சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உள்பட 9 பேர் வழக்கிலிருந்து விடுதலை தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
16 Jun 2026, 11:06 pm
<p><strong>சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உள்பட 9 பேர் வழக்கிலிருந்து விடுதலை தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு</strong></p><p>தஞ்சாவூர், ஜுன் 16- திருவிடைமருதூரில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் உள்பட 9 பேரை, வழக்கிலிருந்து விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடியில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் 24.5.2018 அன்று, முன்னாள் எம்.பி செ. ராமலிங்கம், முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கோவி.செழியன் ஆகி யோரது தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு தஞ்சாவூரில் உள்ள, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பல கட்ட விசாரணை நடைபெற்றது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணை நடைபெற்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அரசு தரப்பில் போதிய ஆவணம் அளிக்காததால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் எம்.பி செ.ராமலிங்கம் உள்ளிட்ட 9 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.</p>
