தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புத்தகம் படிப்பது எப்படி? - எஸ். ராமகிருஷ்ணன்

18 Jul 2026, 10:03 pm
புத்தகம் படிப்பது எப்படி? - எஸ். ராமகிருஷ்ணன்

புத்தகம் படிப்பது எப்படி? - எஸ். ராமகிருஷ்ணன்

புத்தகம் படிப்பது என்பது எளிமையான செயல் இல்லை; அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது, எப்படிப் படிப்பது, ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன, சில புரிவதேயில்லை என்றெல்லாம் வாசிப்பு குறித்துப் பல கேள்விகள் இருக்கின்றன. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்கப்படுகிறது? சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருடங்களாக யாவருக்கும் பிடித்திருக்கிறது? படிப்பதனால் என்ன பயன் இருக்கிறது? இப்படிப் புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாக நீண்டுகொண்டே செல்கின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளரும் அவரளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார். நான் படிக்கத் துவங்கிய வயதிலும் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்கத் துவங்கும் ஒரு இளம் வாசகரும் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறார். இந்தக் கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்கச் சிபாரிசு செய்வது வர்ஜீனியா வுல்ப் (Virginia Woolf) 1926-ஆம் ஆண்டு எழுதிய “How Should One Read a Book?” என்ற கட்டுரையைத்தான். பல வருஷங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் வாசிப்புக்கு மிக நெருக்கமாகவே உள்ளது.

வாசிப்பிற்கான பரிந்துரைகள்

வாசிப்புக்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே; அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது என்ற எச்சரிக்கையோடு வர்ஜீனியா தன் கட்டுரையைத் துவங்குகிறார். எப்படிப் படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் யாருக்கும் பொருந்துவதில்லை. திறந்த மனதோடு அணுகுதல்: எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் முன்முடிவுகளின்றித் திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போலப் பாவிக்காதீர்கள். உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக்கொண்டு, புத்தகத்தின் மீது தீர்ப்புச் சொல்வதற்காகப் படிக்க முயற்சிக்க வேண்டாம். ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ, பிரபலமாக இருப்பதாலோ அது நல்ல புத்தகமாக இருக்கப் போவதில்லை. மாறாக, உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை முழுமையாக அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும், நேரமும், விருப்பமுமே வாசிப்பில் முக்கியமானவை. முழுமையான ஈடுபாடு: எழுத்தாளர்களை விமர்சனம் செய்வது எளிமையானது; ஆனால், அவர்களைப் புரிந்துகொள்வது கடினமானது. எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை: அகப்பார்வை (Perception): நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. கற்பனை (Imagination): படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகளைக் கற்பனை செய்து புரிந்துகொள்ளும் இயல்பு. கற்றல் (Learning): எழுத்தின் வழியாகத் தகவலாகவோ, வாழ்வியல் அனுபவமாகவோ, உண்மையாகவோ நாம் கற்றுக்கொள்ள முன்வருவது.

புரியாமை ஒரு தடையல்ல

ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துப் பாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காகப் புத்தகம் தவறானது என்ற அவசர முடிவுக்கு வர வேண்டாம். ஆத்திசூடியில் வரும் ‘ஙப்போல்வளை’ என்பதற்கு இன்றும் பலருக்குப் பொருள் தெரிவதில்லை. கண்ணால் மரத்தைப் பார்த்துவிட முடியும், அதன் வேர்களைக் கண்ணால் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது; புத்தகங்களும் அப்படித்தான். புத்தகங்களுடனான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஜனரஞ்சகமான நாவல்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போலச் செவ்வியல் படைப்புகள் பலமுறை வாசிக்கப்படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே காரணமாகும். சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியத் தரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது; அதேநேரம் வெறும் சுவாரஸ்யம் மட்டுமே ஒருபோதும் இலக்கியமாகிவிடாது. ஒரு புத்தகம் புரிந்துகொள்ளப்படாமல் போவதற்குப் புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவருக்கும் சமபங்கு இருக்கிறது. மொழி அமைப்பு, பரிச்சயமற்ற பேசுபொருள் அல்லது அரூபமான வெளிப்பாடு ஆகியவை புரிதலைச் சிரமமாக்கலாம். சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்கக் கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் எளிதில் புரிந்துவிடும். சமூக, கலாச்சார, சரித்திர அறிவு மற்றும் சங்கேதங்களைத் தொடர்ந்த வாசிப்பும் புரிதலுமே சாத்தியமாக்குகின்றன. எழுத்தாளரும் வாசகரும் நாவலை வாசிப்பது என்பது ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தைத் தூரத்திலிருந்து பார்த்துவிட்டுச் செல்வதைப் போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. ஒரு நண்பரைப் போல எழுத்தாளரோடு சேர்ந்து பயிலுங்கள். எழுத்தாளர் பிரபலமானவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், விக்டர் ஹியூகோ, டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி போன்ற மாபெரும் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிகக் குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது; நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம் குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகர் அவரது ஒரு குறிப்பிட்ட மனநிலையிலிருந்தே படிக்கிறார். கதை, கவிதை, நாவல், கட்டுரை என ஒவ்வொரு வடிவத்திற்கும் வாசகர் தன்னிச்சையாக வெவ்வேறு விதமான புரிதல் நுட்பங்களைப் பயன்படுத்துகிறான். இன்று வாசகர் ஒரு ரசிகர் என்பதைத் தாண்டி, சமூக, உளவியல், தத்துவக் கோட்பாடுகள் மற்றும் விமர்சனப் பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகும் ஆய்வாளராக மாறியுள்ளார். வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிப் பார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. அப்போதுதான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும். ஜோர்ஜ் லூயி போர்ஹே கூறுவதுபோல, “வாசகர் என்பதே ஒரு கற்பனைக் கதாபாத்திரம் தான்; அந்த முகமூடியை யார் வேண்டுமானாலும் அணிந்துகொள்ள முடியும்.”

வாசிப்பு குறித்த எனது பார்வை

வர்ஜீனியா வுல்பின் கட்டுரையைப் போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என் வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காமம், மூப்பு, அதிகாரம், வெற்றி தோல்வி என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கு விடை தேட முயற்சிக்கிறது. அன்றாட வாழ்க்கையில் உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், இயலாமை ஆகியவற்றைக் கடந்து மனிதரை வாழ்வின் மீது பற்றுக்கொள்ள வைக்கிறது. மனித நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், புத்தகங்கள் மனித வாழ்வின் சின்னஞ்சிறு ஆவணங்கள். அதன் வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும்; நிகழ்காலத்தைச் சந்திக்கத் துணை கொள்ளலாம்; எதிர்காலத்தைத் திட்டமிட முடியும். நன்றி: புக்டே

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.