ஒரு சுள்ளியை உடைக்கலாம், விறகுக் கட்டை முறிக்க முடியாது! - எஸ்.வி. வேணுகோபாலன்
4 Nov 2026, 9:00 pm

ஒரு சுள்ளியை உடைக்கலாம், விறகுக் கட்டை முறிக்க முடியாது! - எஸ்.வி. வேணுகோபாலன்

தேசத்தின் தலைநகரில் மோடி ஆட்சிக்கு எதிராக ஓர் அரசியல் புயல் மையம் கொண்டிருப்பதை, எஸ்ஐஆருக்கு எதிராக நவம்பர் 1 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிப் பேரணி உணர்த்தியது. காவி ஆட்சியாளர்களுக்கு எதிராக வீறுநடை போட்டனர் மக்கள். இந்தப் புயல் நாடு முழுவதும் சீறிப் பரவும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதற்கான அறிகுறிகள் பேரணியில் தெளிவாகத் தெரிந்தன.

பூக்களைப் பறித்தெறியலாம், வசந்தத்தின் வருகையைத் தடுக்க முடியாது என்ற சிலிக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைக் கருத்தை, அக்டோபர் 10 போராட்டத்தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நினைவூட்டியிருந்தார். நவம்பர் 1 பேரணிக்குத் தில்லிக்கு வெளியிலிருந்து ஒருவரும் வந்துவிடக் கூடாது என்று, ரயில் பயணச் சீட்டுகள் கிடைப்பதையே மூடிவைத்துக் காத்திருந்தனர் மோடியும் அமித் ஷாவும். ஆனால் பூலோகம் இருண்டுவிடவில்லை. போராட்ட வெளிச்சம் தில்லியிலிருந்து நாடு முழுவதும் பளிச்சிட்டது.

கோலத்தில் பாய்ந்தால், தடுக்கில்….

நீ கோலத்தில் பாய்ந்தால், நான் தடுக்கில் பாய்வேன் என்பார்கள் முன்னோர். நேரடிப் பயணச் சீட்டு மறுக்கப்பட்டவர்கள், பயணத்தைத் துண்டு துண்டாகப் பிரித்துப் பல ரயில்கள் மாறி வந்தனர்; ஸ்லீப்பர் பேருந்துகளில் 48 மணி நேரம் பயணம் செய்து வந்தனர்; கிடைத்த வாகனங்களைப் பிடித்துப் பேரணி தொடங்கும் நேரத்துக்குச் சரியாக வந்து சேர்ந்தனர். ஆர்எஸ்எஸ்–பாஜக ஆட்சியாளர்களைத் திணறடித்தனர் மக்கள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, வாக்குரிமை பறிக்கப்பட்ட கோபத்தோடு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

களத்தின் குரல்கள்

“அக்டோபர் 10 போராட்டத்துக்கும் வந்தேன், இன்றும் வந்துவிட்டேன். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; வாக்குரிமையை மீட்கும் போராட்டத்தில் எப்போதும் இணைவேன்” என்றார் ஒருவர். கடந்த வாரம் டைபாய்டு காய்ச்சலில் குளுக்கோஸ் ஏற்றியபடி மருத்துவமனையில் படுத்திருந்த தில்லி சிற்றுண்டிக் கடைக்காரர் அஸ்கா, “கடந்த முறை வர முடியவில்லை; இம்முறை கடமையை நழு வவிட விரும்பவில்லை” என்று சிரமத்தைப் பொரு ட்படுத்தாமல் வந்திருந்தார்.

தெலுங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்ட த்தைச் சேர்ந்த அப்துல் கலீமின் சிற்றூரில் 80

சதவீதம் பேரின் வாக்குரிமை

பறிக்கப்பட்டுள்ளது. “அந்த ஊரில்தான் பிறந்தேன், படித்தேன், வசிக்கிறேன்; அதை நிரூபித்தும் விட்டேன். அப்பா, தாத்தா இங்கே வசித்ததற்கு ஆவணம் கொண்டுவா என்றால் நான் எங்கே போவேன்?” என்று கொதித்தார் அவர். “எங்கள் மாநிலத்திலிருந்து 15 ஆயிரம் பேர் வந்திருப்போம். ரயில் சீட்டு கிடைக்கவே இல்லை; ஏராளமான முட்டுக்கட்டைகள். காசு போனால் போகட்டும், நீதிக்கான போராட்டமே முக்கியம் என்று ஸ்லீப்பர் பேருந்துகளில் வந்தோம். போராடாமல் விடமாட்டோம். ஆட்சி

மாற்றம் கண்ணில் தெரிகிறது” என்றார் அடிலாபாத்திலிருந்து வந்த ஷேக் அப்துல் ரஃபீக்.

குருகிராமிலிருந்து மனைவியோடு வந்திருந்த ஐடி ஊழியர் தேஜேந்தர், “கல்வியும் சுகாதாரமும் பறிபோகின்றன; குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையில்தான் வந்தோம். இந்தப் போராட்டம் ஒற்றுமையின் வலிமையைக் காட்டுகிறது. தனிச் சுள்ளிகளை எளிதில் உடைக்கலாம்; கட்டாகக் கட்டிய விறகை முறிக்க முடியாது. இந்தப் போராட்டம் அதற்குச் சாட்சி” என்றார்.

உலகம் பார்த்த பேரணி

இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், அல் ஜசீரா உள்ளிட்ட உலக ஏடுகள், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி என்றும், தலைமைத் தேர்தல் ஆணையரின் மோசடிக்கும் பாஜக ஆட்சியாளர்களின் தில்லுமுல்லுகளுக்கும் எதிராகத் தலைநகரில் தொடர்ந்து போராட்டங்கள் வெடிக்கின்றன என்றும் எழுதின. நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை அச்சிட்ட ஒரு கிலோமீட்டர் நீளப் பதாகையை மக்கள் ஏந்திச் சென்றதாக அல் ஜசீரா குறிப்பிட்டது. வாக்குரிமை மறுப்பை, வெட்டப்பட்ட விரலாகச் சித்தரிக்கும் அட்டைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர். பேரணி பிசுபிசுத்தது, பழைய படங்களைப் பரப்புகின்றனர் என்று வாட்ஸ்அப்பில் பரப்பி மழுப்பப் பார்த்த பாஜகவினர் அம்பலப்பட்டுப் போயினர். நெருப்பைப் போர்வையால் மூடப் பார்க்கும் முயற்சி அது. உலக ஊடகங்களின் செய்திகளே அவர்களின் பொய்யை அம்பலப்படுத்தின.

படேல் சிலையின் அடியில்

அக்டோபர் 31 அன்று குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்டச் சிலையின் அடியில் நின்ற பிரதமர் மோடி, நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் ஏன் எழுகிறது என்று சிந்திக்கவில்லை. கார்ப்பரேட்–வகுப்புவாதச் சிந்தனை அவரது கண்களை மறைத்துவிட்டது. அந்தக் கணத்திலும் எதிர்க்கட்சிகள், குறிப்பாக இடதுசாரிகள் பற்றிய அச்சம் அவரை விட்டு அகலவில்லை. நேரு மீது எப்போதும் இருந்த புகைச்சல் இப்போது இடதுசாரிகள் மீதான காய்ச்சலாக மாற, ‘நக்சல்’ முத்திரை குத்துவதிலேயே தனது உரையைச் செலவிட்டார்.

ஒன்றிய அரசுக்கு எதிரான மக்கள் சீற்றம் வலுத்து வருகிறது. இன்னும் பாதிப்பை உணராத மாநிலங்களிலும் அது பரவி, உரிய நேரத்தில் ஆர்எஸ்எஸ்–பாஜக கும்பலை ஆட்சியிலிருந்து அகற்றும். போராட்டம் முடிந்ததும் மைதானத்தில் மிஞ்சிய குப்பைகளைப் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினரே அகற்றினர் என்று தி இந்து எழுதியது. தவறான ஆட்சியாளர்களை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சேர்க்கும் பொறுப்பையும் மக்களே மேற்கொள்வார்கள்.