சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஐஸ் பிளாண்ட் பாதிப்புக்குள்ளாகும் 7 கிராம மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
13 Dec 2025, 5:13 pm
<p><strong>சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஐஸ் பிளாண்ட் பாதிப்புக்குள்ளாகும் 7 கிராம மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்</strong></p>
<p>மயிலாடுதுறை, டிச.13- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, குடியிருப்புகள்-கல்வி நிலையங்கள்-விடுதிகள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஐஸ் பிளாண்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்தும் தேவகுபி ஐஸ்பிளாண்ட் அமைத்திட ஒப்புதல் வழங்கிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை கண்டித்தும், பாதிப்புக்குள்ளாகும் 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் 2 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கோட்டாச்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களிடம் எந்தவித கருத்தையும் கேட்காமல் நேரடி ஆய்வையும் மேற்கொள்ளாமல், மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக தேவகுபி என்ற பெயரில் ஐஸ்பிளாண்ட் அமைத்திட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அனுமதியளித்து, பிளாண்ட் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக ஐஸ் பிளாண்ட் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பொறியாளர் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 300-க்கும் மேற்பட்ட மக்கள் கேசவன்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை புதனன்று துவக்கினர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் கண்டுக் கொள்ளாததால் வியாழனன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் அமைதியான வழியில் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், பொறையார் காவல்துறை போராட்டத்தை ஒருங்கிணைத்த 10-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். தகவலறிந்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ், தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், விசிக உள்ளிட்ட கட்சியினர், கைது செய்யப்பட்டவர்களை மீட்டு வந்து மீண்டும் அதே இடத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். தரங்கம்பாடி வட்டாட்சியர் சதீஷ் பேச்சுவார்த்தை நடத்தி திங்களன்று கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.</p>
