பிரதமர் மோடியின் கரிசனம் இன்னும் எத்தனை நாளைக்கு?
7 Apr 2026, 5:38 pm
<p><strong>பிரதமர் மோடியின் கரிசனம் இன்னும் எத்தனை நாளைக்கு?</strong></p>
<p>“பிரதமர் மோடி தடுக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கும்” என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வெளி யிட்டுள்ள தகவல், தினமலர் நாளிதழில் (2.4.26) செய்தியாக வந்துள்ளது. சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த அனுமதிக்காத தால் மக்கள் தப்பித்துள்ளதாக அந்த அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இந்தத் தற்காலிகக் கரிசனம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே தற்போதைய கேள்வி. தனியார் நிறுவனங்களை ஏன் தடுக்கவில்லை? கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தைப் பொதுத்துறை நிறு வனங்களை ஏற்கச் சொன்ன பிரதமர், நயாரா, ஷெல் போன்ற தனியார் நிறுவனங் களை ஏன் அவ்வாறு செய்யச் சொல்ல வில்லை? அந்த நிறுவனங்கள் ஏற்கெனவே விலையை உயர்த்திவிட்டன. அவற்றை ஏன் பிரதமர் தடுக்கவில்லை? கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் குறைந்தால் பாஜக-வுக்குக் கிடைக்கும் ‘நன்கொடை’ பாதிக்கப்படும் என்பதாலா? பொதுத் துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால், அதையே காரணம் காட்டி அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிடலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் அடிப்படைக் கொள்கை. விலைக்கட்டுப்பாடு - முடியாதா? சர்வதேசச் சந்தையில் விலை மாறினா லும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை யைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அத்தகைய ‘எண்ணெய் தொகுப்பு நிதி’ (Oil Pool Fund) என்ற அமைப்பு இந்தி யாவில் 1975 முதல் 2002 வரை சிறப்பாக இயங்கியது. சர்வதேசச் சந்தையில் விலை குறைவாக இருக்கும்போது உபரி நிதியைச் சேமித்து, விலை அதிகமாகும் போது அதை நுகர்வோருக்குப் பயனாக மாற்றுவதே இதன் பணி. இந்தச் சிறப்பு அமைப்பைத்தான் 2002 ஏப்ரல் 1-இல் அன்றைய பாஜக பிரதமர் வாஜ்பாய், தாராளமயக் கொள்கையின் பெயரால் கலைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் இதனை கடுமையாக எதிர்த்தும் கூட, கார்ப்ப ரேட் நலம் கருதி மக்கள் நலனைக் காவு கொடுத்தது வாஜ்பாய் அரசு. விலைக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்த பின், சர்வ தேசச் சந்தையில் விலை உயர்ந்தபோது இங்கே உயர்த்தப்பட்டது; ஆனால் குறைந்தபோது குறைக்கப்படவில்லை. தேர்தல் காலக் கரிசனம் தற்போது 5 மாநிலத் தேர்தல் நடை பெறவுள்ளதால் மட்டுமே இந்த விலை உயர்வு தள்ளிப் போடப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் “விலை உயர்வு தவிர்க்க முடியாதது” எனக் கூறி மக்கள் தலை யில் சுமை ஏற்றப்படும். இப்போது காட்டப் படும் இந்த கரிசனம் வாக்குப்பதிவு வரை தாக்குப் பிடிக்குமா அல்லது தேர்தல் முடிவு வெளிவரும் வரை நீடிக்குமா என்பது மோடிக்கே வெளிச்சம். மக்கள் நலனை விடத் தேர்தல் லாபமே முக்கியம் என்ற பாஜக-வின் போக்கு இதில் அப்பட்டமாகத் தெரிகிறது. -ப.முருகன்</p>
