முந்தய பக்கம்

மானுடத்தின் ஈரம் வறண்டு போனதோ?

4 Jul 2026, 9:04 pm
மானுடத்தின் ஈரம் வறண்டு போனதோ?
<p><strong>மானுடத்தின் ஈரம் வறண்டு போனதோ?</strong></p><p>நான் தான் நீர்... ஆதிப் பெருவெளியின் முதல் துளி மானுடத்தின் தொட்டில் அறிவியலின் ஆதாரம்! ​உயிர்களின் தாகம் தீர்க்கும் நான் இன்று... அமிலங்களின் நஞ்சில் மடிந்து கொண்டிருக்கிறேன். ​அறிவியலின் உச்சத்தையும் மானுடத்தின் வீழ்ச்சியையும் என் மௌன அலைகள் அளந்து கொண்டிருக்கின்றன! ​அன்று... என் நதிக்கரையில் தான் நாகரிகங்கள் முளைத்தன. மனிதன் என் ஈரத்தைத் தொட்டுத் தன் மெய்யை மெய்யாக்கினான்; அப்போது... மானுடம் நிமிர்ந்து நின்றது. ​இன்று... </p><p>நெகிழிப் பாட்டில்களில் என்னைச் சிறைப்பிடித்து விலை பேசி விற்கிறான்! எனக்கு விலை வைத்த போதே மானுடத்தின் ஈரம் வறண்டுபோனது! ​தாகத்துக்கு நீர் தருவது அறம்; நீரை விலைபேசி விற்பது அறிவியல் வணிகத்தின் அறமோ? வீழ்ந்தது தண்ணீரின் சுவை அல்ல, மனிதநேயத்தின் ஊற்று... ​செயற்கைக் குழந்தையைப் போல் செயற்கை நீராய் நான்... மூலக்கூறுகளைப் பிரித்துப் பெருமை கொண்ட மானுடம், என் புனிதத்தை மறந்து போனதோ? ​ஆலைக் கழிவுகளை என் நரம்புகளில் செலுத்தி, உன் அழிவைத் தேடிக் கொள்கிறாய்! அணு உலைகளின் வெப்பம் தணிக்க நீயோ, என் குளுமையைப் பேரழிவாக்குகிறாய்! ​பூமியின் அடிவயிற்று நீரை அடியோடு உறிஞ்சிவிட்டு, சந்திரனிலும் செவ்வாயிலும் நீரைத் தேடி அலைகிறாய்! இயற்கையின் சமநிலையை இழந்த புள்ளியில், அறிவியலின் விவேகம் விழுந்து கிடக்கிறது! ​அறிவு வளர வளர அறம் சுருங்குவது ஏன்? கருவிகள் பெருகப் பெருக கருணை வற்றுவது ஏன்? அறிவியலும் மானுடமும் இரண்டுமே இரு கரைகள்; கரைகள் உடைந்தால் வெள்ளம் விழுங்குவது நம் இருவரையும் தான்......</p>
Share
FacebookXWhatsAppTelegram