மனித குலமும் உணவும்: வேட்டைச் சமூகத்திலிருந்து கார்ப்பரேட் ஆதிக்கம் வரை - அ. மணவாளன்,
yesterday

மனித குலமும் உணவும்: வேட்டைச் சமூகத்திலிருந்து கார்ப்பரேட் ஆதிக்கம் வரை - அ. மணவாளன்,

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான அடிப்படையாக நீரும் உணவும் விளங்குகின்றன. பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து தோன்றிய மனிதன், ஆரம்பத்தில் காடுகளில் கிடைத்த பழங்களையும் கிழங்குகளையும் உண்டு, விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தான். இயற்கைச் சூழலைச் சிதைக்காமல், தனக்குத் தேவையான உணவை மட்டும் பெற்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்தான். அன்றைய வேட்டைச் சமூகத்தில் உணவு உற்பத்தி எதுவும் கிடையாது; தனக்கான உணவைத் தானே தேடிப் பெற்றனர்.

வேளாண் சமூகமும் தொழில் புரட்சியும்

நதிகளை ஒட்டி நிலைபெற்ற வேளாண் சமூகத்தில், முறையான உணவு உற்பத்தி தொடங்கியது. உடல் உழைப்பு நிறைந்த அப்போதைய காலத்தில் உணவு கலப்படம் இன்றி மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். எனினும், பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வளர்ச்சி இல்லாததால் காலரா போன்ற நோய்களால் பலரும் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த அறிவியல் தொழில் வளர்ச்சியால் பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும் ஏற்பட்டு உணவுப் பஞ்சம் தீர்க்கப்பட்டது. எனினும், அனைவருக்கும் சரிவிகித உணவு கிடைக்காததும், உடல் உழைப்பின்மையால் ஏற்படும் நவீன நோய்களும் மனிதர்களைப் படுத்தியெடுத்தன.

கலப்படமும் சுற்றுச்சூழல் மாசுபாடும்

21-ஆம் நூற்றாண்டில் உணவு உற்பத்தி பெருமளவில் பெருகியிருந்தாலும், வணிக நோக்கத்துக்காகப் பால், எண்ணெய், தானியங்கள், மாமிசம் என அனைத்திலும் செய்யப்படும் கலப்படங்கள் மனித உடலின் முக்கிய உறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கின்றன. உணவின் சுவைக்காகச் சேர்க்கப்படும் நச்சுப் பொருட்கள் உடலைக் கெடுக்கின்றன. மேலும், தொழிற்சாலைக் கழிவுகளும் முறையற்ற பராமரிப்பும் நிலம், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தி நோய்களை உருவாக்குகின்றன. உணவு வணிகமயமாவதால் அதன் பாதுகாப்பு முற்றிலுமாக நலிவடைந்துள்ளது.

கார்ப்பரேட்மயமாதலும் உணவுப் பாதுகாப்பின்மையும்

அறிவியல் வளர்ச்சி இருந்தபோதிலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முறையான கொள்கைகள் அரசிடம் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் பதுக்கலால் விலைவாசி உயர்ந்து, சாமானிய மக்கள் தரமான உணவை வாங்கும்சக்தியை இழக்கின்றனர். இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு இல்லாததால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள்ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். முதலாளித்துவ லாப நோக்கைக் காட்டிலும், உணவு உற்பத்தி மற்றும்விநியோகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தால்தான் மக்களுக்குத் தரமான பாதுகாப்பான உணவை வழங்கமுடியும்.