புகைக்கும் விஷம்...பலியாகும் தேசம்!
9 Sept 2026, 8:36 pm

புகைக்கும் விஷம்...பலியாகும் தேசம்!

புகை என்பது வெறும் புகையல்ல; அது மனிதனின் சுவாசப் பையையும் அவனோடு வாழும் உயிர்களின் எதிர்காலத்தையும் எரித்துச் சாம்பலாக்கும் நச்சுத் தீ. ‘திலான்செட்’ இதழின் உலகளாவிய நோய் சுமை ஆய்வறிக்கை நம் சமுதாயத்தின் பொறுப்பற்ற தன்மையைத்தோலுரித்துக் காட்டுகின்றது.

ஆண்டுதோறும் உலக அளவில் 80 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் புகையிலை பலிகொள்கிறது. இதில் மிகக் கொடுமையான உண்மை என்னவென்றால், புகைபிடிக்கும் பழக்கமே இல்லாத 12 லட்சம் அப்பாவி மனிதர்கள், பிறர் ஊதித்தள்ளும் நச்சுப் புகையைச் சுவாசிப்பதனாலேயே தன் இன்னுயிரைத் துறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 3.25லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மறைமுகப் புகையினால் மடிகிறார்கள்.

சுமார் 44.4 கோடி இந்தியர்கள் நாள்தோறும் நச்சுப் புகையைச் சுவாசிக்கும் அவல நிலைக்குத்

தள்ளப்பட்டுள்ளனர். தான் செய்யாத தவறுக்கு, தன் உயிரையே தண்டனையாகக் கொடுக்கும் இந்த அநீதிக்கு யார்பொறுப்பு? தன் இன்பத்திற்காகப் புகையை ஊதித் தள்ளும் ஒவ்வொருவரும் தன் குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் மெல்லக் கொல்லும் விஷத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரும் மனச்சாட்சி எங்கே போனது?

புகைபிடிக்கும் பழக்கத்தைத் தொடங்குபவர்களில் 89 சதவிகிதம் பேர் 25 வயதிற்கு முன்பே, வாழ்க்கையின் வசந்த காலத்திலேயே இந்த நச்சு வலையில் விழுகின்றனர். நாட்டின் தூண்களாக விளங்கும் இளைஞர்களை அதிக அளவில் புகையிலைக்குப் பலிகொடுக்கும் இரண்டாவது நாடாக இந்தியா இருப்பது நெஞ்சைப் பிளக்கும் வேதனை.

அதுமட்டுமன்றி, 1.56 லட்சம் இந்தியப் பெண்கள் பிறர் செய்யும் தவறால் மறைமுகப் புகையை நுகர்ந்து உயிரிழக்கிறார்கள். பெண்களும், நாளைய இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகளும் சுவாசப் பாதை தொற்றுகளாலும் ஆஸ்துமாவாலும் துடிதுடிப்பதற்கு யார் பொறுப்பு?

நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என நோய்களின் புகலிட

மாகப் புகையிலை மாறுகிறது. இதனால் இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக 92.8 லட்சம் ஆரோக்கியமான வாழ்க்கை ஆண்டுகளை இழக்கின்றனர். முறையான மருத்துவச் செலவுகள் மற்றும்மனிதவள இழப்பினால் நாட்டின் பொருளாதாரமும் கோடிக்கணக்கில் கரைகிறது.

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும்” என்கிறது குறள்; ஆனால், புகைபிடிப்போர் ஊதும் புகையினால் உருவாகும் புற்றுநோய் புண் ஒரு குடும்பத்தையே அடியோடு அழித்துவிடும்.

புகை பிடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் எத்தனையோ நடந்தாலும் அதை புகையாளர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இனியாவதுவிழித்துக்கொள்வோம். ஒருவர் கையில் இருக்கும்சிகரெட் வெறும் புகையிலையல்ல; அது அன்பிற்குரியவர்களின் மரணச் சாசனம்! புகையிலையைத் துறப்போம்; சுவாசக் காற்றை உயிர்ப்பிப்போம்.