நற்பெயர் + நற்பணி = சிவசங்கரன்
2 Apr 2026, 5:30 am

நற்பெயர் + நற்பணி = சிவசங்கரன்

காப்பீட்டுத் துறையில் பணியாற்றி உழைக்கும் மக்களின் காப்பாளராகக் களம் இறங்கியவர்களில் ஒருவர்தான் தோழர் சிவசங்கரன். நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் 1943ஆம் ஆண்டு ஒரு எளிய விவசாயி குடும்பத்தில் பிறந்தார்.

பள்ளியில் கிடைக்கப் பெற்ற சமூகப் பார்வையோடு, கிராமத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக மாடசாமி என்ற தோழரோடு இணைந்து ஒரு தட்டு போர்டு எழுதி வைத்தார். அதற்காக இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

1966இல் சிவசங்கரன் ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி)த்தில் பெரியகுளத்தில் வேலையில் சேர்ந்தார். விரைவிலேயே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க (ஏஐஇஏ) உறுப்பினரானார்.

1969இல் நெல்லைக்கு மாற்றப்பட்டார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளராக ‘எஸ்.பி.சி.’ தோழர் எஸ். பாலவிநாயகம் பணியாற்றி வந்தார். சிவசங்கரன் 1970இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார்.

சங்கப் பணிகளோடு நிறுத்திடாமல் நெல்லை நகரத்திலும், மாவட்ட அளவிலும் இதர நடுத்தர வர்க்க ஊழியர்களையும் திரட்டுவதற்கு சிவசங்கரன் அக்கறையோடு முனைந்தார். இந்திய சமூக விஞ்ஞான கழகம் அமைப்பை உருவாக்கி கருத்தரங்குகள் நடத்தினார்.

திருநெல்வேலி கோட்டம் 1993இல் புதிதாக உருவாக்கப்பட்டது இயல்பாகவே அதன் தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. அதன் முதல் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆணாதிக்கப் போக்குகள் மேலோங்கியிருந்த சூழலில் பெண் ஊழியர்களைத் திரட்டுவதிலும், சங்கத்தின் பால் அவர்களை ஈர்ப்பதிலும் இருந்த தயக்கங்களை களையச் செய்தார். புதிய கோட்டம் உருவாவதற்கு முன்பே மகளிர் மாநாட்டை அப்பகுதியில் நடத்தினார்.

83 வயது நிரம்பிய தோழர் சிவசங்கரன் இன்றும் கட்சி உறுப்பினராக தன்னை இயன்ற பணியை இயக்கத்திற்காகச் செய்து வருகிறார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு சிறந்த முன்னுதாரணத் தோழராக சிவசங்கரன் பதித்துள்ள களப்பணித் தடம் பாராட்டுக்குரியது.