நூறு நாள் வேலையை உடனே வழங்குக கும்மிடிப்பூண்டி பிடிஓ அலுவலகத்தை விதொச முற்றுகை!
16 Jun 2026, 12:21 am
<p><strong>நூறு நாள் வேலையை உடனே வழங்குக கும்மிடிப்பூண்டி பிடிஓ அலுவலகத்தை விதொச முற்றுகை!</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 15- கும்மிடிப்பூண்டி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தை உடனடியாகத் துவக்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி (பிடிஓ) அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 2025ஆம் ஆண்டுக்கான ஊதிய பாக்கியை வழங்க வேண்டும் என்றும், தற்போது ஊராட்சிக்கு வெறும் 10 பேருக்கு மட்டுமே வேலை வழங்கி கண்துடைப்பு நடப்பதாகவும் போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, 2026-27 நிதியாண்டில் வழுதுளம்பேடு, மங்காவரம், நத்தம், பெத்திக்குப்பம், ஆரம்பாக்கம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பண்பாக்கம், மாதர்பாக்கம், சித்தராஜகண்டிகை, தேர்வழி ஆகிய ஊராட்சிகளில் முறையாக வேலை வழங்கப்படாததால் மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். இப்போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் ப.லோகநாதன் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன், பொருளாளர் என்.நாகராஜ், துணைத் தலைவர்கள் முகமது சாலி, ஜி.கோவிந்தராஜ், கட்டுமான சங்கத் தலைவர் வி.ஆர்.லட்சுமணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் வசந்த் பௌத்த, மதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட பிடிஓ, ஒன்றிய அரசின் புதிய ‘விபி ராம்ஜி’ திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வழிமுறைகள் இன்னும் வரவில்லை என்றும், 2026-27ஆம் ஆண்டு வேலை அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த 4 மாதங்களாக வேலை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p>
