குஜராத் ‘முதலீட்டாளர் சொர்க்கத்தில்’ வெடித்த தொழிலாளர் கிளர்ச்சி ஹசிரா ஸ்டீல் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!
8 May 2026, 10:05 pm

குஜராத் ‘முதலீட்டாளர் சொர்க்கத்தில்’ வெடித்த தொழிலாளர் கிளர்ச்சி ஹ

சிரா ஸ்டீல் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!

சூரத், மே 8 - இந்தியாவின் ‘முதலீட்டாளர் சொர்க்கம்’ என்று வர்ணிக்கப்படும் குஜராத் மாநிலம், உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு நவீன அடிமை முகாமாக மாறி வருவதை ஹசிரா நிகழ்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.

வடஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் தொழிலாளர் எழுச்சியின் ஒரு பகுதியாக, குஜராத்தின் தொழில் மையமான ஹசிராவில் அமைந்துள்ள ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் (AMNS) நிறுவனத்தில் வெடித்த கிளர்ச்சியின் பின்னணியை இந்தத் தொடரில் காண்போம். குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஹசிராவில், உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் ஒன்று விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு எல் அண்ட் டி (L&T) நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த பிப்ரவரி 26 அன்று தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை முன்வைத்து ஆலையின் நுழைவாயிலில் திரண்டனர்.

அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், நிர்வாகத்தின் அடக்குமுறையாலும், பாதுகாப்புப் படையினரின் அராஜகத்தாலும் ஒரு பெரும் போர்க்களமாக மாறியது.

அடக்குமுறையும் தொழிலாளர்களின் எதிர்வினையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைப் பாதுகாப்புப் பணியாளர்கள் தரக்குறைவாக நடத்தியதைத் தொடர்ந்து மோதல் வெடித்தது.

ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நிறுவனத்தின் வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தினர். நிலைமையைக் கட்டுப்படுத்தப் பல காவல் நிலையங்களிலிருந்து வந்த காவல்துறையினர், தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியதுடன், 70-க்கும் மேற்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

போராட்டத்தை முன்னின்று நடத்தியதாகக் கூறி 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுரண்டலின் பின்னணி: மாயமான ஊதிய உயர்வு குஜராத்தின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தை விட (தினசரி ₹512 - ₹534), தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் (₹600 - ₹700) அதிகம் என்று வெளியில் சொல்லப்பட்டாலும், யதார்த்த நிலை மிக மோசமாக இருப்பதாகத் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஊதியத் திருட்டு: துணை ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களின் ஊதியத்தில் சட்டவிரோதப் பிடித்தம் செய்வதால், சொல்லப்பட்ட ஊதியம் தொழிலாளர்களின் கைகளுக்கு முழுமையாகச் சேருவதில்லை.

கூடுதல் உழைப்பு சுரண்டல்: 8 மணி நேர வேலைக்கான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு, தொழிலாளர்களைத் தினசரி 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றனர்.

இதற்கான கூடுதல் நேர ஊதியம் (Overtime) முறையாக வழங்கப்படுவதில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்: உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடி வந்த இந்தத் தொழிலாளர்களுக்கு, ஹசிரா போன்ற தொழில் மையங்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை.

டிஜிட்டல் வழியிலான எழுச்சி ஹசிரா ஸ்டீல் வளாகத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என எவருக்கும் முறையான தொழிற்சங்கங்கள் கிடையாது.

முன்பு இருந்த தொழிற்சங்கங்கள் நிறுவனக் கையகப்படுத்துதலுக்குப் பிறகு கலைக்கப்பட்டுவிட்டன.

இத்தகைய சூழலில், எந்தவொரு முறையான தொழிற்சங்கத் தலைமையுமின்றி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தொழிலாளர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்தனர்.

தகவல்கள் மற்றும் காணொலிகள் மின்னல் வேகத்தில் பரவியது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒரே நேரத்தில் வீதியில் இறங்கச் செய்தது.

இது இந்தியாவில் வளர்ந்து வரும் நவீனத் தொழிலாளர் போராட்ட முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர் சொர்க்கமா? தொழிலாளர் நரகமா? சுமார் ₹60,000 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் இந்த ஆலை, குஜராத்தின் பெருமையாகக் காட்டப்படுகிறது. ஆனால், இந்த வளர்ச்சி என்பது தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதன் மூலமே சாத்தியமாகிறது.

குஜராத் பாஜக அரசு தொழிலாளர் தாவாக்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அவற்றைக் காவல் துறையைக் கொண்டு ஒடுக்குவதையே கொள்கையாகக் கொண்டுள்ளது. “

குஜராத் முதலீட்டாளர்களுக்குச் சொர்க்கமாக இருக்கலாம், ஆனால் தொழிலாளர்களுக்கு அது சிறந்த பிராண்டிங் செய்யப்பட்ட ஒரு சிறை முகாம்” என்ற விமர்சனத்தை ஹசிரா போராட்டம் மெய்ப்பித்துள்ளது.

இந்த ‘wildcat strike’ எனப்படும் தன்னிச்சையான வேலைநிறுத்தம், குஜராத்தின் போலி பிம்பத்தைத் தகர்த்துள்ளது. அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர்களின் குரலைத் தற்காலிகமாக ஒடுக்கினாலும், சுரண்டலுக்கு எதிரான அவர்களின் குமுறல் எரிமலையாக வெடிக்கக் காத்திருக்கிறது என்பதையே ஹசிரா நிகழ்வுகள் உணர்த்துகின்றன. லெப்ட் வியூஸ்