் உடனடி பதவி விலகல், எஸ்ஐஆர் நடவடிக்கை ரத்து, நீக்கப்பட்ட வாக்காளர்கள்

அனைவரையும் மீண்டும் பட்டியலில் சேர்ப்பது ஆகியவையே எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள். வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் 13கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இரு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளை மீறி 14 முக்கிய முடிவுகளை ஞானேஷ் குமார் தன்னிச்சையாக எடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திருத்தப்பட்ட படிவம் 6-க்குத் தாங்கள் ஒப்புதல்அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் திங்களன்று தெளிவுபடுத்தியது. படிவம் 6 தொடர்பான அறிவிப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக செப்டம்பர் 26 அன்று ஆணையம் வெளியிட்ட அறிக்கை இதன்மூலம் பொய்யென அம்பலமாகிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

மாணவர், இளைஞர்கள் மீது தொடரும் அடக்குமுறை

இதனிடையே தலைநகரில் ஒரு வாரமாகவே மாணவர்களும் இளைஞர்களும் தொடர் போராட்டத்தில் உள்ளனர். அக்டோபர் 2 அன்று ஜந்தர் மந்தர் நோக்கிச் சென்ற இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களைக் காவல்துறை கொடூரமாகத் தாக்கி பேருந்துகளில் தூக்கி வீசியதாகவும் பலர் காயமடைந்ததாகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டித்தது. போராட்டச் செய்தி சேகரித்த பெண் பத்திரிகையாளர்கள், சில காவல் அதிகாரிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர். அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யாத காவல்துறை, நடவடிக்கை கோரிப் போராடிய 17 பேரைக் கைது செய்துள்ளது.

போராட்டம் தொடரும்

இத்தகைய பின்னணியில், மாவட்ட அளவிலான ‘ஜனநாயகம் காப்போம்’ பேரணிகள் அக்டோபர் 8 வரை தொடர்கின்றன. அக்டோபர் இரண்டாவது வாரத்தில்குடியரசுத் தலைவரைச் சந்திக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். நவம்பர் 1 அன்று தில்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.