நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை கோத்தகிரியில் 12 செ.மீ. பதிவு
6 Oct 2026, 1:40 am

நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை கோத்தகிரியில் 12 செ.மீ. பதிவு

உதகை, அக். 5– நீலகிரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில், பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு எல்நினோ காரணியால் வழக்கத்தை விட 32 சதவீதம் மழை பொழிவுகுறைந்தது. குறிப்பாக உதகையில் 50 சதவீதத்திற்கும் மேலாக மழை குறைந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து சரிந்து குடிநீர் பற்றாக்குறை மற்றும் நீர்மின் உற்பத்தியில் சிக்கல் நிலவி வந்தது.

இந்நிலையில் அரபிக்கடல், குமரிக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரியில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சனியன்று இரவு பெய்த கனமழையில் அதிகபட்சமாக கோத்தகிரி மற்றும் எடப்பள்ளி பகுதிகளில் தலா 12 செ.மீ. மழை பதிவானது.

மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்புகனமழை மற்றும் பலத்த காற்றினால் கோத்தகிரியின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. தீயணைப்புத் துறை மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன; பர்லியாரில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. அருவங்காடு பகுதியில் வாகனத்தின் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.உதகையில் திங்களன்று காலை முதலே தொடர்மழை பெய்ததால், கமர்சியல் சாலை, காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் ரயில்வே போலீஸ் நிலையப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

பேருந்து நிலையம் அருகிலுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு கருதி உதகை படகு இல்லத்தில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிறன்று நள்ளிரவு முதல் திங்களன்று அதிகாலை வரை கன மழை பெய்தது. கல்லார் பகுதியில் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக கல்லார் தூரிப்பாளையம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டதால் சாலை பழுதடைந்து அதன் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது. மழையின் காரணமாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பக்கவாட்டில் சாய்ந்து உருண்டு விழுந்தது. மண் மற்றும் சகதிகளின் இடிபாடுகளுக்கு இடையில் கார் சிக்கியது. காரில் இருந்தவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு உடனடியாக காரை விட்டு வெளியேறியதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் ஏது நிகழவில்லை.

கோவை மாநகரப் பகுதிகளான காந்திபுரம், பீளமேடு, லட்சுமி மில்ஸ் மற்றும் அவினாசி சாலை ஆகிய இடங்களில் திடீரென பரவலான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த திடீர் மழையால் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.