'எனர்ஜி டிரிங்க்ஸ்’ என ஏமாற்றி விற்பனை: பெப்சிகோ, மான்ஸ்டர் நிறுவனங்கள் மீது FSSAI பரபரப்பு குற்றச்சாட்டு!
5 hours before
<p>அதிக அளவு காஃபின் கொண்ட பானங்களை எனர்ஜி டிரிங்க் என்ற பெயரில் நுகர்வோரை ஏமாற்றிச் சந்தைப்படுத்துவதாக பெப்சிகோ மற்றும் மான்ஸ்டர் பேவரேஜ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் மீது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. </p><p> இந்தியாவில் எனர்ஜி டிரிங்க் என்ற தனி வகைப் பொருட்களுக்கு எவ்வித அதிகாரப்பூர்வ தரநிலைகளும் வகுக்கப்படவில்லை. எனினும், பெப்சிகோ நிறுவனத்தின் Sting Energy மற்றும் Adrenaline Rush உள்ளிட்ட பானங்கள் காஃபின் கலந்த பானங்களுக்கான விதிகளுக்குக் கீழ் வர வேண்டியவை என்பதை அறிந்தும், நுகர்வோரைத் திசைதிருப்பும் நோக்கில் எனர்ஜி டிரிங்க் எனக் கூறி விற்பனை செய்யப்படுவதாக FSSAI தனது 57 பக்க வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>மேலும், உடலையும் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்யும் போன்ற விளம்பரக் கூற்றுகள் நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாகவும், இவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, காஃபின் மற்றும் Taurine போன்ற வேதிப்பொருட்கள் பொதுமக்களுக்கும், முக்கியமாகச் சிறுவர்களுக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எனர்ஜி என்ற சொல்லைக் கொண்ட லேபிள்கள் மற்றும் விளம்பரங்களை 90 நாட்களுக்குள் திரும்பப் பெற FSSAI உத்தரவிட்டிருந்தது. </p><p>இதை எதிர்த்து பெப்சிகோ, மான்ஸ்டர், ரெட் புல் மற்றும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ஆகிய நிறுவனங்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், நிறுவனங்கள் தங்கள் பழைய லேபிள் கொண்ட இருப்புகளை விற்பனை செய்ய அனுமதி அளித்த போதிலும், புதிய உற்பத்திப் பொருட்களுக்கு எனர்ஜி டிரிங்க் என்ற லேபிளைப் பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது</p>
