அந்த வரலாறு இங்கேயும் திரும்பும்!
9 May 2026, 9:51 pm
<p><strong>அந்த வரலாறு இங்கேயும் திரும்பும்!</strong></p><p>சிலையை உடைத்தீர் -லெனின் சிந்தனையை என் செய்வீர்! சிலையின் தலையை அகற்றினீர்- அந்தத் தலையின் சுரப்பை என் செய்வீர்? இடிப்பதும் உடைப்பதும் உம் வாடிக்கை படைப்பதும் வளர்ப்பதும் எம் வாழ்க்கை! திரிபுராவில் சிலையைச் சாய்த்தீர் திருநெல்வேலியில் உடனே எழுப்பினோம்! வங்கத்தில் தலையை அகற்றினால் கேரளத்தில் பெரும்சிலை எழும்பாதோ? ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறீர்- இந்துத்துவா சர்வாதிகாரத்தை திணிக்க விழைகிறீர்! சமத்துவத்தை ஒழித்திட நினைக்கிறீர் - வருணபேத சனாதனத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறீர்! அரசமைப்புச் சட்டத்தை அகற்றத் துடிக்கிறீர்! மநு அதர்மத்தை சட்டமாக்கவே மருகுறீர்! சித்தாந்த வெற்றி என்றீர்- அது தற்காலிக வெற்றி என அறியீர்! பழிவாங்கும் நேரமல்ல என்றீர்-பாசாங்காய் உயிர்ப்பலி கொள்ளும் வெறியில் ஆடுறீர்!</p><p>காவல்துறை உதவியுடன் குஜராத்தில் அன்று பாதுகாப்புப்படை பார்வையில் வங்கத்தில் இன்று எமைஇனி யார் தடுப்பார் என்றான் ஹிட்லர் - வேறு வழியின்றி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டான் வன்முறை வழியிலே வளர்ச்சி வராது - நாட்டில் அமைதியின் தடத்திலேயே வளம் பெருகும்! ஒற்றைத் தன்மையால் ஒற்றுமை ஓங்காது - நாடு பன்மைத் தன்மையிலேயே பலமாய் நிமிரும்! சனாதனம் மநுதர்மம் பாசிசம் நோக்கியது உமது ஜனநாயகம் மதச்சார்பின்மை சமத்துவம் எமது இல்லாது போய்விட்டதாய் எகத்தாளமா? அங்கே அரும்பி இருக்கிறோம் வளர்வோம்! ஹிட்லருக்கும் முசோலினிக்கும் என்ன ஆனதோ, அந்த வரலாறு இங்கேயும் திரும்பும்! ப.முருகன்</p>
