இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் வேளாண்மையைச் சீரழிக்கும் விவசாயிகள் சங்கத்தினர் நகல் எரிப்புப் போராட்டம்!
3 Mar 2026, 3:38 pm

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் வேளாண்மையைச் சீரழிக்கும் விவசாயிகள் சங்கத்தினர் நகல் எரிப்புப் போராட்டம்!

தாம்பரம், மார்ச் 3 - “இந்திய வேளாண் சந்தையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்கும் வர்த்தக ஒப்பந்தம், நாட்டின் முதுகெலும்பான விவ சாயத்தைப் பாழாக்கிவிடும். இந்த ஆபத்தான உடன்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகலைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் மற்றும் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தும் போரைக் கண்டித்து செவ்வாய்க் கிழமை (மார்ச் 03) தாம்பரம் தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. விவசாய விரோதக் கொள்கைகளும் பொய்த்த வாக்குறுதிகளும் போராட்டத்தைத் தொடங்கி வைத்துத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு தனது 11 ஆண்டுகால ஆட்சியில் கிராமப்புறப் பொருளாதாரத்தைச் சிதைத்து வருகிறது. 2014 தேர்தல் வாக்குறுதியின்படி சுவாமிநாதன் குழுப் பரிந்துரையை அமல் படுத்தி விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கவில்லை. மாறாக, கடந்த 11 ஆண்டு களில் நாடு முழுவதும் 5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. 86 சதவீத விவசாயிகள் கடனாளிகளாக மாறியுள்ளனர்” என்றார். மேலும் அவர் பேசுகையில், “அமெரிக்கா வின் அழுத்தத்திற்குக் கட்டுப்பட்டுப் பருத்திக்கு விதிக்கப்பட்டிருந்த 11 சதவீத இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் உள்நாட்டுப் பருத்தி விலை ஒரு குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து லிட்டர் 26 ரூபாய்க்குப் பால் இறக்குமதி செய்யப்படுவதால், எதிர்காலத்தில் நமது பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு முழுமையாகப் பாதிக்கும். இந்தியப் பாரம்பரிய விதைகளை அழிக்கும் ‘விதை மசோதா’ மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைப் பறிக்கும் ‘மின்சார மசோதா’ ஆகியவற்றை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமாக்க பாஜக துடிக்கிறது. இதனால் தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. இத்தகைய தேசவிரோதக் கொள்கைகளை அமல்படுத்தும் பாஜக மற்றும் அதற்குத் துணைபோகும் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான கூட்டணியைத் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்” எனத் தெரிவித்தார். ரகசிய உடன்பாடுகளும் சந்தைச் சுரண்டலும் விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் பேசுகையில், “ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வோடு ‘தடையற்ற வர்த்தகம்’ என்ற பெயரில் ரகசிய ஒப்பந்தங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வேளாண் விளைபொருட்கள் தங்குதடை யின்றி இறக்குமதியாகும் சூழல் உருவாகும். அவ்வாறு நடந்தால், உள்நாட்டு விளைபொருட் களுக்கு விலையில்லாமல் போவதோடு, இந்திய விவசாயமே அழிந்துவிடும்” என்று எச்சரித்தார். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள் பி. பெருமாள், பி. துளசி நாராயணன், இரா. சரவணன், மத்தியக்குழு உறுப்பினர் எஸ். அனு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம். சந்திரன், தமிழ்நாடு அடி மனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநிலத் தலைவர் வ. செல்வம் உள்ளிட்ட திரளான விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.