அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம்
13 Feb 2026, 5:58 pm
<p><strong>அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை, பிப். 13- அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்க ளின் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 9ஆம் தேதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவுரவ விரிவுரையாளராக 8,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். உயர்கல்வித் துறை வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர்கள் 2003 முதல் பல்வேறு காலகட்டங்களில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்குத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை ஊதியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், கவுரவ விரிவுரையாளர்க ளுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் என்பதன் அடிப்படையில் ஊதியம் வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தித் தீர்ப்பளித்துள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் வகுப்புகளை ரத்து செய்தும், விடுப்பு அளித்தும் கல்லூரி நாட்களை நகர்த்தி வருகின்றனர். இதனால் மாணவர்களுக்குக் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் ஒரு வடிவமான உண்ணாநிலை போராட்டத்தை, வெள்ளிக்கிழமை மாலை (பிப். 13) நிறைவு செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ். ராமதாஸ், பொருளாளர் குபேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு முடித்து வைத்தனர். யுஜிசி நிர்ணயம் செய்த ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியிலும் கவுரவ விரிவுரையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
