தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒகேனக்கல்லில் பரிசல் கட்டணம்: டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கூடுதலாக ரூ.50 வசூல்!

16 Jun 2026, 11:55 pm
ஒகேனக்கல்லில் பரிசல் கட்டணம்: டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு  கூடுதலாக ரூ.50 வசூல்!

ஒகேனக்கல்லில் பரிசல் கட்டணம்: டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கூடுதலாக ரூ.50 வசூல்!

ஒகேனக்கல், ஜூன் 16- தருமபுரியிலிருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 180 கி.மீ தொலைவிலும் இயற்கை எழிலோடு கொட்டிக்கிடக்கிறது ஒகேனக்கல் அருவி. கன்னட மொழியில் ‘ஒகே’ என்றால் புகை, ‘கல்’ என்றால் பாறை.

பாறைகளில் மோதிப் பாயும் நீர், வெண்புகையாய் எழும் அழகினைக் கொண்டு, இந்தியாவின் “நயாகரா” என்று போற்றப்படும் இந்த சுற்றுலாத்தலம், இன்று தனியார் ஒப்பந்ததாரர்களின் பேராசைக்கும், அதிகாரிகளின் அலட்சியத்திற்கும் இரையாகிக் கிடக்கிறது.

உழைத்துக்களைத்து வரும் எளிய பொழுதுபோக்குத் தலமாக விளங்கும் ஒகேனக்கல், தற்போது தனியார் மயம் மற்றும் முறைகேடுகளின் கூடாரமாக மாற்றப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வரும் இந்த வேளையில், ஒகேனக்கல் பரிசல் கட்டண கவுண்டரில் அப்பட்டமான பகல் கொள்ளை அரங்கேறி வருகிறது. “பரிசல் கட்டணத்தை ஜிபே மூலம் செலுத்த உத்தரவு இல்லை” என கறாராக மறுக்கும் ஒப்பந்ததாரர்கள் , அடுத்த விநாடியே, கூடுதலாக 50 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்பதாகக் கூறுகின்றனர்.

இந்த அப்பட்டமான விதிமீறல் குறித்து தட்டிக்கேட்கும் சுற்றுலாப் பயணிகளிடம், “இங்கு அப்படித்தான்... நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள்” என கட்டண வசூல் செய்யும் பொறுப்பாளர்கள் திட்டவட்டமாகப் பதிலளித்து மிரட்டுகின்றனர்.

தற்போது பரிசல் ஓட்டுநர் கட்டணம் ரூ. 1300, பராமரிப்பு கட்டணம் ரூ. 120, உயிர்காக்கும் சட்டை கட்டணம் ரூ. 80 என பெரும் தொகை வசூலிக்கப்பட்ட போதிலும், ஒகேனக்கல் அருவிப் பகுதியில் எவ்விதப் பராமரிப்பும் செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளும், பழைய ஆடைகளும் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. அனைத்திற்கும் மேலாக, பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டிய உயிர்காக்கும் சட்டைகள் உடைந்த லாக்குடனும், கிழிந்து தொங்கியபடியும், அழுக்குடன் துர்நாற்றம் வீசும் நிலையிலும் உள்ளன. சுற்றுலா பயணிகளின் காசை உறிஞ்சும் தனியார் முதலாளிகள், அவர்களின் உயிர் பாதுகாப்பிற்குத் தரும் விலை இதுதானா? என சமூக ஆர்வலர்கள் கொதிப்புடன் கேள்வி எழுப்புகின்றனர்.

இங்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை வழங்குவது உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பரிசல் ஓட்டுநர்கள், மீன்பிடி மற்றும் சமையல் தொழிலாளர்கள் தான். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் ஒகேனக்கல்லின் பெருமை காக்கப்படுகிறது.

ஆனால், தொழிலாளர்களின் உழைப்பையும், இயற்கையின் கொடையையும் தனியாருக்குத் தாரை வார்த்ததன் விளைவே இந்தச் சீரழிவு என தொழிற்சங்கத்தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து ஒகேனக்கல் பரிசல், மீன்பிடி மற்றும் சமையல் தொழிலாளர்கள் சங்கத்தலைவர் சி.ராஜூ, பொதுச்செயலாளர் எம்.சக்கரவர்த்தி ஆகியோர் கூறுகையில், “ஒகேனக்கல்லின் உயிர்நாடியே இங்குள்ள தொழிலாளர்களின் ஒத்துழைப்புதான்.

தமிழகத்தின் புகழ்பெற்ற இந்த சுற்றுலாத் தளத்தின் பராமரிப்பு மற்றும் கட்டண வசூல் உரிமைகளை சுற்றுலாத்துறை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்துள்ளது. ஜிபே வசூலுக்குக் கூடுதலாக ரூ.50 லஞ்சம் வாங்குவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கடந்த பல ஆண்டுகாலமாக நாங்கள் வலியுறுத்தி வருவது போல, இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பராமரிப்பு மற்றும் கட்டண வசூல் பணியை அரசே நேரடியாக ஏற்க வேண்டும், அல்லது சிஐடியு போன்ற நேர்மையான தொழிற்சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என உறுதியுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலாத்துறை உடனே தலையிட்டு, தனியார் ஒப்பந்தக்காரர்களின் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியையும், சுகாதாரத்தையும், உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே சிஐடியு மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்தக் குரலாகும். -ம.மீ.ஜாபர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.