திவால் நிலையை நோக்கி குஜராத் கூட்டுறவுத்துறை
yesterday

திவால் நிலையை நோக்கி குஜராத் கூட்டுறவுத்துறை

நாட்டின் 2ஆவது மிகப்பெரிய (முதலிடத்தில் மகாராஷ்டிரா - 2.27 லட்சம் சங்கங்கள்) கூட்டுறவு வலையமைப்பை கொண்டது குஜராத் ஆகும். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 88,119 பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச்சங்கங்கள் உள்ளன. குறிப்பாக நாட்டின் மொத்த கூட்டுறவுச் சங்கங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை குஜராத்தில்தான் உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் கூட்டுறவுத்துறை திவால் நிலையை நோக்கி பயணித்து வருகிறது என நாடாளுமன்ற மாநிலங்களவை தரவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான தரவின் அடிப்படையில், குஜராத் பாஜக அரசு கூட்டுறவுத்துறையின் மேலோட்டமான புள்ளிவிவரங்கள் மூலம்பெரிய அளவில் வளர்ச்சியை காட்டினாலும்,அவை கடுமையான கட்டமைப்பு பலவீனங்களை மறைக்கின்றன. அதாவது, பதிவு செய்யப்பட்ட 88,119 சங்கங்களில் 79,823 சங்கங்கள் மட்டுமே செயல்படுகின்றன. மீதமுள்ளவற்றில் 6,959 சங்கங்கள் செயல்படாத நிலையிலும், 1,341 சங்கங்கள் கலைப்பு நிலையின் கீழ் உள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், குஜராத்தில் உள்ள 8,300கூட்டுறவுச் சங்கங்கள் செயலற்ற நிலையிலோ அல்லது மூடும்தருவாயிலோ உள்ளன. கிட்டத்தட்ட மாநிலத்தில்உள்ள ஒவ்வொரு 10 பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் ஒன்று செயலிழந்துள்ளது. அதேசமயம் செயல்பாட்டில் உள்ள 79,823 சங்கங்களில், 56,977 சங்கங்கள் மட்டுமே லாபத்தில் இயங்குகின்றன. மறுபுறம், 18,404 சங்கங்கள் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்குகின்றன. மேலும், 4,442 கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் கூட்டுறவுத்துறையின் உண்மையான நிதிஆரோக்கியத்தை முழுமையாக மதிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும்

குஜராத் மட்டுமின்றி நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. நாட்டில் மொத்தம் 8.53 லட்சம் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ள நிலையில், இதில்6.63 லட்சம் சங்கங்கள் மட்டும் செயல்பாட்டில்உள்ளன. 1.41 லட்சம் சங்கங்கள் செயல்படவில்லை, 49,177 சங்கங்கள் சிக்கலான நிலையில் உள்ளன. செயல்படும் சங்கங்களில் 3.56 லட்சம் சங்கங்கள் லாபகரமானவையாகவும், 2.50 லட்சம் சங்கங்கள்நஷ்டத்திலும் இயங்குகின்றன. மேலும், 56,689 சங்கங்களின் நிதித்தரவுகள் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.