நூலகம் செல்வோம்! - கடவூர் மணிமாறன்
11 Jul 2026, 9:11 pm
<p><strong>நூலகம் செல்வோம்! - கடவூர் மணிமாறன்</strong></p><p>நூலகம் சென்று நூல்கள் படிப்பது சாலவும் நன்றெனச் சாற்றுவர் சான்றோர்! ஞாலம் மதிக்கும் சிந்தனை வளர்க்கும்! காலம் கடந்தும் கருத்தில் இனிக்கும்! நனிபுகழ் சேர்க்கும் நாட்டம் உடையோர், அனைத்தும் அறியும் ஆர்வம் கொண்டோர், இனிக்கப் பேசும் இயல்பினர் எவர்க்கும் அணிபுகழ் சேர்க்கும் அறிவுக் கோட்டம்! அறிவியல் மருத்துவம் அரசியல் வரலாறு பொருளியல் உளவியல்,பொறுப்பைத் தந்திடும் அறவியல் அருளியல் அணுவியல் வானியல் திறம்பட உரைக்கும் நூற்கரு வூலம்! உலகம் முழுதும் உறைந்து கிடக்கும் பலதுறை அறிவைப் பாங்குடன் வழங்கும்! கலகம் விளைக்கும் காரிருள் விலக்கும்! கண்ணியம் வளர்க்கும்!கவனம் ஈர்க்கும்! நாளிதழ்,கிழமை, திங்கள் ஏடுகள் ஆளுமைத் திறத்தால் அணுகும் முறையும் வாழும் மனங்களை வரலா றாக்கும்! யாழிசை போலும் இன்பம் சேர்க்கும்! அறிவுக் கண்களை அகலத் திறக்கும்; பெருமை சிறுமை யாதென உணர்த்தும்; சிறப்பை எய்திடச் செல்வோம் நூலகம் மறக்க வேண்டாம்!மாண்பை வளர்ப்போம்!</p>
