ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலகப் புனைவிலக்கியத்தின் உளவியல் நட்சத்திரம் - ரா. பெ.விஜயகுமார்
11 Jul 2026, 9:07 pm

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலகப் புனைவிலக்கியத்தின் உளவியல் நட்சத்திரம் - ரா. பெ.விஜயகுமார்

உலகப் புனைவிலக்கியத்திற்கு ரஷ்ய எழுத்தாளர்கள் லியோ டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, அண்டன் செக்காவ், கோகால், மக்சிம் கார்க்கி, ஜிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றோர் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். உலகின் முதல் பத்து சிறந்த நாவல்களின் பட்டியலை எந்தவொரு இலக்கிய விமர்சகர் தேர்ந்தெடுத்தாலும் அதில் கட்டாயம் இடம்பெறும் நாவலாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ இருக்கும். குற்றமும் தண்டனையும் (1866), கரமசோவ் சகோதரர்கள் (1880), அசடன் (1869), ‘நிலவறைக் குறிப்புகள்’ (1864) போன்ற மிகச் சிறந்த நாவல்களை வழங்கியுள்ள தஸ்தயெவ்ஸ்கி, புனைவிலக்கிய உலகில் நட்சத்திரமென மின்னுகிறார்.

துயரம் தோய்ந்த வாழ்வும் தத்துவமும்

1821-இல் மாஸ்கோவில் பிறந்த தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வு கடுந்துயரங்களுக்குள்ளானது. ஜார் மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்தார் என்று கைதாகி மரண தண்டனைக்குள்ளான அவர், சாவின் விளிம்பிலிருந்து தப்பினார். கடைசி நொடியில் மரண தண்டனை, சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டு சைபீரியாவில் கொடுஞ்சிறையில் நான்காண்டுகளையும், கட்டாய ராணுவ சேவையில் ஆறாண்டுகளையும் கழித்தார். சிறைவாழ்வில் தொற்றிக்கொண்ட வலிப்பு நோய் வாழ்நாள் முழுவதும் வதைத்தது. சூதாட்டத்தின் பிடியில் சிக்கி, வருமானங்களை இழந்து வறுமையில் உழன்றார். இவ்வளவு தடைகளையும் மீறி சிறந்த எழுத்தாளராகப் பரிணமித்தார் என்பது மனித வாழ்வின் விநோதங்களில் ஒன்று. ஐரோப்பிய இலக்கியங்கள், தத்துவங்கள் அனைத்தையும் கற்றறிந்த அவரிடம் பிரான்சு நாட்டு சோசலிச சிந்தனையாளர்களான புரூதான், செயின்ட் சைமன், ஃபூரியர் ஆகியோரின் தாக்கம் அதிகம் இருந்தது. தான் பெரிதும் மதித்த ரஷ்ய எழுத்தாளர் பெலின்ஸ்கியின் நாத்திகக் கோட்பாடு, ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறித்துவக் கோட்பாடு இவ்விரு எதிர்மறைக் கோட்பாடுகள் ஏற்படுத்திய குழப்பம் அவரிடம் நீண்ட நாட்கள் நிலைத்திருந்தது. மகத்தான படைப்புகள் தஸ்தயெவ்ஸ்கியின் ஆகச் சிறந்த படைப்பாக (Magnum Opus) ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் போற்றப்படுகிறது. குற்றம், தண்டனை எனும் இரு வினைகளுக்குப் பின்னுள்ள சமூகவியல், குற்றவியல், உளவியல் சிந்தனைகளைப் புனைவிலக்கியத்தில் வெற்றிகரமாக வடித்துள்ளார். பீட்டர்ஸ்பர்க் நகரில் வறுமையிலும் விரக்தியிலும் வாடும் சட்டக் கல்லூரி மாணவன் ரஸ்கோல்னிகோவ் மனதிலும் இத்தகு தத்துவார்த்தப் போராட்டம் நிகழ்வதைக் காண்கிறோம். நாவலின் இறுதியில் சைபீரியாவின் சிறைக் கொட்டடியில் கொலைக் குற்றத்திற்காக எட்டாண்டுகள் தண்டனை அனுபவிக்கும் ரஸ்கோல்னிகோவைச் சந்திப்பதுடன் நாவல் முற்றுப்பெறுகிறது. எட்டாண்டுகள் கழித்து அவன் விடுதலை பெற்றதும் தம்பதிகளாக வாழ்ந்திடுவோம் என்ற நம்பிக்கையுடன் சிறைக்கு வெளியே அவன் காதலி சோஃபியா காத்திருக்கிறாள். அவரது கடைசி நாவலான ‘கரமசோவ் சகோதரர்கள்’, உணர்ச்சிமயமானதும், தத்துவார்த்தமானதுமாகும். 55 வயதான தந்தை ஃபியோதர் கரமசோவா கொலை செய்யப்படுவதில் தொடங்கும் இந்நாவல், தந்தை-மகன்களுக்கு இடையிலான உறவில் இருக்கும் நெருக்கடிகளைச் சித்தரிக்கிறது. தான் செய்த கொலையை ஒப்புக்கொள்ளும் ஸ்மர்டியாக்கோவ், தந்தை மகனாக ஏற்றுக்கொள்ள மறுத்தவன் என்பது நாவலின் முக்கியத் திருப்பம். குற்றம், உண்மை, ஆதாரத்தின் அடிப்படையிலான நீதி பரிபாலனம் குறித்த விவாதங்களால் இந்நாவல் நிறைந்துள்ளது. ‘நிலவறைக் குறிப்புகள்’ இருத்தலியல் தத்துவம் குறித்துப் பேசும் முதல் நாவலாகப் போற்றப்படுகிறது. சமூகத்திலிருந்து விலகி நிலவறைக்குள் வாழும் ஓர் அரசு ஊழியன், தன் வாழ்வின் விரக்தியையும் கசப்பையும் தன்னிலை மொழியில் விவரிக்கிறான். வாலிப வயதில் லிசா என்ற விலைமாது இவனை நேர்மையுடன் காதலித்தும், இவனுடைய கர்வம் அவள் காட்டிய அன்பையும் ஏற்க மறுத்தது. ஜன சமுத்திரத்திலிருந்து அந்நியப்பட்டு, உளவியல் சார்ந்த பிரச்சனைகளுடன் வாழும் இவனைப் போன்ற மனிதர்களை அன்றாடம் சந்திக்கத்தானே செய்கிறோம்! அன்பும் கருணையுள்ளமும் கொண்ட மிஷ்கின் என்ற இளைஞனை இந்த உலகம் ‘அசடன்’ என்று அழைப்பதை ‘தி இடியட்’ (அசடன்) நாவல் விவரிக்கிறது. உண்மை, அன்பு, பொய், வெறுப்பு இவற்றிற்கிடையிலான முரண்களால் நிரம்பிய இவ்வுலகில், அன்பே வடிவமானவர்கள் வாழ்வது சிரமம் என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. பேரா. எம்.ஏ. சுசீலா இதனைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அவரது ‘வெள்ளை இரவுகள்’ எனும் குறுநாவல், ‘டீரமர்’ என்ற கனவுலக மனிதனுக்கும் நஸ்டென்கா என்ற பெண்ணுக்கும் இடையே மலரும் நிறைவேறாக் காதலைப் பேசும் அழகான காதல் ஓவியமாகும்.

விமர்சனங்களும் கலை அமைதியும்

“தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்களில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உலவுகிறார்கள்” என்று இலக்கிய விமர்சகர் விளாடிமிர் நபக்கோவ் சொல்கிறார். தஸ்தயெவ்ஸ்கி தத்துவ விசாரணைகளிலும், தான் வாழ்ந்த காலத்தில் மேலோங்கியிருந்த கிறித்தவப் பிரிவுகளின் வேறுபாடுகள் பற்றிய சிந்தனைகளிலும் அளவுக்கு மீறி மூழ்கிவிடுவதால் புனைவிலக்கிய அழகியல் தொலைந்து போகிறது என்று வாதிடுவோரும் உண்டு. இருப்பினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக, அரசியல், கலாச்சாரச் சூழலை உளவியல் அடிப்படையில் உற்று நோக்கி, அதனைச் சொற்சித்திரங்களாக்கிய தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துலக ஆளுமை என்றும் தனித்துவமானது.