இரண்டு கால்கள், இரண்டு கனவுகள், ஒரே இந்தியா!
31 May 2026, 11:33 pm

இரண்டு கால்கள், இரண்டு கனவுகள், ஒரே இந்தியா!

“தடகள மைதானம் என்பது வெறும் ஓட்டப்பாதை அல்ல. அது தோல்விகளின் வியர்வையால் நனைந்த, வெற்றிகளின் கண்ணீரால் புனிதமான ஒரு தலம்.

மில்கா சிங் காற்றைக் கிழித்துப் பாய்ந்த பாதையில், பி.டி. உஷா சரித்திரம் படைத்த வழியில் தலைமுறைகள் கடந்தன, வீரர்கள் வந்தார்கள், போனார்கள்.

ஆனால் இந்தியத் தடகளம் உலகம் கவனிக்கும் அளவிற்கு உயர காத்திருந்தது”. 2026 மே ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் பிர்சா முண்டா மைதா னத்தில் இரண்டு தீபங்கள் ஒரே நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்தன. பஞ்சாப்பின் சிறு கிராமத்திலிருந்து வந்த குரிந்தர்வீர் சிங் 100 மீட்டரை 10.09 வினாடிகளில் கடந்தார். தமிழ்நாட்டின் ஜோலார்பேட்டையிலிருந்து வந்த விஷால் டிகே 400 மீட்டரை 44.98 வினாடி களில் முடித்தார்.

ஒரே நாளில் இரண்டு சகாப்தங்களைக் கண்டது இந்தியா.

பஞ்சாப்பின் மின்னல் ஜலந்தர் மாவட்டத்தில் போக்பூர் அருகே உள்ள ‘பாட்டியால்’ கிராமம் இனி இந்திய விளையாட்டு வரலாற்றில் அழியாத இடம் பிடித்திருக்கிறது. 2000 டிசம்பர் 24 அன்று அங்கே பிறந்தவர் குரிந்தர்வீர் சிங். குடும்பம் விளையாட்டுப் பாரம்பரி யம் கொண்டது. தாத்தா ராணுவத்தில் பணியாற்றிய கபடி வீரர். தந்தை கமல்ஜீத் சிங் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். கைப்பந்து விளையாடியவர் மணிக் கட்டு காயம் அவரது வாழ்க்கையை நடு வில் வெட்டியது.

தன் கனவை மகன் தொடர வேண்டும் என்ற ஆவல், குரிந்தர்வீர் 13 வயதிலேயே கடுமை யான பயிற்சி வாழ்க்கையில் இறங்கச் செய்தது. பலர் சொன்னார்கள், “100 மீட்டர் கஷ்டம், 400 மீட்டருக்கு வா” என்று. ஆனால் குரிந்தர்வீர் கேட்கவில்லை. 1

00 மீட்டரில் வரலாறு படைக்க வேண்டும் என்ற வெறி அவரை விடவில்லை. கடுமையான வயிற்றுப் புண்ணால் உடல் எடை வேகமாக குறைந்தது, தசைகள் கரைந்தன. மனம் மட்டும் தளரவில்லை. ஒவ்வொரு படியாக மீண்டு, மைதானத்திற்குத் திரும்பி, தன் இலக்கை நோக்கி ஓடினார். மே 24, 2026. ராஞ்சி தேசிய சீனியர் தடகள போட்டியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

10.09 வினாடிகள். 10.10 வினாடிகளுக்குக் கீழே ஓடிய முதல் இந்தியர் என்ற பட்டம் அவருக்குச் சூட்டப்பட்டது. ஒரே ஓட்டத்தில் மூன்று தேசிய சாதனைகள். அவரது விமர்சகர்களுக்கு பதில் சொன்னது அவரது கால்கள். அன்று பாட்டியால் கிராமத்தில் பாட்டி சரண் கவுர் பேர னுக்கு இனிப்பூட்டினார். இந்தியக் கடற்படையில் ஆபீசராகப் பணி யாற்றும் குரிந்தர்வீர், இப்போது தேசத்திற்கே வேகத்தின் அடையாள மாக நிற்கிறார். ஜோலார்பேட்டையின் பெருமை தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பிரசித்த மான ரயில் சந்திப்பு மட்டுமே அடையாள மாக இருந்த நகரம்.

ஆனால் இன்று அந்த ஊருக்கு ஒரு புதிய பெயர் சொல்கிறது உலகம் விஷால் டிகே. விஷால் பிறவியிலேயே முழங்கால்கள் ஒன்றோடொன்று உரசும் நிலையில் பிறந்தார். நடப்பதே சிரமம். தந்தை தென்னரசு, மாநில அணியில் கால்பந்து விளையாடியவர்

பால் பண்ணை விவசாயி. மகனை மைதானத்தின் நீளம் தாண்டும் குழியில் முழங்கால் வரை மணலில் நிறுத்தினார்.

கால்கள் நேராகட்டும் என்ற நம்பிக்கையில். அந்த மணற்குழியில் நின்ற சிறுவன் ஒரு நாள் இந்திய தடகளத்தின் வரலாற்றை மாற்றுவான் என்று யார் நினைத்தார்கள்? மைதானத்தில் நீண்ட தூர வீரர்களைப் பார்த்து ஏற்பட்ட ஈர்ப்பு, அவரை ஆறாம் வகுப்பிலேயே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிக்கு அழைத்துச் சென்றது.

அதுவே விஷால் சொல்வதுபோல், “என் வாழ்வின் மிகப்பெரிய திருப்பம்.” 600, 800 மீட்டரில் திறன் காட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 400 மீட்டருக்கு மாறிய விஷால், நடுத்தர தூரப் பயிற்சியில் வளர்ந்த நுரையீரலும் தசைகளும் இன்று கடைசி 100 மீட்ட ரில் அவரை மின்னல் வேகத்தில் ஓட வைக்கின்றன. தன் வெற்றிக்கு ஜமைக்கா பயிற்சியாளர் உலக தடகள சாம்பியன் ஜேசன் டாசனை கைகூப்பி நன்றி சொல்கிறார் விஷால். “அவர் ஒரு சிற்பியைப்போல என்னை செதுக்கி னார்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாக வும் சாம்பியனாக மாற்றினார்.” உசேன் போல்ட்டில் ஊக்கம் பெற்ற விஷால், கடுமையாக பயிற்சி எடுத்தார்”. அந்த தன்னம்பிக்கையே அவரை வரலாற்றின் பக்கங்களில் எழுதியது.

1998-இல் பரம்ஜீத் சிங் 45.70 வினாடிகள் படைத்த நாளிலிருந்து, இந்தியத் தடகளம் 45 வினாடிகளுக்குக் கீழே வர வழி தேடியது. அந்த இரும்பு வேலியை உடைத்நது இந்த விஷால். மகன் சாதனை படைத்ததும் தந்தை தென்னரசு ராஞ்சி மைதானத்திற்குள் ஓடினார். வார்த்தைகள் வேண்டாம். அந்தத் தழுவல் ஒரு தலைமுறையின் காத்திருப்பைச் சொல்லியது. வேர்கள் தரும் வேகம் இரண்டு வீரர்களுக்கும் ஒரு பொதுவான இழை. தந்தையரின் அன்பும் கனவும்.

கமல்ஜீத் சிங் மணிக் கட்டு காயத்தால் நின்றுபோன கனவை மகனின் கால்களில் தொடர்ந்தார். தென் னரசு மணலில் நட்டநம்பிக்கை இன்று பதக்கமாக மலர்ந்திருக்கிறது. காமன்வெல்த், ஆசிய விளையாட்டு கள், ஒருநாள் ஒலிம்பிக்கும்.

இந்த இரண்டு கால்கள் அங்கே ஓடப்போகி ன்றன. வேகம் என்பது கால்களில் இல்லை. அது கனவுகளில் இருக்கிறது. குரிந்தர்வீரும் விஷாலும் அதை மைதானத்தில் நிரூபித்துவிட்டார்கள். -சி.ஸ்ரீராமுலு