எவ்வாறு அணுகுவது?
30 May 2026, 10:46 pm
<p><strong>எவ்வாறு அணுகுவது?</strong></p><p>சிந்தித்துப் பார்க்கிறேன்... ஒருவரை நாத்திகராக உருவாக்க வேண்டும் என்றால் அல்லது அப்படி ஒருவர் உருவாக வேண்டும் என்றால், அது விஞ்ஞானப்பூர்வமான தனி உரையாடல்கள், கூட்டு உரையாடல்கள் மற்றும் தத்துவப் பகிர்வுகள் மூலமாகத்தான் சாத்தியமாகும். நான் மிகச் சுருக்கமாகச் சொல்வேன்: “உலகம் படைக்கப்பட்டது” என்று நம்புபவர் ஆத்திகர்; “உலகம் உருவானது” என்று நம்புபவர் நாத்திகர். பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள். ஒற்றை செல் உயிரினமான அமீபாவிலிருந்து இந்த உலகம் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று தத்துவங்களின் அடிப்படையில் பேசத் தொடங்கி, ‘டயலெக்டிக்கல் மெட்டீரியலிசம்’ (Dialectical Materialism) என்கிற இயங்கியல் வாதத்திற்கு வருவார்கள். உதாரணமாக, கார்ல் மார்க்ஸ் “மதம் ஒரு அபின், ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சு” என்று சொன்னால், அதற்கான காரணத்தை தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும். அதேபோல, சார்லஸ் டார்வின் தன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்தபோது, அவர் எந்த மத நம்பிக்கையையும் நேரடியாகக் கேலி செய்யவில்லை. மாறாக, இயற்கையின் தரவுகளையும் ஆதாரங்களையும் மட்டுமே தர்க்கப்பூர்வமாக முன்வைத்தார். அதுவே ஒரு மாபெரும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டது. இதை விடுத்து, வெறுமனே மத வழிபாடுகளையோ, சடங்குகளையோ அல்லது மக்களின் நம்பிக்கைகளையோ கேலி செய்வதன் மூலம் ஒருவரைப் பகுத்தறிவுவாதியாக மாற்றிவிட முடியாது. ஒருவருக்கு நோய் வரும்போது, அவர் செய்யும் பிரார்த்தனையைக் கிண்டல் செய்வதை விட, மருத்துவ அறிவியலின் அவசியத்தை அவரிடம் பொறுமையாக எடுத்துரைப்பதே உண்மையான விழிப்புணர்வாக மாறும். மாறாக, நம்பிக்கைகளைக் கேலி செய்வது கடுமையான எதிர்விளைவுகளையே உண்டாக்கும். கடவுள் மீது நம்பிக்கை உள்ள ஒருவரிடம் கடவுளை நிந்தித்துப் பேசும்போது, அவர் ஒரு மதவெறியராக மாறிவிடுகிற அபாயமே இங்கு அதிகம். சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அதை ஆதரிக்கிறவர்கள், பகுத்தறிவு என்ற பெயரில் எந்தவொரு தனி வழிபாடுகளையோ, சம்பிரதாயங்களையோ, மத உணர்வுகளையோ சிறுமையாகப் பேசவோ, சட்டென்று நேரடியாகத் தாக்கிப் பேசவோ கூடாது. அப்படிப் புண்படுத்தினால், சமூக நல்லிணக்கம் உண்டாகாமல் மதப் பூசல்கள்தான் பெருகும். புரிதல்களையும் மாற்றங்களையும் தர்க்கப்பூர்வமான உரையாடல்கள் மூலமாகத்தான் கொண்டுவர முடியும். இதைத்தான் விஞ்ஞானக் கழகத்தாரும், கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதனால்தான் கம்யூனிச நாடுகளில் கூட வழிபாட்டுத் தலங்கள் தனி மரியாதையுடன் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.</p>
