ஓசூர்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுக!
21 Jan 2026, 3:58 pm
<p><strong>ஓசூர்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுக!</strong></p>
<p>கிருஷ்ணகிரி, ஜன.21 - ஒன்றிய அரசு அறிவித்த ஓசூர் - பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கார்நாடக தமிழக எல்லையான ஜூஜூவாடியில் இருந்து ஓசூர் வரை செவ்வாயன்று (ஜன.20) இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,பெங்களூரு நாகர்கோவில் தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும், ஏற்கனவே இயக்கப்பட்ட பெங்களூரு - நாகர்கோவில் படுக்கை வசதி உள்ள சாதாரண ரயிலில் 5 பெட்டிகளை குறைத்ததை திரும்பப் பெற வேண்டும்,தமிழ்நாட்டின் ஓசூர் பகுதி விமான நிலையம் திட்டத்தை நிராகரித்து,ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு மாற்றுவதை கைவிடவேண்டும், கொரோனாவை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான 50 விழுக்காடு ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்கள் ஓசூர் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 20 ஆம் தேதி கர்நாடகா தமிழக எல்லையான சிபிஎம் மாநகர செயலாளர் எம்.ஜி. நாகேஷ்பாபு தலைமையில் துவங்கிய இருசக்கர வாகன பிரச்சார பயணத்தை கட்சியின் மாநில குழு உறுப்பினரும் திண்டுக்கல் நாடாளுமன்றஉறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்,செயற்குழு உறுப்பினர் லெனின்முருகன்,மாவட்ட குழு உறுப்பினர் எம்.புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர்.செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம் என்.ஸ்ரீதர்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சி.பிரகாஷ் கலந்து கொண்டனர். தமிழகத்தை வஞ்சிப்பதா? முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சச்சிதானந்தம், ஓசூரில் இருந்து பெங்களூருக்கும் பெங்களூரில் இருந்து ஓசூருக்கும் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இவர்கள் பேருந்துகள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அதிக அளவிலான விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையை தவிர்ப்பதற்கு ஓசூர் பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோடி அரசே மெட்ரோ ரயில் திட்டம் ஓசூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் தற்போது இரண்டு மாநில மின் அமைப்புகளுக்குமான தொழில்நுட்ப காரணம் இடையூறாக உள்ளது என கூறி திட்டத்தை இழுத்தடிக்கிறது. அதேபோல் தமிழகம் அறிவித்த ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு திடீரென ஹெச்ஏஎல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது என ஒன்றிய அரசு கூறுகிறது. காரணம் 75 கிலோமீட்டர் அப்பால் இருக்கும் ஓசூரில் விமான நிலையம் ஆரம்பிப்பது ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு இடையூறாக இருக்கும் என கூறுகின்றனர். பெங்களூரில் ஹெச்ஏஎல் பகுதியின் இருக்கும் விமான நிலையம் இடையுறராக இல்லையா? தமிழ்நாட்டிற்கு விரோதநிலை ஓசூர் தமிழ்நாட்டுக்குள் உள்ளது என்பதாலும், தமிழ்நாட்டுக்கு விரோதமான மனநிலையில் ஒன்றிய பாஜக அரசு இருப்பதாலும் தான். ஒன்றிய அரசுடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் விமான நிலையம் ஆரம்பிக்க திட்டமிட்டு வருகின்றனர். ஓசூர் தொழிற்சாலை பகுதிகளில் இருந்து சரக்குகள் எடுத்துச் செல்லவும் சுலபமாக மக்கள் சென்னைக்கு சென்று வரவும் ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை ரயில் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வசதியாகவும்,அரசுக்கு லாபகரமாகவும் இருக்கும். 82 ஆண்டுகளுக்குமுன்பிருந்தே மக்கள் கோரிவரும் இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு பொது பட்ஜெட்டில் ரூ.198 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தனர். ஆனால் ஓசூர் ஜோலார்பேட்டை ரயில் திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழகத்தை ஓன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.9000 கோடியும்,கோவை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.8500 கோடியும் ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு தற்போது கிடப்பில் போட்டுள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் உள்ள மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை மறுக்கும் ஒன்றிய அரசு,6 லட்சம் மக்கள் உள்ள நொய்டாவிலும்,15 லட்சத்திற்கும் குறைவாய் உள்ள குர்கிராமிலும் மெட்ரோ திட்டத்தை துவக்குகின்றனர். இந்திய நாட்டின் ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வருமானத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க ஜிஎஸ்டி பங்கை, வருமானத்தை செலுத்தி கொண்டிருக்கிறது.மோட்டார் வாகனங்கள் உற்பத்தியிலும் உரங்கள் உற்பத்தியிலும்,எல்லா வகையான வருமானத்திலும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டியை மற்ற மாநிலங்களை விட மிக அதிகப்படியாக பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டிற்கான திட்டங்களை எல்லாம் ஒன்றிய அரசு நிராகரித்துக் கொண்டு இருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இப்படி அனைத்திலும் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய பாஜகவும் தமிழகத்தில் பாஜகவுடன் தங்களை காப்பாற்றிக் கொள்ள கூட்டு சேர்ந்துள்ள அதிமுகவும் வரும் தேர்தல்களில் தமிழகத்தில் மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படுவீர்கள். சாதாரண மக்களுக்கான ரயில் எங்கே? வந்தே பாரத்.நமோ பாரத் என பல பெயர்களில் வசதியானவர்களுக்கான ரயில்கள் விடப்படுகின்றது,சாதாரண,நடுத்தர மக்களுக்கான ரயில் விடுவதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை.இந்த ரயில்வே திட்டங்களில் பல ஆண்டுகளாக நிரந்தர பணியாளர்கள் எடுக்கப்படாமல் அனைத்து துறைகளையும் பெரும் முதலாளிகளுக்கு விற்றுவிட்டு அந்தத் துறைகளை குறைந்த வருமானத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை மட்டுமே எடுக்கின்றனர். சிபிஎம் போராடும் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் எதிரான ஒன்றிய அரசின் அரசின் கொள்கைகளை எதிர்த்தும்,ஓசூர் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்காகவும் திட்டத்திற்காகவும்,ஓசூர் ஜோலார்பேட்டை ரயில் பாதை அமைத்திடவும் ஓசூர் பகுதி விமான நிலையத்திற்காகவும் மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி தொடர்ந்து போராடும் என்றார். பொதுக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி,மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர் சேகர், மகாலிங்கம், என் ஸ்ரீதர், ஜேம்ஸ் அஞ்சலா மேரி, சி பிரகாஷ் , சி.பி.ஜெயராமன், நடராஜன், நாகராஜ் ரெட்டி ஒன்றிய செயலாளர் ஆர்.கே. தேவராஜ் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நஞ்சா ரெட்டி,மாவட்ட செயலாளர் இளவரசன் மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.எம்.இராதா,விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ், சிபிஎம் மாநகர குழு உறுப்பினர்கள் பி.ஜி. மூர்த்தி, சீனிவாசன், ரவி, மணி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகர குழு உறுப்பினர் உதய பாரதி நன்றி கூறினார்.</p>
