விஜய் பதவியேற்க அழைப்பு விடுக்க மறுப்பு அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கும் ஆளுநர் அர்லேகர்?
7 May 2026, 9:56 pm

விஜய் பதவியேற்க அழைப்பு விடுக்க மறுப்பு அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கும் ஆளுநர் அர்லேகர்?

சென்னை, மே 7 - தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை வழங்காத நிலை யில், மாநிலம் முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 234 இடங் களைக் கொண்ட தமிழக சட்ட மன்றத்தில், சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டாத நிலையில், தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க அழைக்க ஆளுநர் காட்டி வரும் தாமதம் கடும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஆளுநர் கூறியது என்ன?

விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் (5 இடங்கள்) ஆதரவளித்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவை யான 118 இடங்களுக்கு இன்னும் 6 இடங்கள் குறைவாக உள்ளன. புதன்கிழமை (மே 6) அன்று விஜய் 112 எம்.எல்.ஏ-க்களின் (காங்கிரஸ் உட்பட)ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், 118 உறுப்பினர்களின் கை யெழுத்து இல்லாமல் பதவியேற்பு சாத்தியமில்லை என்று ஆளுநர் திட்ட வட்டமாகக் கூறிவிட்டார். வியாழக் கிழமை (மே 7) அன்று இரண்டா வது முறையாக விஜய்யைச் சந்தித்த ஆளுநர், “ஆட்சியமைத்தால் அது கவிழாது என்பதற்கு என்ன உறுதி?” என்று கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக தரப்பிடம் போதிய பெரும்பான்மை இல்லை என்பதை நேரில் அழைத்துத் தெளிவு படுத்தியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆளுநரின் செயல்பாடு சந்தேகத்திற்குரியது : எம்.ஏ.பேபி

ஆளுநரின் இந்த தாமதம் ஒரு நெருக்கடியை உருவாக்கும் நோக்கம் கொண்டது என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வெளியிட்டுள்ள காணொலியில் “தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தெளி வான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் அரசிய லமைப்புச் சட்ட மரபுகளின்படி செயல்படக் கடமைப்பட்டவர். தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சியின் தலைவரை ஆட்சி யமைக்க அழைத்து, முதலமைச்ச ராகப் பதவியேற்கச் செய்வதுதான் ஜனநாயக முறைப்படி சரியான தாகும். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தலைவராக விஜய் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவரை ஆட்சி யமைக்க அழைக்காமல் ஆளுநர் தாமதிப்பது பல்வேறு சந்தேகங் களை எழுப்புகிறது. ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துவது கவலையளிக்கின்றது. பெரும்பான்மை என்பது ஆளுநர் மாளிகையில் அல்ல, சட்டமன்றத் தின் தளத்தில்தான் (Floor of the House) நிரூபிக்கப்பட வேண்டும். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சிக்குத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி இல்லாத நிலை யிலும், மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை ஆட்சி யமைக்க குடியரசுத் தலைவர் அழைத்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே போன்ற ஒரு ஜனநாயகப் பண்பை இங்கும் பின்பற்றி, விஜய் அவர்களுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்கப் போதுமான கால அவகாசத்தைஆளுநர் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஆளுநர் பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படக் கூடாது” : டி. ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, ஆளு நரின் போக்கைக் கண்டித்துத் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி யுள்ளார்: “இடதுசாரி கட்சிகளைப் பொறுத்த வரை, நாங்கள் முடிவுகளை எடுப்ப தில் ஒரு ஜனநாயக முறையைப் பின்பற்றுகிறோம். இது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன, தேசியத் தலை மையுடனும் கலந்தாலோசிக்கப்படும். ஆனால், ஆளுநர் முதலில் தனிப் பெரும் கட்சிக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும். மக்களின் தீர்ப்பு பிளவுபட்டதாகக் கருதப்பட்டாலும், அதிகப்படியான ஆதரவு விஜய் அவர்களுக்குத்தான் கிடைத்துள்ளது. அவருக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அதுதான் முறையான ஜனநாயகச் செயல்முறை. நாம் ஒரு நாடாளுமன்ற ஜனநாயக நாடு என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். அவர் பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதியாகச் செயல்படக் கூடாது. இதுவே எங்களது உறுதியான நிலைப்பாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.

முத்தரசன் மற்றும் கமல்ஹாசன் கண்டனம்

சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக தலைவரை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ‘எஸ்.ஆர். பொம்மை’ வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, ஒரு கட்சியின் பலத்தைச் சட்டமன்றத்தில் மட்டுமே சோதிக்க முடியும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் பதவியேற்க விடாமல் தடுப்பது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும் சாடியுள்ளார். (செய்தி : உள்ளே) இதனிடையே, விஜய்யை உடனடியாகப் பதவியேற்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தவெக தொண்டர்கள் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “மக்கள் தீர்ப்பை மதித்து உடனடியாகப் பதவியேற்பு விழா நடத்த வேண்டும்” என அவர்கள் முழக்கமிட்டனர்.

ஆளுநர் காலதாமதம் செய்யக் கூடாது : சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, மே 5 - தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்க, காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனிப்பெரும் கட்சியாக தவெக!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி த.வெ.க.வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார்.

அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர்!

ஆளுநர் மூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பாஜக கடைப்பிடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு ஆளுநர், தவெக தலைவர் விஜய்யை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறார். இது ஏற்புடையதல்ல. எனவே, வேறு யாரும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய்யை தமிழக ஆளுநர் உடனடியாக பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.