வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி கங்கா அக்ரோவூல்ஸ் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நெடுஞ்சாலை முற்றுகை
11 Jun 2026, 8:45 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி கங்கா அக்ரோவூல்ஸ் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நெடுஞ்சாலை முற்றுகை

லூதியானாவில் “12 ஆண்டுகால ஊதியத் தேக்கத்திற்கு முடிவுரை”

வேலைநிறுத்தம் 56

தோரஹா (லூதியானா), ஜூன் 11 - உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து, வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க வர்க்கப் போராட்ட நெருப்பு பஞ்சாப் மாநிலத்திற்கும் பரவியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் தோரஹாவில் (Doraha) உள்ள இந்தியாவின் மிகப்பெரிய கிராஃப்ட் நூல் தயாரிப்பு நிறுவனமான ‘கங்கா அக்ரோவூல்ஸ் லிமிடெட்’ (Ganga Acrowools Limited) ஆலை தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக நடத்திய அதிரடி ‘சக்கா ஜாம்’ (போக்குவரத்து முடக்கம்) போராட்டம் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. 11 முதல் 12 மணி நேரம் வரை கடுமையாக உழைத்த போதிலும், வெறும் 8 மணி நேரத்திற்கான அற்பக் கூலியை மட்டுமே வழங்கி வந்த கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக இவ்வாலையின் உழைப்புப் படை, வீதியில் இறங்கி யுள்ளது.

சுமார் 70 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த ஆலையில் இதுவரை எவ்வித வேலைநிறுத்தமோ அல்லது சாலை மறியலோ நடைபெற்றதில்லை. முறையான தொழிற்சங்கம் இல்லாத நிலையிலும், தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தின் தொழிலாளர் எழுச்சியால் உத்வேகம் பெற்ற 5,600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் தன்னிச்சையாக அணிதிரண்டு இப்போராட்டத்தை நடத்தினர்.

12 ஆண்டுகால ஊதியத் தேக்கமும் அற்ப உயர்வு ஏமாற்றும்

பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியக் கட்டமைப்பு என்பது முறையே தகுதியற்ற தொழிலாளர்களுக்கு ₹10,899 ஆகவும், பகுதி தகுதியுடையோருக்கு ₹11,679 ஆகவும், தகுதியுடை யோருக்கு ₹12,576 ஆகவும் உள்ளது. லூதியானா ஆடை மற்றும் நூல் உற்பத்தி மண்டலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித ஊதிய மாற்றமும் இன்றி உழைப்புச் சுரண்டல் நீடித்து வருகிறது.

இவ்வாலையில் தொழிலாளர்கள் 12 மணி நேரக் கடுமையான ஷிப்ட் வேலைக்கு மாதத்திற்கு வெறும் ₹11,000 முதல் ₹13,000 மட்டுமே பெற்று வந்தனர். இந்தச் சூழலில், தொழிலாளர்களின் கொந்தளிப்பை உணர்ந்த நிர்வாகம், அவர்களை ஏமாற்றும் நோக்கில் மாதத்திற்கு வெறும் ₹565-ஐ மட்டும் ஊதியமாக உயர்த்தியது. இந்த அற்ப உயர்வு தொழிலாளர்களின் வர்க்கக் கோபத்தை மேலும் தூண்டியது. இதனால் கொதித்தெழுந்த தொழிலாளர்கள், மாதக் குறைந்தபட்ச ஊதியத்தை ₹20,000 ஆக உயர்த்தக் கோரியும், சட்டப்படியான 8 மணி நேர வேலைநாளை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த ஏப்ரல் 28 அன்று அதிரடிப் போராட்டத்தில் குதித்தனர்.

ஜி.டி. சாலையை ஸ்தம்பிக்க வைத்த ‘சக்கா ஜாம்’

நோக்கிப் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜி.டி. நெடுஞ்சாலையை’ முற்றுகையிட்டுப் பிரம்மாண்ட ‘சக்கா ஜாம்’ போராட்டத்தை நடத்தினர். முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்ட உத்திகளைப் பிரதிபலித்த இப்போராட்டத்தில், சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிலாளர் அமைப்புகளும், முக்தி சங்கிராம் போன்ற சமூக ஊடகப் பக்கங்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கின.

நெடுஞ்சாலையில் அமர்ந்து முழக்கமிட்ட தொழிலாளர்கள் ஊடகங்களிடம் பேசுகையில்:

“நாங்கள் தினசரி 11 மணி நேரம் அசெம்பிளி லைன்களில் தேய்கிறோம். ஆனால், நிர்வாகம் எங்களுக்கு வெறும் ₹565 மட்டுமே பிச்சையாக உயர்த்தியுள்ளது. இந்த ஏமாற்று வேலை வேண்டாம். எங்களுக்கு முறையான 8 மணி நேர வேலை நாளும், தகுதியான ஊதிய உயர்வும் வேண்டும். அதுவரை இந்தச் சாலைகளை விட்டு நகர மாட்டோம்” என்று முழங்கினர்.

இப்போராட்டத்தின் மிக முக்கிய அம்சமாக, வழக்க மான நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் சாலை மறியலின் முன்வரிசையில் நின்று அதிரடி முழக்கங்களை எழுப்பிய வர்க்க ஒருமைப்பாடு பிராந்தியத்தையே உலுக்கியது.

வென்றெடுக்கப்பட்ட 15 சதவீத ஊதிய உயர்வும் வர்க்க வெற்றியும்

தொழிலாளர்களின் இந்த அதிரடி நெடுஞ்சாலை முற்றுகையால் லூதியானா பிராந்தியத்தின் போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. இதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் பஞ்சாப் மாநில அரசு உடனடியாகத் தலையிட்டது.

இதன் நேரடிப் பயனாக, கடந்த மே 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் பஞ்சாப் மாநிலத் தொழி லாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிரடியாக 15 சதவீதம் (15%) உயர்த்தப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வ மாக அறிவித்தது. இந்த மாநில அளவிலான ஊதிய உயர்வு கங்கா அக்ரோவூல்ஸ் ஆலையிலும் உடனடியாக அமல்படுத்தப்பட்டு, தொழிலாளர்களின் ஊதியக் கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. எத்தகைய அடக்குமுறைகள் இருந்தாலும், உழைக்கும் வர்க்கத்தின் கூட்டுப் போராட்டமும், விநியோக வழித்தட முடக்கமுமே உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரே ஆயுதம் என்பதை லூதியானா தொழிலாளர்களின் இந்த ‘சக்கா ஜாம்’ மீண்டும் நிரூபித்துள்ளது.

- தி லெப்ட் வியூஸ்