தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உலக உணவுப் பொருளாதாரம் குழந்தைகளைக் கொல்வது எப்படி? - பேராசிரியர் விஜய் பிரசாத்

1 hour before
உலக உணவுப் பொருளாதாரம் குழந்தைகளைக் கொல்வது எப்படி? - பேராசிரியர் விஜய் பிரசாத்

உலக உணவுப் பொருளாதாரம் குழந்தைகளைக் கொல்வது எப்படி? - பேராசிரியர் விஜய் பிரசாத்

ஒவ்வொரு ஆண்டும், பாதுகாப்பற்ற உணவு 86.6 கோடி பேருக்கு நோய்களையும் 15 லட்சம் மரணங்களையும் ஏற்படுத்துகிறது. இதில் மிகக் கொடூரமான உண்மை என்னவென்றால், உணவு மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறு குழந்தைகள் ஆவர். இது, உணவை மக்களின் அடிப்படை உரிமையாகக் கருதாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் தற்போதைய உலக உணவுப் பொருளாதாரத்தின் கணிக்கக்கூடிய ஒரு மோசமான விளைவே ஆகும்.

உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை

உலக சுகாதார அமைப்பு (WHO) உலகின் உணவு அமைப்புகளின் அவல நிலை குறித்த மிக அதிர்ச்சிகரமான ஒரு மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய மதிப்பீட்டின்படி, அசுத்தமான மற்றும் பாதுகாப்பற்ற உணவை உட்கொள்வதால் உலகளவில் ஒன்பது பேரில் ஒருவர் வீதம் நோயவாய்ப்படுகின்றனர். ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்கள் மட்டுமே உலகளாவிய உணவுப் பாதிப்புகளில் முக்கால் பகுதியையும், உலகளாவிய மரணங்களில் 60 சதவீதத்தையும் கொண்டுள்ளன. இந்த நெருக்கடிக்கு எவ்விதத்திலும் காரணம் அல்லாத குழந்தைகளே இதன் மிகப்பெரிய சுமையைத் தாங்குகிறார்கள். சிறு குழந்தைகள், பெரியவர்களை விட பாதுகாப்பற்ற உணவுகளால் நோய்வாய்ப்படும் அபாயத்தை மூன்று மடங்கு அதிகமாக எதிர்கொள்கின்றனர். உலக மக்கள் தொகையில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெறும் 9 சதவீதம் மட்டுமே உள்ள போதிலும், உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பகுதியை அவர்களே எதிர்கொள்கின்றனர். பாதுகாப்பற்ற உணவு உலகளவில் 1,43,000 குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது. இவை வெறும் எண்கள் அல்ல; தடுக்கக்கூடிய நோய்களால் பாதியிலேயே கருகிப்போன பிஞ்சு உயிர்கள், குடும்பங்களின் ஆறாத் துயரம் மற்றும் ஒரு சமூகத்தின் எதிர்கால இழப்பு ஆகும்.

தொழில்நுட்பத் தீர்வுகளுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பு நெருக்கடி '

இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு வழக்கமாகச் சொல்லப்படும் தீர்வுகள் தொழில்நுட்ப ரீதியானவை மட்டுமே. சிறந்த ஆய்வுகள், கடுமையான விதிமுறைகள், மேம்பட்ட சுகாதாரம் மற்றும் திறமையான கண்காணிப்பு மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்று நமக்குக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை; அவசியமானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அசுத்தங்களைத் தடுப்பது எப்படி என்ற அறிவு பல பத்தாண்டுகளாக இருந்தபோதிலும், ஏன் இன்னும் கோடிக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற உணவை உட்கொள்கிறார்கள் என்பதை இந்தத் தொழில்நுட்ப விளக்கங்கள் விளக்குவதில்லை. இதைப் புரிந்து கொள்ள, உலக உணவு முறையின் பின்னுள்ள முதலாளித்துவக் கட்டமைப்பை நாம் ஆராய வேண்டும். தற்போதைய உணவு முறை மனிதர்களின் பசியைத் தீர்க்கும் உரிமையின் அடிப்படையில் அல்லாமல், லாப வேட்டையை நோக்கமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பகுதியில், உணவு உற்பத்தி என்பது பெருநிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள், உணவுப் பதப்படுத்தும் ஆலைகள், தளவாட நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் முற்றுரிமை ஆதிக்கத்தின் கீழ் ஒரு செறிவூட்டப்பட்ட தொழிலாக மாற்றப்பட்டுள்ளது. முதலீட்டின் மீதான லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இந்த அமைப்பு, உணவுப் பாதுகாப்பை மூன்று முக்கிய வழிகளில் நேரடியாகப் பாதிக்கிறது: 1.செலவுக் குறைப்பு அழுத்தங்கள்: விநியோகச் சங்கிலி முழுவதும் செலவுகளைக் குறைக்க உழைப்பாளர்கள் மீதும் உற்பத்தியாளர்கள் மீதும் கடுமையான அழுத்தம் தரப்படுகிறது. இதனால் உற்பத்திச் செயல்பாடுகளில் குறுக்கு வழிகள் கையாளப்படுகின்றன. லத்தீன் அமெரிக்காவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான விவசாய வேலைகளுக்கு முறையான சமூகப் பாதுகாப்போ அல்லது காப்பீடோ கிடையாது. உணவுப் பாதுகாப்பு ஆய்வு அமைப்புகளுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. மிக நீண்ட தூர உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மூலம் உணவுகள் கொண்டு வரப்படும்போது, அவை அசுத்தமடைவதற்கான வாய்ப்புகள் பெருமளவு அதிகரிக்கின்றன. 2.சமூகச் செலவுகளைப் புறக்கணித்தல்: முதலாளித்துவ உணவு அமைப்புகள் சுற்றுச்சூழல் சீரழிவு, நீர் மாசுபாடு, பாதுகாப்பற்ற வேலைச் சூழல் மற்றும் பொதுச் சுகாதார விளைவுகளைத் தங்களின் பொறுப்பாக ஏற்பதில்லை. மாறாக, அவற்றைத் தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தொடர்பில்லாத பிறரின் பிரச்சினையாகவே நடத்துகின்றன. இதனால் லாபம் முழுவதும் தனியாருக்குச் செல்ல, அதன் சமூகச் செலவுகளைத் தொழிலாளர்களும், நுகர்வோரும், பொதுச் சுகாதார அமைப்புகளுமே சுமக்க வேண்டியுள்ளது. 3.உலகளாவிய சமத்துவமின்மை: உணவு மூலம் பரவும் நோய்களின் மிக அதிகச் சுமை ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் குவிந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இந்த பிராந்தியங்கள் காலனித்துவ சுரண்டல், கடன் சுமை, போதிய பொது உள்கட்டமைப்பின்மை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சமமற்ற ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் நீடித்த விளைவுகளைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றன. எனவே, பாதுகாப்பற்ற உணவு என்பது வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, அது சமமற்ற வளர்ச்சியின் வெளிப்பாடாகும்.

பெருநிறுவனங்களின் தோல்வியும் அரசு முதலீட்டின் அவசியமும்

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இறப்பது தற்போதைய உலக ஒழுங்கின் தார்மீக வீழ்ச்சியைக் காட்டுகிறது. தடுக்கக்கூடிய உணவு நோய்களால் குழந்தைகள் இறப்பதை அனுமதிக்கும் ஒரு சமூகம், தனது மிக அடிப்படையான கடமையிலிருந்தே தவறிவிட்டது என்றுதான் பொருள். சுத்தமான நீர், சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பு மற்றும் திறமையான பொது விதிமுறைகள் ஆகியவையே இந்த இறப்புகளைக் குறைப்பதற்கான கருவிகள் என்று உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்துகிறது. இந்தத் தலையீடுகளுக்குப் பொது முதலீடுகளும் அரசியல் அர்ப்பணிப்பும் தேவையே தவிர, இவற்றை ஒருபோதும் சந்தை சக்திகளின் கைகளில் விட்டுவிட முடியாது. ஆனால், சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) போன்ற நிறுவனங்கள் பசியின் மற்றும் பாதுகாப்பற்ற உணவின் அடிப்படைக் காரணங்களை எதிர்கொள்ளத் தவறிய பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரிகளையே தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. நெருக்கடி என்பது பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் அசுத்தங்கள் மட்டுமல்ல; தற்போதைய உணவு முறைகள் மக்களை நச்சு இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் தொழில்மயமாக்கலின் மாசுபடுத்திகளுக்கு இரையாக்குகின்றன. உணவில் உள்ள இத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்களால் ஏற்படும் நீண்டகால நாள்பட்ட நோய்களின் சுமையை உலக சுகாதார அமைப்பின் புதிய மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் விளைவுகள் உடனடி நோய்களாக மட்டுமன்றி, வாழ்நாள் முழுவதற்குமான குறைபாடுகளாகவும், வளர்ச்சிப் பாதிப்புகளாகவும் தொடர்கின்றன. ஒருபுறம் கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாட, மற்றொருபுறம் உடல் பருமன் மற்றும் உணவு சார்ந்த நோய்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். பெருநிறுவனங்கள் முன்னெப்போதும் அல்லாத அளவிற்கு சந்தை அதிகாரத்தைக் குவித்து லாபம் சம்பாதிக்கும் அதே வேளையில், விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். மனிதகுலத்திடம் அனைவருக்கும் பாதுகாப்பான உணவை வழங்கத் தேவையான அறிவியல் அறிவும், உற்பத்தித் திறனும், தொழில்நுட்ப வசதிகளும் தாராளமாக உள்ளன. ஆனால், தற்போதைய முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கமைப்பில், இந்தத் திறன்கள் மனிதத் தேவைக்காகப் பயன்படுத்தப்படாமல், லாபத்திற்காக மட்டுமே அடகு வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான மற்றும் நீதியான உணவு முறைக்கான ஐந்து சீர்திருத்தங்கள் உணவு என்பது வெறும் விற்பனைப் பண்டமல்ல, அது ஒரு சமூக நன்மையாகும். பாதுகாப்பான உணவுக்கான உரிமை என்பது வாழ்வதற்கான உரிமையோடு பிணைக்கப்பட்டுள்ளது என்ற எளிய கொள்கையின் அடிப்படையில் பின்வரும் ஐந்து சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன:

• நீர், சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்தில் உலகளாவிய முதலீடு: குறிப்பாக உணவு நோய்களின் சுமை அதிகமாக உள்ள கிராமப்புற மற்றும் குறைந்த வருவாய் கொண்ட சமூகங்களில் சுத்தமான நீர், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் ஆரம்பச் சுகாதார அணுகலை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும்.

• பொது உணவுப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல்: கார்ப்பரேட் ஆதிக்கத்திலிருந்தும் பட்ஜெட் வெட்டுக்களிலிருந்தும் உணவுப் பாதுகாப்பு நிறுவனங்களைப் பாதுகாத்து, உணவு ஆய்வு முறைகள், ஆய்வகத் திறன்கள் மற்றும் நோய் கண்காணிப்பு நெட்வொர்க்குகளை விரிவுபடுத்த வேண்டும். • உள்ளூர் மற்றும் சிறு அளவிலான உணவு அமைப்புகளுக்கு ஆதரவு: வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் உள்ளூர் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் குறுகிய விநியோகச் சங்கிலிகளில் அரசு முதலீடு செய்ய வேண்டும்.

• உணவு முறை ஆளுமையை ஜனநாயகப்படுத்துதல்: விவசாய வணிகம் மற்றும் உணவு சில்லறை விற்பனையில் பெருநிறுவனங்களின் முற்றுரிமையைக் குறைத்து, உற்பத்தியிலும் விநியோகத்திலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பங்கேற்பையும் பொது மேற்பார்வையையும் உறுதி செய்ய வேண்டும்.

• பாதுகாப்பான உணவை மனித உரிமையாக அங்கீகரித்தல்: பாதுகாப்பான, சத்தான உணவுக்கான அணுகலை ஒரு சந்தைப் பண்டமாகப் பார்க்காமல், அடிப்படைச் சமூக உரிமையாகக் கருதும் பிணைப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச அர்ப்பணிப்புகளை நிறுவ வேண்டும்.

குழந்தைகள் தடுக்கக்கூடிய உணவு நோய்களால் இறக்கக் கூடாது என்று வலியுறுத்துவது வெறும் இலட்சியவாதம் அல்ல; அது மனித நேயம். ஒரு குழந்தை பாதுகாப்பற்ற உணவால் இறக்கும் போது, அதற்குக் காரணம் அசுத்தமான உணவு மட்டுமல்ல; அதற்குப் பின்னால் முதலீடு, ஒழுங்குமுறை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக முன்னுரிமைகள் குறித்து எடுக்கப்பட்ட தவறான அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளின் சங்கிலித் தொடர் உள்ளது. உணவு மூலம் பரவும் நோய்கள் அதன் வெளிப்பாட்டில் உயிரியல் சார்ந்ததாக இருந்தாலும், அதன் தோற்றத்தில் சமூகக் கட்டமைப்பு சார்ந்தது. மனிதகுலத்தின் முன்னுள்ள சவால் உணவைச் பாதுகாப்பானதாக மாற்றுவது மட்டுமல்ல; மாறாக லாபத்திற்குப் பதிலாகப் பராமரிப்பையும், தனியார் குவிப்புக்குக் பதிலாகப் பொதுச் சுகாதாரத்தையும், சந்தை செயல்திறனுக்குப் பதிலாக மனித கண்ணியத்தையும் மையமாகக் கொண்ட ஒரு புதிய உணவு முறையைக் கட்டியெழுப்புவதாகும். அப்போதுதான் அனைவருக்கும் பாதுகாப்பான உணவு என்ற வாக்குறுதி வெறும் முழக்கமாக இல்லாமல் யதார்த்தமாக மாறும். தமிழில் சுருக்கம்: எஸ்.பி.ஆர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.