பொங்கல் பண்டிகை ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
11 Jan 2026, 7:00 am
<p>தூத்துக்குடி,ஜன.11- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்து அதிக ஆடுகள் விற்பனையாகும் சந்தையாக ஆறுமுகநேரி ஆட்டுச்சந்தை திகழ்கிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தையில் பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சந்தைக்கு ஆறுமுகநேரியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆடுகளை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு அடுத்த நாள் பொதுமக்கள் பெரும்பாலும் இறைச்சி சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதை முன்னிட்டு நேற்று ஆறுமுகநேரி ஆட்டுச்சந்தையில் கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, வேலி ஆடு, செம்மறி ஆடு என சுமார் 900 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டி ருந்தன.ஸ்ரீவைகுண்டம், ஏரல், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை விலைக்கு வாங்க வந்திருந்தனர். 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு ரூ.15000 முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. ஆறுமுகநேரி ஆட்டுச்சந்தையில் நேற்று மட்டும் ரூ.2 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையானதாகவும், ஆடு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>
