சூரிய இறகுகளில் பறக்கிறேன் சந்திர ஓளியில்
29 Nov 2025, 1:28 pm

அப்பா..!

சூரிய இறகுகளில் பறக்கிறேன் சந்திர ஓளியில் குளிர்கிறேன் நட்சத்திர மின்னலாய் சிலிர்க்கிறேன் உன் கொஞ்சும் மொழியால் மண்ணில் பொதிந்த இரும்புத் துகளாய் ஒட்டிவிடுகிறேன் ஜீவநதியாய் பிரவாகமெடுகிறேன்! அப்பா என்ற ஒற்றை வார்த்தையில்.. - ராமு.அரவிந்தன் 11ஆம் வகுப்பு, திருப்பூர்

புதிர் விளையாட்டு

வேடிக்கையில் அறிவுக்கு விருந்தாகவும் அமையக் கூடியது எது? ஆம் செல்லங்களே, புதிர் விளையாட்டுதான் அது. நம் உடன்பாட்டின்படி, முதலிலேயே விடையைப் பார்ப்பதில்லை என்ற உறுதியோடு இந்தப் புதிரை அவிழ்க்க முயலுங்கள் பார்க்கலாம். அதெப்படி ஒரே ஆண்டில் 3 வயது அதிகரிக்கும்? புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிக்கிட்டே நம்ம தேன்மொழி கிட்ட, “உன் வயசு என்ன,”ன்னு கேட்டேன். அவ சிரிச்சுக்கிட்டே, “முந்தாநாள் என் வயசு 11. அடுத்த வருசம் எனக்கு 14 வயசு ஆகும்,”னு சொல்லிட்டுக் குறும்புத்தனமா கண் சிமிட்டுறா. அது எப்படி சாத்தியமாகும்? யோசிச்சிட்டீங்களா? நீங்க கண்டுபிடிச்சது சரிதானான்னு இப்ப விடையைப் பாருங்க.

விடை

தேன்மொழியின் பிறந்தநாள் டிசம்பர் 31 ஆக இருந்தால் இது சாத்தியமாகும். இன்றைக்குப் புத்தாண்டு என்றால் முந்தாநாள் டிசம்பர் 30 ஆம் தேதி என்றாகிறது, இல்லையா? அன்றைக்கு அவளுடைய வயது 11 என்றால், மறுநாள், அதாவது நேற்று 12 வயது ஆகிவிடும். இந்த ஆண்டு டிசம்பர் 31 வருகிறபோது 13 வயதாகிவிடும். அப்படியானால் அடுத்த ஆண்டு டிசம்பர் 31இல் 14 வயது. இதை சரியாக ஊகித்த தங்கங்களுக்கும் ஊகிக்க முயற்சி செய்த பட்டுகளுக்கும் பாராட்டுகள்.

நாலா.. மூணா..??

பள்ளிக்கு வந்திருந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர், தனது பேச்சால் மாணவர்களைக் கட்டிப் போட்டிருந்தார். “அடுத்தவர் மீது பழி போடுவதற்கு முன்பாக, நம்மை முதலில் உற்றுப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு விரலை நீட்டி தவறைச் சுட்டிக்காட்டுகையில் மற்ற நான்கு விரல்கள் நம்மை நோக்கி நீண்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார். அப்போது மாணவர்களில் ஒருவர் ஏதோ சொல்ல முயன்றார். மாணவர்களைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியர்களில் ஒருவர், “ஏய்.. சும்மா உக்காரு” என்று அதட்டினார். நம்பிக்கைப் பேச்சாளர் கவனித்து விட்டார். “சொல்லுப்பா, எதுவும் கேக்கனுமா..?” “இல்ல சார்.. எப்புடி நீட்டினாலும், மூணு விரல்தான் என்னைய நோக்கி நீளுது..” யாரும் சொல்லாமலேயே அத்தனை மாணவர்களும் விரலை நீட்டிப் பார்த்தார்கள்.